மறக்கப்பட்ட பேரறிஞர்! (3/12/2019)

1887- ஆம் ஆண்டில் அவரது 300 - வது பிறந்த நாள் விழாவில், டாக்டர் கொன்ராடு ப்ரீடுலாண்டர் (Dr.Konrad Friedlander) என்பவர் ஓர் அறிக்கையைப் படித்தார்.
மறக்கப்பட்ட பேரறிஞர்! (3/12/2019)

சென்ற இதழ் தொடர்ச்சி...
1887- ஆம் ஆண்டில் அவரது 300 - வது பிறந்த நாள் விழாவில், டாக்டர் கொன்ராடு ப்ரீடுலாண்டர் (Dr.Konrad Friedlander) என்பவர் ஓர் அறிக்கையைப் படித்தார். அதில் " அவரது விருப்பத்திற்கேற்ப அறிவியற் பணியின் முன்னேற்றத்துக்காக 500 உதவிச் சம்பளங்கள் கொடுக்கப்பட்டன. இந்த உதவிச் சம்பளம் பெற்றவர்கள் பட்டியலில் புகழ்பெற்ற பல அறிஞர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார். 1928 - இல் ஆம்பர்க் பல்கலைக்கழகத்தைச் (University of Hamburg) சேர்ந்த பேராசிரியர் மையர் எபிச் (Prof: Meyer-Abic) என்பவர், வெளியிடப்படாத அவரது கையெழுத்துப் படிகளைக் கண்டுபிடிப்பதற்காக "ஜஞ்சியஸ் குழு’ (Jungius Kommission) என்ற குழுவை ஏற்படுத்தினார். அதன் காரணமாக, அதற்கு அடுத்த ஆண்டிலேயே "பெயிட்ரேச் சர் ஜஞ்சியசு - ஃபோர்சங்' (Beittrage zur Jungius - Forschung) என்ற ஒரு நூலை அவது நினைவு விழா மலராகப் பேராசிரியர் வெளியிட்டார். முடிவாக, 1947 - இல் ஜோயச்சிம் ஜஞ்சியசு கெசல்சாப்ட் (Joachim Jungius Gesellschaft) என்ற ஓர் அறிவியற் கழகத்தைத் துவக்கினார். அந்த அறிவியற்கழகத்தின் நோக்கம், " எல்லா அறிவியற்துறைகளிலும் ஆராய்ச்சியை முன்னேறச் செய்வதும், அறிவியற் பணியின் வாய்ப்பினை விரிவுபடுத்துவதுமே'யாகும்.
1957 - ஆம் ஆண்டில் அவரது நான்காவது இறந்தநாள் நூற்றாண்டு விழாவில் மேலும் பல செய்திகள் வெளிவந்தன. இயற்கை (Nature) என்ற அறிவியல் இதழின் ஒரு கட்டுரையில் டாக்டர் ஜே.எச்.எஸ். கிரீன் (Dr.J.H.S.Green) என்பவர் அவரது நினைவைக் குறித்து ஒரு பாராட்டுரை வழங்கினார். பின்னர், 1957 - ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 31 - ஆம் நாள் ஜோயச்சிம் ஜஞ்சியசு கெசல்சாப்ட் (Jungius Gesellschaft) அறிவியற் கழகம் ஆம்பர்க்கில் கூடியது. அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் கர்ட் கெயின்சு (Prof.Kurt Hryns) என்பவர் ஜோயச்சிம் ஜஞ்சியசு பரிசு ஒன்றையும் சுவிட்சர்லாந்திலுள்ள சூரிச்சைச் சேர்ந்த பேராசிரியர் ருடால்ப் மையர் (Prof.Rudolf Meyer) என்பவருக்கு முதன் முதலாகக் கொடுத்தார். பேராசிரியர் ருடால்ப் அவருடைய நூல்களில் பற்றும் ஆர்வமும் உள்ள மாணவர். சில ஆண்டுகளுக்கு முன் "லாசிகா ஆம்பர் கென்சிசு' (Logica Hamburgensis) என்ற அவரது நூலை திருத்தி வெளியிட்டார். பின்னர் பேராசிரியர் மையர், "ஜோயச்சிம் ஜஞ்சியசும் அவரது காலத்துத் தத்துவமும்' (Joachim Jungius and the Philosophy) என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றினார். இந்தச் சொற்பொழிவும் இதோடு மற்ற பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகளும் தலைவரின் முன்னுரைக் குறிப்புகளுடன் அறிவியல் வளர்ச்சி (Die Entfaltung der Wissenschoft) என்ற தலைப்புடன் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. அறிவியல்துறையில் பற்றுள்ள அறிவியல் வல்லுநர் பயனும் இன்பமுங் கருதி படிக்க வேண்டியதொரு நூலாகும்.
இந்த நூலில் பேராசிரியர் கட்ர் லோகல் (Prof. Kurt Vogel) "பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியின் கணிதம்' (Mathematics in the early years of the seventeeth centuary) என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். நெதர்லாண்டிலுள்ள ஆம்சுடெர்டாமைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். கூ காஸ் (Prof. R.Hoog Kass) என்பவர், தனிமங்கள் (elements), அணுக்கள் (atoms) இவற்றைப் பற்றி அந்தக் காலத்திய அறிவினைக் கூறும் கட்டுரையில் அவர் எப்படி பழைய தத்துவங்களை எதிர்த்து, அணுக்கொள்கையை (atomic theory) வெற்றி கொண்டார் என்பதைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார். இயைபியல் மாற்றங்களாக (Chemical changes) இருந்தாலும் அணுக்கள் எப்படித் தங்களுடைய தனித்தன்மையோடு விளங்குகின்றன என்பதை அவர் எடுத்துக் கூறும் முறையினை இவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இறுதியில் " ஒரு கூட்டத்தினர் அறிவியலுக்குச் செய்யும் தொண்டினை விட, ஒரு தனிமனிதன் மிகுதியான பணியினைச் செய்ய முடியும்'' என்ற சிறந்த கருத்துரையுடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறார். செடி நூல் வரலாற்றில் (History of Botony) அவருக்கிருந்த முக்கியமான இடத்தைப் பேராசிரியர் வால்த்தர் மெவியசு (Prof. Walther Mevius) என்பவர் எடுத்துக் காட்டுகிறார். செடி நூலுக்கு அவர் செய்த பணியே அவருடைய மிகப் பெரிய சாதனையாகும் என்ற அந்தப் பேராசிரியர் கூறுகிறார். அறிவியல் அடிப்படையில் செடிநூலை (Scientific Botony) நிறுவியவர்களில் அவரும் ஒருவர். பல்வேறு செடிகளுக்கு அவர் சூட்டிய பெயர்களே பிற்காலத்தில் ரே (Ray), லின்னேயசு (Linnaeus) போன்றவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டன. செடிகளை வகைப்படுத்தி அவற்றின் பல பாகங்களின் அமைப்பிற்கேற்ப முதன்முதலில் பிரித்து வைத்தவர் அவரே. தற்காலத்தில் செடிகளுக்கு வழங்கும் பல பெயர்களும் அவர் இட்டனவேயாம். மேலும் சார்லசு சிங்கர் (Charles Singer) என்பவர் தன்னுடைய "உயிர்நூலின் வரலாறு' (Short History of Biology) என்ற நூலில், "செடிகளை வகைப்படுத்திப் பிரிப்பதிலும், அவற்றின் பூக்களின் அமைப்பிற்கேற்ப அவைகளை ஒன்று சேர்த்தலிலும், பின்னர் அந்தச் செடிகளுக்கு கம்போசிடா (compositae), லேபியாடா (Labiatae), லெகுமினோசா (Leguminosa) என்று பெயர் வைப்பதிலும் அவர் உண்மையான நுண்ணறிவைப் பெற்றிருந்தார்' என்று குறிப்பிடுகிறார். இந்தப் பெயர்கள் இன்றும் நிலைத்திருப்பது அவருடைய நுண்ணறிவிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
இதுபோல், அவருடைய ஆழ்ந்த சிந்தனைக்கும், பரந்த அனுபவத்திற்கும், சிறந்த நுண்ணறிவிற்கும் எடுத்துக்காட்டுகளாகப் பல கட்டுரைகள் அந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன. இறுதியில் இவை எல்லாவற்றிற்கும் பின்னணி வண்ணமாகப் பேராசிரியர் ஆட்டோ புரூனர் (Prof. Otto Brunner) எழுதிய " ஆம்பர்க்கின் வரலாற்றுநிலை' (Hambutg's Historical Position) என்ற கட்டுரை திகழ்கிறது. பல படங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையில் அவர் வாழ்ந்த காலத்தில் ஆம்பர்க்கின் நிலை என்ன என்பது பற்றி மிகவும் தெளிவான முறையில் பேராசிரியர் விளக்குகிறார். "பொதுவாக, அறிவியல் வரலாறு எழுதும் ஆசிரியர்கள் முக்கியமாக இந்தச் சமூக வரலாற்றை எழுதாமல் விட்டு விடுகிறார்கள். இதுபோல் மறந்துபோன ஓர் அறிஞரின் பணிகளைத் தொகுத்து வெளியிட்டும், பாராட்டிப் போற்றியும் அவருக்கு உரிய இடத்தை அளிக்கும் அவரது கழகத்தவர்கள் எல்லோருடைய பாராட்டுதலுக்கும் உரியவராவார். இவ்வாறு வாழ்ந்த காலத்தில் மறைக்கப்பட்டு மறைந்த காலத்தில் மறக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று அறிவியல் உலகில் உலாவுபவரும் அவரே'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com