வெற்றி பெறுங்கள்...வெப் டிசைனராக!

இணையம் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது
வெற்றி பெறுங்கள்...வெப் டிசைனராக!

இணையம் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது. இருப்பிடம், உணவு, போக்குவரத்து என அனைத்தையும் அமர்ந்த இடத்தில் இருந்தே ஏற்பாடு செய்யும் நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அனைத்தையும் நாம் செயலி மூலமாகவோ அல்லது வலைதளம் மூலமாகவோ நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தினந்தோறும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு வலைதளத்தின் உள்ளே சென்று நமக்கு தேவையான தகவல்களை நாம் பார்ப்போம். அவ்வாறிருக்க அந்த வலைதளங்களை உருவாக்கும் படிப்புக்கும், வலைதள வடிவமைப்பாளர் பணிக்கும் என்றுமே தேவை உள்ளது.
 பல மாணவர்கள் பாடத்திட்டத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும், பள்ளிகளில் நடைபெறும் திறன் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களாக இருப்பர். அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும் பொதுவான போட்டி வரைதல். தங்களது எண்ண ஓட்டங்களை மாணவர்கள் வரைந்து காண்பிப்பர். அங்கே ஒருவரது சிந்திக்கும் திறனும், கற்பனைத் திறனும் வெளிப்படுகிறது. வலைதளம் உருவாக்குவதற்கும் இந்த சிந்திக்கும் திறனே தேவைப்படுகிறது. புதிது புதிதாக எண்ணங்களை இந்தத் துறையில் நாம் செயல்படுத்தலாம்.
 கற்பனைத் திறன் அதிகம் உள்ள மாணவர்கள் இந்தத் துறையை தேர்வு செய்து வாழ்க்கையில் சாதனையாளர்களாக மாறலாம். அனைவரும் பயன்படுத்தும் முகநூல் மற்றும் ஜிமெயில் ஆகியவற்றின் வலைதளங்கள் அனைவரையும் கவர்ந்தவை.
 நீல நிற வண்ணமுடைய வலைதளத்தை நாம் பார்வையிட்டு கொண்டிருந்தால் அது முகநூல்தான் என்றும், சிவப்பு நிறம் பொருந்திய வலைதளத்தை பார்வையிட்டால் அது ஜிமெயில்தான் என்றும் தூரத்தில் இருந்தே ஒருவர் கூறும் அளவுக்கு அந்த வலைதளங்களின் வடிவமைப்பு பிரபலமடைந்துள்ளது.
 இத்தகைய தனித்துவத்துடன் கூடிய வலைதளத்தை உருவாக்கினால் சிறந்த வெப் டிசைனராக (வலைதள வடிவமைப்பாளர்) அனைவராலும் அறியப்படுவோம். இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் முதல் பெரும்பாலான கல்லூரிகளில் வெப் டிசைனிங், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பாக உள்ளது. இந்த பட்டப்படிப்பை பயிலாமலும் ஒருவர் வெப் டிசைனராக உருவாக முடியும்.
 வெப் டிசைனிங் படிப்பை இணையத்தின் மூலமாகக் கூட எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எனினும், அதற்கான பட்டப்படிப்பு சான்றிதழைப் பெற்றிருக்கும் பட்சத்தில் தலைசிறந்த நிறுவனங்
 களின் வெப் டிசைனராக பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. வெப் டிசைனிங் படிப்பை எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்பதால் அந்தத் துறையில் அனைவராலும் புகழ்பெற்று விட முடியாது. அதனால் மற்ற வெப் டிசைனர்களில் இருந்து நாம் தனித்துவமாய் விளங்க..
 புத்தாக்க சிந்தனைகள்
 மற்ற வலைதள வடிவமைப்பாளர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்தி காட்ட, பல புதிய முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த இரு வண்ணங்களைக் கலந்து கொடுத்தால் வலைதளம் வண்ணமயமாக இருக்கும்; ஒரு தலைப்பில் ஒவ்வொரு எழுத்துக்கும் தனி அளவு மற்றும் வடிவம் என கொடுத்தால் வித்தியாசமாக இருக்கும் என்று ஒவ்வொரு நாளும் வலைதளத்தில் புதிய சிந்தனைகளைப் புகுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
 மென்பொருள் அறிவு
 வடிவமைப்புத் துறையில் பல பிரிவுகள் உள்ளன. வலைதளம் வடிவமைப்பதற்கு அதுசார்ந்த மென்பொருள்கள் பற்றிய அறிவும் நமக்கும் தேவை. வலைதளத்தை வடிவமைக்க மட்டும் தெரிந்திருப்பதை விட அதற்கான "ஹெச்டிஎம்எல்' புரோகிராம் எழுதும் திறனையும் நாம் கூடுதலாக கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் மென்பொருள் பொறியாளர் இல்லையென்றாலும் ஒரு வலைதளத்தை நாமே முழுமையாக வடிவமைத்து தர இயலும்.
 வடிவமைப்பு தத்துவங்கள்
 ஒரு வலைதளத்தை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படைத் தத்துவங்களை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வண்ணம், அளவு, எழுத்துகளின் தோற்றம் என்ற ஒவ்வொன்றையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விஷயங்களை அனைத்து வடிவமைப்பாளர்களும் கற்றிருக்க வேண்டும்.
 ஒத்துழைப்பு
 ஒரு வலைதளத்தை உருவாக்க வடிவமைப்பாளர் மட்டும் போதுமா என்று கேட்டால் இல்லையென்றே சொல்லலாம். அந்த வலைதளத்தில் தகவல்களை எழுதுபவர், அந்த வலைதளத்துக்குத் தேவையான புரோகிராமை எழுதும் மென்பொருள் பொறியாளர் ஆகியோருடன் இணைந்து டிசைனர் பணியாற்ற வேண்டும்.
 அப்போது நமது விருப்பத்துக்கு நம்மால் ஒரு டிசைனை உருவாக்க முடியாமல் கூட போகலாம். அதை நமது சக பணியாளர்களிடம் பொறுமையாக எடுத்துரைத்து இவ்வாறு டிசைன் கொடுத்தால் பயனர்களைக் கவர முடியும் என்று நமது எண்ணங்களில் உள்ள பலனை எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.
 நேரம் தவறாமை
 ஒரு குறிப்பிட்ட பணியை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டியது மிக மிக முக்கியம். வலைதள வடிவமைப்பாளர்களிடம் ஒரே இரவில் எனக்கு இந்த பணியை முடித்து தர வேண்டும் என நிறுவனங்கள் கோரலாம். அப்போது அதை சரியான நேரத்தில் முடித்து தருவதும் ஒரு கலை. அத்தகைய வெப் டிசைனர்களை அனைத்து நிறுவனங்களும் பணியமர்த்திக் கொள்ள விரும்புவார்கள்.
 வாடிக்கையாளரின் நண்பன்
 நாம் எந்த நிறுவனத்துக்காக பணியாற்றினாலும், இறுதியில் நமது வலைதளத்தைப் பார்வையிடுவது நம்மை போன்ற மக்கள்தான். அந்த வலைதளத்தை அவர்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக எந்தப் பக்கத்தைக் கிளிக் செய்தால் என்ன தெரியும் என்பது உள்ளிட்ட தகவல்களுடன் வலைதளத்தை வடிவமைக்க வேண்டியது அவசியம். இந்த வலைதளத்துக்குள் சென்றால் எதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற கவலை வேண்டாம் என்ற எண்ணம் பயனாளர்களிடையே தோன்ற வேண்டும். அதுவே ஒரு வலைதள வடி
 வமைப்பாளரின் உண்மையான வெற்றி.
 -க. நந்தினி ரவிச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com