நகரத்திலிருந்து... கிராமத்துக்கு! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் குடியரசுத்தலைவராக இருந்த போது 23 மார்ச் 2004 -இல் சிறந்த பஞ்சாயத்திற்கான "நிர்மல் கிராம் புரஸ்கார்' விருதை வாங்கிய இந்திய பஞ்சாயத்து தலைவர்களில் தமிழகத்தை
நகரத்திலிருந்து... கிராமத்துக்கு! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

மிச்சமெல்லாம் உச்சம் தொடு 46
ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் குடியரசுத்தலைவராக இருந்த போது 23 மார்ச் 2004 -இல் சிறந்த பஞ்சாயத்திற்கான "நிர்மல் கிராம் புரஸ்கார்' விருதை வாங்கிய இந்திய  பஞ்சாயத்து தலைவர்களில் தமிழகத்தை சேர்ந்த இரு பஞ்சாயத்து தலைவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பன்னீர்செல்வம். மற்றொருவர் கோயம்புத்தூர் மாவட்டம் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் சண்முகம் ரங்கசாமி. தமிழகத்தில் இருந்து சிறந்த பஞ்சாயத்திற்கான விருது வாங்கிய பல பஞ்சாயத்து தலைவர்களில் கீரப்பாளையம் மற்றும் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர்கள் செய்த பணி கலாமைக் கவர்ந்தது. 
அந்த பஞ்சாயத்து தலைவர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களது பணியை அறிந்து வர தொழில்நுட்ப இயக்குநராக இருந்த எனக்கு கலாம்  உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த பஞ்சாயத்து தலைவர்களைச் சந்தித்து உரையாடினேன். பின்பு அந்த கிராமப் பஞ்சாயத்துக்களை பார்வையிடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. ஒரு சில கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலாமை அழைத்துச் செல்லக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. புராதிட்டத்தின் ஒரு சில பகுதிகளை இவர்கள் செயல்படுத்தியிருந்தார்கள். இவர்களது செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புரா திட்டத்தை பிற கிராமப்புற பஞ்சாயத்துக்களில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைக் கண்டறிய எனக்கு உத்தரவிட்டிருந்தார். 
அன்றைய காலகட்டத்தில் புரா திட்டத்தினை ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டும் செயல் படுத்திக் கொண்டிருந்தன. இதில் நன்றாகச் செயல்படும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் பணிகளை அறிந்து, அவர்களுக்கு புரா திட்டத்தை விளக்கினேன். கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், தண்ணீர், வீடு போன்றவற்றுக்காக நகர்புறங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு மக்கள் தொகை அதிகமாகி அனைத்து வசதிகளும்  இல்லாமல் ஒட்டுமொத்த நகர்ப்புறமும் வியாதிகளின் கேந்திரமாக மாறுவதை தடுப்பது என்பது மிகப்பெரிய சவால். 
எனவே தான் கலாம் "புரா' திட்டத்தை கொடுத்தார். அதாவது 30-50 கிராமங்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கிடையே தேவையான சாலை வசதிகள், அடிப்படை கட்டமைப்புகள், தரமான பள்ளி, தரமான மருத்துவமனை, கிராமப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை விற்பதற்கு ஏற்ற தரமான சந்தை கட்டமைப்பு (Physical Connectivity) ஏற்படுத்த வேண்டும். நகர்புறத்தில் கிடைக்கும் இணையதள வசதிகள் கம்பியில்லா வயர்லெஸ் வை-பை கட்டமைப்புகள் மூலமாக Electronic Connectivity ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அறிவார்ந்த இணைப்புகளை கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைத்து (knowledge Connectivity) மக்களுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பையும், சுய வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

சிறு, குறு நிறுவனங்களை உருவாக்கும் தொழில் முனைவோர்களை உருவாக்க உறுதி செய்யவேண்டும். விவசாயம் மற்றும் விவசாயப் பொருள்கள் சார்ந்த மதிப்பு கூட்டுதல் கட்டமைப்பு, கிராமப்புறத் தொழில்களை உருவாக்கி ஏற்றுமதி தரத்திற்கு உற்பத்தி செய்தால் கிராமப்புற தற்சார்பு பொருளாதாரம் படைக்கப்படும் என்பதற்காக புரா திட்டத்தை கலாம் உருவாக்கினார். புரா திட்டத்தின் இந்த 4 இணைப்புகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து உயர்த்துவதும், நீடித்த வளர்ச்சியை உருவாக்குவதும் சாத்தியமாகும். 
எனவே இந்த பஞ்சாயத்து தலைவர்களின் செயல்பாடுகளை அறிந்து இவர்களிடம் புரா திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று விவாதித்து அவர்களின் அனுபவங்களின் மூலம் கற்ற பாடங்களைக் கேட்டு வந்து அறிக்கை கொடுக்கச் சொன்னார் அப்துல் கலாம். இப்படி பல வெற்றி பெற்ற முன் மாதிரிகளை ஆய்வு செய்து, அதில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட புரா திட்டம், தொடர்ந்து தன்னைப் புதுப்பித்து, செழுமைப்படுத்தி வளர்ந்தது.
அப்துல் கலாம் மறைவிற்குப் பிறகு புரா திட்டத்தை உலகிற்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற லட்சியத்தோடு, கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், கனடா இந்தியா பவுன்டேஷனின் முன்னாள் தலைவர். ஐ. லட்சுமணன் முன்னெடுப்பில் எனது தொடர்ந்த பங்களிப்போடு, டொரான்டோ பல்கலைக்கழகத்தின் கணித அறிவியல் கள ஆராய்ச்சி நிறுவனத்தின் (The Fields Institute for Research in Mathematical Sciences) தலைமைப் பேராசிரியர் டாக்டர் குமாரின் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து அதிதிறன் பெற்ற கிராமம் (SMART VILLAGE CONFERENCE) என்ற மாநாட்டை நடத்திக் கொண்டு வருகிறது. அதில் அமெரிக்கா, கனடா, இந்தியா, ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற பல்வேறு நாட்டு பிரதிநிதிகள், பேராசிரியர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள், கிராமப்புறத்தில் வேலை செய்யும் தனியார் தொண்டுநிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து எப்படி பட்ட ஸ்மார்ட் வில்லேஜ்கள் உருவாக்கப்படவேண்டும் என்று ஆய்வு நடத்தி விவாதிப்பது உண்டு. 
இந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மாநாடுகளில் இந்த புரா திட்டத்தை அறிமுகப்படுத்தியும், அதனை எப்படி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று மத்திய அமைச்சரவைக்கு எடுத்து சென்று, கேபினட் கமிட்டி அங்கீகாரம் பெற்று புரா 1.0 என்ற திட்டத்தை தொடங்க நான் குடியரசு தலைவர் செயலகத்தில் இயக்குநராக இருந்த போது செயல்படுத்தினேன் என்பதைப் பற்றியும், அதை அடுத்தடுத்து வந்த அரசுகள் புரா 2.0 மற்றும் ஷியாம் பிரசாத் முகர்ஜி ரர்பன் திட்டம் என்று மாற்றி அமைத்து செயல்படுத்த முயற்சி எடுத்தது என்றும், அதில் ஏற்பட்ட சோதனைகள், தோல்விகள், அரைகுறையாக செயல்படுத்தியதால் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவற்றையும், அதனால் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பற்றியும் நான் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து, இனிமேல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், எப்படி வளரும் நாடுகளில் வாழும் 3 பில்லியன் மக்களுக்கு அப்துல் கலாம் கொடுத்த புரா திட்டம் நீடித்த, நிலைத்த வளர்ச்சியை கொடுத்து, ஒரு தற்சார்புப் பொருளாதராத்தை கட்டியெழுப்பும் என்று உரையாற்றினேன். 
இதனைத் தொடர்ந்து கனடா நாட்டின் டொரான்டோ பல்கலைக்கழகம் 2018- இல் ஓர் ஆய்வுக் குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது, அந்த குழுவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தேன். அந்த ஆய்வுக் குழு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட புரா திட்டங்களைப் பற்றி ஆய்வு நடத்தியது. சென்னையில் என்னோடும், அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைவர் உ. பி. செந்தில் குமாரோடும் கலந்துரையாடி புரா திட்டம் பற்றி கேட்டறிந்தது. அந்த குழு தமிழகத்திற்கு வந்தது, தஞ்சாவூர் வல்லத்தில் இருக்கக் கூடிய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரனின் முன்னெடுப்பால் செயல்படுத்திய பெரியார் புரா திட்டத்தை பார்வையிட ஏற்பாடு செய்தேன். 
அதே போல அருப்புக்கோட்டை அத்திபட்டி பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ் செயல்படுத்திய புரா திட்டம், 365 நாளும் கிராமத்தின் கண்மாயில் சாக்கடை கலக்காமல் கழிவுநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்தி நல்ல தண்ணீர் கண்மாயில் கலக்கவும், அங்கு ஆழ்துளைக் கிணற்றின் மூலம் 365 நாளும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் திட்டத்தையும், வனம் திட்டத்தையும் பார்வையிட்டார்கள். மதுரை மீனாட்சி மிஷன் புரா திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், எனது கிராமம் தோணுகாலில் மீனாட்சி மிஷன் தொலைத்தொடர்பு மருத்துவத் திட்டத்தையும், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களில் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தோடு இணைந்து செயல்படுத்தப்பட்ட வி.ஐ. லட்சுமணனின் உதவியோடு வழங்கப்பட்ட நடமாடும் மருத்துவமனைத் திட்டத்தையும் பார்வையிட்டு மாதம் தோறும் 3000 மக்கள் வியாதியைக் கண்டறியும் மேம்பட்ட சோதனையையும், மருத்துவ வசதியையும் இலவசமாகப் பெறுகிறார்கள் என்று மதுரை பாலுவும், சுந்தர்ராஜன் உதவியுடன், மீனாட்சி மிஷன் மருத்துவர்களோடு கலந்துரையாடி கண்டறிந்தார்கள். 
அடுத்தபடியாக அமெரிக்க வாழ் தமிழ்ச் சங்கங்களின் உதவியோடு 2015 - இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 கிராம மக்களுக்காக கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சேர்ந்து உருவாக்கிய அப்துல் கலாம் புரா திட்டத்தின் மூலம் தினமும் 30 ஆயிரம் லிட்டர் குடி தண்ணீர் வழங்கும் திட்டத்தை AKVIM தலைவர் செந்தில் குமார் சேர்ந்து கண்டறிந்தார்கள். அடுத்து அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் மாணவர் அணி தலைவர் நரேஷ் அவர்கள் மூலம் கோயம்புத்தூரில் ஓடந்துறை பஞ்சாயத்தை இந்த குழு பார்வையிட ஏற்பாடு செய்து அந்த பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் சண்முகம் ரங்கசாமியோடு கந்துரையாட ஏற்பாடு செய்தேன். இந்த ஆய்வை பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை டொரான்டோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு குழு சமர்ப்பித்தது. 
அதைத் தொடர்ந்து டொரான்டோ பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் வி.ஐ. லட்சுமணன் அழைப்பின் பேரில் 24-26 ஜூன் 2019- இல் கனடாவில் நடைபெற்ற ஸ்மார்ட் வில்லேஜ் மாநாட்டில் நானும், ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் சண்முகமும் கலந்து கொண்டோம். அந்த மாநாட்டில் சண்முகம் தமிழில் பேச, அதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். ஓடந்துறை பஞ்சாயத்து செயல்பாடுகளைப் பற்றிய ஒரு காணொளி காட்சியை நான் உருவாக்கியிருந்தேன் அதை அங்கு சமர்ப்பித்து விளக்கினோம். அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் சண்முகம் ரங்கசாமி தனது சிறந்த பேச்சால், தனது செயலால், தனது நேர்மையால் எப்படி மக்களை நகரத்தில் இருந்து ஓடந்துறை கிராமத்திற்கு குடிபெயரச் செய்தார் என்பதை விளக்கினார். அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். 
அந்த ஓடந்துறை பஞ்சாயத்தை நான் நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்தேன். ஒரு பஞ்சாயத்து தலைவரால் இது அனைத்தும் சாத்தியம் என்றால் தமிழகத்தில் 12,500 பஞ்சாயத்து தலைவர்களால் தனது கிராமத்தை முன்னேற்ற முடியுமா? இல்லையா? என்பது தான் கேள்வி. அவர் அந்த பஞ்சாயத்து தலைவராகப் பதவி ஏற்ற போது பஞ்சாயத்து கணக்கில் ரூ 20,000 தான் இருந்தது. இன்றைக்கு ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் வருடம் தோறும் ரூ. 20 லட்சம் வரி வருமானம் மற்றும் அரசின் நிதி உதவியோடு கிடைக்கிறது. ஒன்றுமே இல்லாத நிலையில் பஞ்சாயத்தின் வருமானத்தை உயர்த்த முடியும் என்றால் ரூ. 20 லட்சம் கொடுத்தும் கடந்த 5 வருட பஞ்சாயத்து ஆட்சிமுறையில் எவ்வளவு கிராம பஞ்சாயத்துக்கள் முன்னுக்கு வந்திருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வி. 
எப்படி ஒரு பஞ்சாயத்து தலைவர் நேர்மையாக நடந்து சாதித்தார்? தனது கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றி அமைத்தார்? கிராமத்திலிருந்து மக்கள் நகரத்திற்கு செல்வதை மாற்றி நகரத்திலிருந்து கிராமத்துக்கு மக்களை எப்படி கொண்டு வந்தார் என்ற உண்மைச் சம்பவத்தை நாம் உணர்ந்து அறிந்து கொண்டால் கண்டிப்பாக நேர்மையும், தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்பு உணர்வும் இருக்கும் ஒவ்வொருவராலும் தனது கிராமம் தனது கிராமத்து மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் தங்களது பஞ்சாயத்து தலைவர் பதவி மூலம், அனைத்து வாய்ப்புகளையும் கிராம மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பது தான் உண்மை. 
வருடத்திற்கு ஒரு லட்சம் வரி வருமானம், மற்றும் அரசின் நிதி உதவியை இருந்த காலகட்டத்தில் கிராமத்தின் வருவாயை எப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உருவாக்க முடியும்; எப்படி நேர்மையாக நடந்து கிராமத்தின் வருவாயைப் பெருக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சண்முகம் ரங்கசாமி. இன்றைக்கு பஞ்சாயத்திற்கு வரக்கூடிய வரி வருவாயும், மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியும், ஒன்றிய மற்றும் மாவட்ட பஞ்சாயத்து திட்ட நிதி உதவிகள் வந்தும் கிராமங்கள் வளர்ச்சியடையவில்லை. வருமானம் சம்பளத்திற்கும், மின்சார செலவிற்கும், மற்றும் அன்றாட செலவுகளுக்குமே சரியாகப் போய்விடுகிறது என்பது பல்வேறு பஞ்சாயத்து தலைவர்களின் குற்றச்சாட்டு. இது இன்னும் தொடர்கிறது. வளர்ச்சி மட்டும் வரவேயில்லை. 
மத்திய மாநில அரசு வரி வருவாயை மட்டும் நம்பியிராமல், சொந்தமாக வருமானத்தை, நிதி ஆதாரங்களை பெருக்கி அதன் மூலமாக ஒரு கிராமத்தையே மாற்றி காண்பிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஓடந்துறை சண்முகம் ரங்கசாமி. எப்படி அவர் சாதித்தார், அவரால் முடிந்தது இன்றைய தலைவர்களால் முடியாதா? தொடர்ந்து பார்ப்போம். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com