பேசினால் மாட்டிக் கொள்வீர்கள்!

மூன்றாவது கண் எனக் கூறப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில், தவறு செய்பவர்கள் பதிவாகிவிட்டால் போதும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தப்பிக்கவே முடியாது.
பேசினால் மாட்டிக் கொள்வீர்கள்!

மூன்றாவது கண் எனக் கூறப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில், தவறு செய்பவர்கள் பதிவாகிவிட்டால் போதும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தப்பிக்கவே முடியாது. பெரும் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் மட்டும் பொருத்தப்பட்டு வந்த இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் விலை தற்போது குறைந்துவிட்டதால் வீடுகள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் பொருத்தப்பட்டு வருகின்றன.
 சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை மட்டும் கண்காணிக்காமல், கொள்ளை, சட்டம் போன்ற ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி சிசிடிவியில் தவறு செய்தவர் சிக்கிவிட்டால், அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் செய்த தப்புக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
 அதிலும், தற்போது இந்திய பெரு நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிக்னலை மீறுபவர்கள் போன்றவர்களின் வாகன எண்களைத் துல்லியமாகக் கண்டுபிடித்து அபராத ரசீதை அனுப்பும் அளவுக்கு நவீனப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீஸாருக்கு பயப்படாத வாகன ஓட்டிகள் சிசிடிவி கேமராவுக்குப் பயந்து சாலை விதிகளைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த சிசிடிவி கேமராக்களின் திறன் நாளுக்கு நாள் நவீனமயமாக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
 இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாண போக்குவரத்து போலீஸார் சிசிடிவி கேமராவில் செயற்கை நுண்ணறிவைப் பொருத்தி, செல்லிடப்பேசியைப் பயன்படுத்தியபடியே கார்களை ஓட்டும் ஓட்டுநர்களைக் கண்டுபிடிக்கின்றனர்.
 கார்களை ஓட்டும்போதே செல்லிடப்பேசியில் குறுந்தகவல்களைப் படிப்பதும், பதிவு செய்வதும், பேசுவதும் ஓட்டுநர்களிடம் அதிகமாகக் காணப்படுவதால் அவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க இந்த புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் ஓட்டுநரை தானாவே இந்த சிசிடிவி கேமரா பதிவு செய்துவிடும்.
 நிகழாண்டில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில் சுமார் ஒரு லட்சம் ஓட்டுநர்களை இந்த சிசிடிவி கேமரா கண்டுபிடித்துள்ளது. அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீûஸ போலீஸார் அனுப்பி உள்ளனர். மீண்டும் தவறு செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். எந்த ஒரு பருவ காலத்திலும் காரின் முன்பக்கத்தில் உள்ளவரின் செயல்பாட்டை இந்த சிசிடிவி கேமரா துல்லியமாகப் பதிவு செய்யும் என்றும் உலகிலேயே கார் ஓட்டுநரைக் கண்காணிக்கும் முதல் சிசிடிவி கேமரா இதுவாகும் என்றும் நியூ சௌத் வேல்ஸ் மாகாண போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 -அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com