சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 75

வைல்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Wildlife Institute of India) என்ற கல்வி நிறுவனத்தில் பயிற்றுவிக்கக் கூடிய ஆசிரியர்கள் பல்வேறு துறைகளில் இருந்து வந்தவர்கள்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 75

வைல்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Wildlife Institute of India) என்ற கல்வி நிறுவனத்தில் பயிற்றுவிக்கக் கூடிய ஆசிரியர்கள் பல்வேறு துறைகளில் இருந்து வந்தவர்கள். உதாரணமாக மீன் சூழலியல் (FISH ECOLOGY) துறை, தாவரங்களை வகைப்படுத்தி முறைப்படுத்துதல் (PLANT TAXONAMY) துறை மற்றும் கடல் மட்டத்தில் இருந்து மிக அதிக உயரத்தில் உள்ள தாவரங்களைப் பற்றிய தாவரச் சூழலியல் துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய பல்வேறு துறையினருடன் இணைந்து இங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். 
வனப்பகுதிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், குளங்கள் என பல்வேறு உயரங்களில் நில அமைப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள உயிரினங்கள் இந்நிலத்தின் தன்மைக்கேற்ப ஏற்ப தங்களை மாற்றி அமைத்து வாழ்ந்து வருகின்றன. இதில் மனிதனும், வன உயிரினங்களுக்கும் பொதுவான தன்மை உள்ள சூழல்களும், கட்டமைப்புகளும் உள்ளன. அவை எவ்வாறு அமைந்துள்ளன, அவற்றை இருவருக்கும் ஆபத்தில்லாத சூழலாக எவ்வாறு மாற்றி அமைப்பது, மாறி வரும் தட்பவெப்ப சூழலில் முன்னறிவிப்பில்லாத வெள்ளங்கள், பனிப்பொழிவுகள் ஆகியவற்றிலிருந்து மனிதர்களையும், வன உயிரினங்களையும் எவ்வாறு பாதுகாப்பது, அதற்கான நிலக் கட்டமைப்புகளை இயற்கையோடு இயைந்து எவ்வாறு மாற்றி அமைப்பது என்பன போன்றவற்றை Landscape Level Planning and Management என்ற துறையின் கீழ் மாணவர்கள் பயில்கிறார்கள். அது தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். 
அடுத்து Protected Area Network, Wildlife Management and Conservation Education என்ற துறையின் கீழ் இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை எவ்வாறு தொடர்ந்து பாதுகாப்பது என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். உதாரணமாக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவை பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. அந்த அந்த இடத்தின் உள்ள தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப அவற்றைப் பாதுகாப்பது பற்றிய மேலாண்மைக் கல்வி இங்கு கற்றுத் தரப்படுகிறது. இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். வனப்பகுதியில் வாழும் மக்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் வனங்களை முறையாகப் பாதுகாப்பதைப் பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். பாதுகாப்பதற்கான முறைகளைச் சொல்லித் தருகிறார்கள். இந்தியா போன்ற பெரிய பரப்பளவு உள்ள நாட்டில் இந்தப் பணிக்காக நிறைய மனித வளம் தேவைப்படுகிறது. 
அடுத்ததாக Population Management, Capture and Rehabilitation என்ற துறையின் கீழ் தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் வாயிலாக, வன வாழ் உயிரினங்களுக்கிடையே ஏற்படக் கூடிய முரண்பாடுகளை, மோதல்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று ஆராயப்படுகிறது. அரிய வகை உயிரினங்கள் காயப்படுத்தப்பட்டாலோ, எங்காவது சிக்கிக் கொண்டாலோ அவற்றைப் பாதுகாப்பது பற்றி சொல்லித் தரப்படுறது. ஊனமுற்ற விலங்குகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எவ்வாறு எடுத்துச் செல்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த கல்விநிறுவனத்தின் பேராசிரியர்கள் சிறுத்தைகள், காட்டுப்பன்றி, இமாலயன் பழுப்பு நிறக் கரடி உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு உதவுகிறார்கள். மனிதன் மற்றும் வனவிலங்குகளுக்கிடையிலான முரண்பாடுகள், மோதல்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து அவை நடைபெறாமல் இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
Wildlife Health Management என்ற துறையின் கீழ் வன விலங்குகளின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பயிற்றுவிக்கப்படுகிறது. குறிப்பாக கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் வனவிலங்குகளுக்கான பாதுகாக்கப்பட்ட இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு காட்டு விலங்குகளுக்குக் காயம் ஏற்பட்டால் அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இண்டியன் வெட்டினரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், இண்டியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சர் ரிசர்ச் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். 
இண்டியன் வைல்ட் லைஃப் ஹெல்த் கோ - ஆபரேட்டிவ் என்பது இத்துறையின் கீழ் 1994 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆனந்த், கவுகாத்தி, ஜபல்பூர், சென்னை, ஹிஸ்ஸார் ஆகிய ஐந்து இடங்களில் கால்நடை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இவர்கள் வனத்தில் வாழும் உயிரினங்களுக்கு எண்ணற்ற மருத்துவங்களை அளித்து வருகிறார்கள். குறிப்பாக யானைகளுக்கு மதம் பிடிக்கும்போதோ அல்லது புலிகள் அல்லது சிறுத்தைகள் அவர்களுடைய இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து மக்கள் வாழும் பகுதிகளுக்கு வரும்போதோ அவற்றை எவ்வாறு கையாள்வது என்பன போன்ற பயிற்சிகளை வன இலாகா அதிகாரிகளுக்கு வழங்குகிறார்கள். 
இங்கு இரண்டாண்டு பட்டப் படிப்புகளும் பத்து மாதம் முதுநிலைப் பட்டயப் படிப்புகளும் மூன்று மாத சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை தவிர எண்ணற்ற குறுகிய கால பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன. 
இங்கு வழங்கப்படும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் முக்கியமானதாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று மாஸ்டர்ஸ் இன்வைல்ட் லைஃப் சயின்ஸ். இது 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன்முதலாக இவர்கள் 1986 -ஆம் ஆண்டு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து வன வாழ் உயிரினங்களைப் பற்றி பயிற்றுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தினார்கள். அதன் விளைவாக இந்தப் படிப்பு தொடங்கப்பட்டது. 
இங்கு சொல்லித் தரப்படும் பாடத்திட்டங்களை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு பரிசீலனை செய்து, மாறி வரும் சூழலுக்கேற்ற தேவைகளை அறிந்து, பாடத்திட்டங்களில் மாறுதல் செய்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார்கள். இங்கு நேபாளம், ஸ்ரீ லங்கா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்தும் வந்து மாணவர்கள் பயில்கிறார்கள்.
இங்கு நடத்தப்படும் இரண்டாண்டு முதுநிலைப் பட்டப்படிப்பு 50 சதவீதம் தியரிட்டிகலாகவும், 50 சதவீதம் நேரடி நடைமுறைப் பயிற்சிகளின் வாயிலாகவும் நடத்தப்படுகிறது. வனப்பகுதிகளுக்குச் சென்று பேராசிரியர்களின் மேற்பார்வையில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் பட்டப்படிப்புக்கான பட்டங்கள் குஜராத்தின் ராஜ்கோட்டிலுள்ள செளராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. டேராடூனில் படித்தாலும் குஜராத்தில்தான் பட்டம் வழங்கப்படுகிறது. 
2014, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இங்கு படித்து முடித்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றி விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்தியா மற்றும் பங்களாதேஷ் பகுதியில் அமைந்துள்ள சுந்தரவனக் காடுகளில் சதுப்புநிலங்களில் உள்ள வெள்ளைப் புலிகளைப் பற்றியும் அறிக்கை அளித்துள்ளார்கள். சிங்கங்களுக்கும் அடையாள அட்டையை உருவாக்கி இருக்கிறார்கள். இணையதளத்தின் வாயிலாக அவற்றின் நடவடிக்கைகளைப் பார்வையிட்டு பாதுகாத்து வருகிறார்கள். 
இந்த வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் கேமராக்களைப் பொருத்தி அங்கு வாழும் அரியவகை விலங்கினங்களின் இயற்கையான வாழ்க்கையைப் புகைப்
படம் எடுத்து அதை ஆவணப்படுத்தி வருகிறார்கள். "லயன் சாஃப்ட்வேர்' என்று சொல்லக் கூடிய மென்பொருள் வாயிலாக ஒவ்வொரு சிங்கத்தையும் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தி அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள். 
"இ கவர்ன்மென்ட் பிளான்' என்பதன் மூலம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இவை தவிர, எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும், தொழில்முறைக் குழுக்களும், முனைவர் பட்ட மாணவர்களும் இவர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள். 
இன்னொரு முதுநிலைப்படிப்பு எம்எஸ்சி இன் ஹெரிட்டேஜ் அன்ட் கன்சர்வேஷன் என்பதாகும். யுனெஸ்கோ கேட்டகரி 2 - சென்டர் ஃபார் வேர்ல்டு நேச்சர் ஹெரிட்டேஜ் மேனேஜ்மென்ட் அன்ட் ட்ரெயினிங் (unesco category 2  Centre on World Natural Heritage Management and Training) என்பதுடன் இணைந்து உலகப் பாரம்பரியங்களைப் பற்றியும், அவற்றைப் பாதுகாப்பது பற்றியும், பல்லுயிர்களைப் பாதுகாப்பது பற்றியும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களைப் பாதுகாப்பது பற்றியும் , வனவாழ் பழங்குடியின மக்களைப் பாதுகாப்பது, அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பது பற்றியும் சொல்லித் தருகிறார்கள். வரலாற்றுப் புகழ்வாய்ந்த தலங்களை ஆராய்ந்து அவற்றை யுனெஸ்கோ ஹெரிட்டேஜ் சென்டராக அறிவிப்பது தொடர்பான பயிற்சிகளும், அவை தொடர்பான சட்டதிட்டங்களும் இங்கே பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் இந்த மாணவர்களுக்கு GIS&GPS பற்றி மிகவும் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. 
இது மட்டுமின்றி போட்டோகிராபி அண்ட் டிஜிட்டல் இமேஜ், ரிமோட் சென்சிங் போன்ற பல்வேறு துறைசார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு யுனெஸ்கோவிலும், அதனுடைய புராஜெக்ட்களிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. 
எந்த இளநிலைப் பட்டம் படித்தவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். 
அதிகபட்ச வயது வரம்பு 25. எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 30 உச்சபட்ச வயதாகும். இத்துறையில் ஏற்கெனவே பணியில் ஈடுபட்டு இருக்கும் 35 வயதுள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். இதைப் படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 5,32, 000 கல்விக்கட்டணம் ஆகும். தற்போது கல்வி உதவித் தொகை எதுவும் இல்லை. ஆனால் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு முழுமையாகவே, பகுதியாகவோ கல்வி உதவித் தொகை தன்னார்வ நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. 
இங்கு படிக்கக் கூடிய மாணவர்கள் பாரம்பரிய இடங்களைப் பாதுகாப்பது, அவற்றை ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்துவது ஆகிய வேலைகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com