தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசுப் பணி: என்ன செய்ய வேண்டும்?

"தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ரயில்வேயில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பிற மாநிலத்தவர்கள்தான் பணி அமர்த்தப்படுகிறார்கள்'
தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசுப் பணி: என்ன செய்ய வேண்டும்?

"தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ரயில்வேயில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பிற மாநிலத்தவர்கள்தான் பணி அமர்த்தப்படுகிறார்கள்' என்பன போன்ற கருத்துகள் கடந்த சில காலமாக இளைஞர்கள் மத்தியில் உலா வருகிறது. அப்படி என்றால் தமிழக இளைஞர்கள் மத்திய அரசுப் பணிகளில் ஜொலிக்க என்ன செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற பாராளுமன்ற தொலைத்தொடர்பு துறை செயலக இயக்குநர் என்.எம்.பெருமாளிடம் கேட்டோம். அவர் கூறியது:
"ரெயில்வே துறையில் மதுரை கோட்டத்தில் பல்வேறு வகையான கடைநிலை ஊழியர்களுக்கான தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 572 பேர்களில் 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக தமிழில் புலமை இல்லாதவர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற கருத்து அண்மைக் காலமாகவே இருந்து வருகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு மத்திய அரசிலும் அதைச் சார்ந்த நிறுவனங்களிலும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் வேலை பெற்ற நிலையை இருவகையாகப் பிரிக்கலாம். 90-களின் தொடக்கம் வரையில் உள்ள காலத்தை மிக உயர்நிலை (Zenith) எனக் குறிப்பிடலாம். அடுத்த 30 ஆண்டு காலத்தை மிகக் கீழ்நிலை (Nadir) எனக் குறிப்பிடலாம்.
1955-இல் தில்லியிலுள்ள மத்திய அரசு செயலகத்தில் உண்டான 800 உதவியாளர்கள் (வட்டாட்சியருக்கு இணையான பதவி) தேர்ந்தெடுக்கப்பட்டதில் சுமார் 550 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சுதந்திரமடைந்த முதல் 15 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் மற்றும் உயர்நிலை பதவிகளுக்கு தேர்வுகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்தினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. இதைப் பற்றி சுப்பிரமணியம் என்பவர் எழுதிய India's Administrators என்ற நூலில் தகவல்கள் உள்ளன. 
இக்கால கட்டங்களிலும் 80-களின் கடைசி வரையிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் மத்திய தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கணிசமான அளவில் வெற்றி பெற்றனர். தமிழக இளைஞர்கள் மத்திய அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறும் நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் வருந்தத்தக்கது. எல்லா மத்திய அரசு தேர்வுகளிலும் பின்னடைந்த போதிலும் 2010-களின் ஆரம்பத்தில் இந்திய குடிமைப்பணி தேர்விலும்,இந்திய வனத்துறை தேர்விலும் ஓரளவுக்கு நல்ல முறையில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். 
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்திய ஆட்சித்துறை தேர்விலும் மிகக்குறைந்த அளவே வெற்றி கிடைத்துள்ளது. 2017-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வின் முடிவுகள் 2018-ஆம் ஆண்டு மே மற்றும் ஜூனில் வெளிவந்தன. தமிழகத்திலிருந்து 42 பேர் மட்டுமே தேர்வு பெற்றார்கள். முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்ற 84 பேரை ஒப்பிடும் பொழுது இது எப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறைவாகும். 2018-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸஸ் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டின் முன் பகுதியில் வெளியிடப்பட்டன. 759 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழகத்திலிருந்து 36 பேர் தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். 
மத்திய தேர்வாணையம் (UPSC) மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நடக்கும் துறை சார்ந்த தேர்வுகளிலும் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவது மிகமிகக் குறைந்து விட்டது. 
இதற்கு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறலாம். ஐ.ஏ.எஸ் தவிர மற்ற மத்திய அரசு தேர்வுகளைப் பற்றிய விவரங்கள் பரந்த அளவில் இளைஞர்களுக்குத் தெரியாமை, பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தல், இளைஞர்கள் தொடர்ந்து செய்தித்தாள்களையோ, போட்டித் தேர்வுகளுக்குண்டான மாத இதழ்களையோ பள்ளி கல்லூரி நாட்களிலிருந்தே படிப்பதில் ஆர்வம் காட்டாமை போன்ற காரணங்களைக் கூறலாம். இருந்தாலும் மிகமிக முக்கிய காரணமாக இருப்பது தமிழக தேர்வாணைய தேர்வுகளுக்கும் மத்திய அரசு தேர்வுகளுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதுதான். 
மத்திய அரசு மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் ஆங்கிலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக மத்திய அரசு தேர்வுகளில் பொது அறிவு, ஆங்கிலம், கணக்கு மற்றும் (Quantitative Aptitude) புத்திக்கூர்மை (Intelligence) ஆகிய நான்கு பிரிவுகள் இருக்கும். 
வங்கித்தேர்வு போன்றவற்றில் இதனுடன் கணினி அறிவியலுக்கும், பொருளாதாரம், நடப்பு அல்லது கொள்கைகளுக்கும் மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.
பெரும்பாலும் எல்லா உயர்நிலைத்தேர்வுகளிலும், கீழ்நிலைத் தேர்வுகளிலும் ஆங்கிலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக இந்திய வனத்துறை முதன்மை தேர்வு, இந்திய பொருளாதார புள்ளியியல் சேவை தேர்வு (IES/ISS) மத்திய காவல் சேவை தேர்வு (CAPF) போன்ற உயர் நிலைத்தேர்வுகளில் ஆங்கிலம் ஒரு தனித்தாளாகவே இருக்கிறது. இதைத் தவிர மத்திய பணியாளர் தேர்வாணையம், வங்கித் தேர்வுகள், பல்வேறு துறைகளில் நடக்கும் கீழ்நிலைத் தேர்வுகளில் ஆங்கில மொழித்திறன், மொத்தத் தேர்வின் ஒரு பகுதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
ஓரிரண்டு எடுத்துக்காட்டுகளை கூறுவது நலமாக இருக்கும்: 
பணியாளர் தேர்வாணையம் (SSC)நடத்தும் பல்வேறு தேர்வுகளில் (10-ஆம் வகுப்பு நிலை, 12-ஆம் வகுப்பு நிலை, பட்டநிலை, குறுக்கெழுத்து தேர்வு போன்றவை) ஆங்கிலம் ஒரு பகுதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அநேக பிறதுறைகள் நடத்தும் தேர்வுகளிலும் மத்திய பொதுத்துறைகள் நடத்தும் அநேக தேர்வுகளிலும் ஆங்கிலம் ஒரு கட்டாய பாடமாக இருக்கிறது. பாதுகாப்புத்துறையில் துணிவெளுப்பவர், துப்புரவு தொழிலாளர், முடிதிருத்துவர், சமையல் செய்பவர் போன்ற ஊதிய நிலை 1-இல் உள்ள கீழ்நிலை வேலைகளுக்குக் கூட நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் ஒரு கட்டாயப் பகுதியாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு நிலையில் உள்ள போட்டித் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 150. அதில் புத்திக் கூர்மை 25, கணக்கு 25, பொது ஆங்கிலம் 50, பொது அறிவு 50,. கடலோரக் காவல் படையில் பட்டயப் படிப்பு அளவிலான யாந்திரிக் (YANTHRIK)) என்ற பதவிக்கு நடக்கும் தேர்வில் புத்திக் கூர்மை, கணிதம், ஆங்கிலம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு பகுதிகளில் தேர்வு நடக்கும். 

மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் பெருமளவு வெற்றி பெறும் வகையில் தமிழ்நாடு தேர்வாணைய பொதுத்தேர்வுகளின் கட்டமைப்பு இருந்தால் அது தமிழக இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும். 
இன்றைய நிலையில் தமிழக தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வின் அடிப்படைத்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. அதில் இரண்டு தாள்கள் உள்ளன. பொது அறிவு ஒரு பகுதியாக 100 கேள்விகளையும் 150 மதிப்பெண்களையும் கொண்டுள்ளது. மற்றொரு பகுதியாக பொதுத்தமிழும் பொது ஆங்கிலமும் உள்ளது. தேர்வர்கள் மொழிப் பகுதியில் இரண்டு மொழிகளில் ஏதாவது ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
தமிழும், ஆங்கிலமும் இருந்த போதும் பெரும்பான்மையான இளைஞர்கள் பொதுத் தமிழையே எடுக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு ஆங்கிலப் புலமைக் குறைவு காரணமாக மத்திய அரசின் கடைநிலைப் பதவிகளும் எட்டாக் கனியாகி விட்டன. இதனுடைய விளைவுதான் இன்று தமிழகத்திலுள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் இலலாத நிலையை உருவாக்கி விட்டன.
1990-களின் ஆரம்பத்தில் குரூப் 4 தேர்வில் பொது அறிவு ஒரு தாளும், பொது ஆங்கிலம் ஒரு தாளும் இருந்தன. திடீரென்று பொது ஆங்கிலத்திற்குப் பதில் பொதுத்தமிழை எடுத்துக் கொள்ளலாம் என்று வந்தது. இது தமிழ் இளைஞர்களின் அனைத்திந்திய போட்டித் திறனைக் குறைக்க ஆரம்பித்ததின் முதல் படி எனக் கூறலாம். 
எனவே இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பரந்த அளவில் தமிழர்கள் மத்திய அரசு வேலைகளில் அன்றைய காலத்தைப் போல சேர முடியாவிட்டாலும் தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இளைஞர்கள் முழுமையாகவோ நிறைந்த அளவிலேயாவது வரச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
(அடுத்த இதழில்)
- வி.குமாரமுருகன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com