வந்துட்டாருப்பா ஷேக்ஸ்பியர்!

ஒருபோதும் ரோஜாக்கள் மழையாகக் கொட்டப்போவதில்லை; எப்போது நமக்கு அதிகப்படியான ரோஜாக்கள் தேவையோ, நாம் கண்டிப்பாக அதிகமான செடிகளை நட்டே ஆகவேண்டும்" - ஜார்ஜ் எலியட்.
வந்துட்டாருப்பா ஷேக்ஸ்பியர்!

ஒருபோதும் ரோஜாக்கள் மழையாகக் கொட்டப்போவதில்லை; எப்போது நமக்கு அதிகப்படியான ரோஜாக்கள் தேவையோ, நாம் கண்டிப்பாக அதிகமான செடிகளை நட்டே ஆகவேண்டும்" - ஜார்ஜ் எலியட்.
ஒருவர் ஆங்கிலத்தில் உரையாடுகிறார், சரளமாக எழுதுகிறார் பேசுகிறார் என்றால் அவரை, "வந்துட்டாருப்பா பீட்டரு' என்று கேலி செய்யும் வழக்கம் சில காலங்களுக்கு முன்பு மாணவர்களிடையே பரவலாக இருந்தது. அதே நிலை இப்பொழுது இல்லை என்றாலும், ஆங்கிலம் பற்றிய பயம், பீதி, வெறுப்பு எல்லாமே இன்றும் தமிழ்வழிக் கல்வி மற்றும் கிராமப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களிடம் அப்படியேதான் இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பார்க்காமல் அதை ஒரு கடினமான மற்றொரு பாடமாகக் கருதி ஆசிரியர்கள் மாணவர்களை அச்சுறுத்தி வைத்திருக்கின்ற அறியாமையே முதன்மையான காரணமாக இருக்கிறது.
ஆங்கில இலக்கியத்தின் முதுகலை மாணவர்களாக நாங்கள் ஐவர் நண்பர்களாக வலம் வந்த அன்றைய காலகட்டத்தில் அதிகமாக ஆங்கிலத்தில் பேசுவோம். இலக்கிய ஜாம்பவான்களின் பொன்னான வரிகளை கோடிட்டு பேசும் எங்கள் குழுவில் ஒருவரை "வந்துட்டாருப்பா ஷேக்ஸ்பியர்' என்று ஒட்டுமொத்த கல்லூரியுமே கேலிபேசுவது உண்டு. அம்மாணவர், அவருக்கு வைத்த பெயரைப்போலவே ஷேக்ஸ்பியரின் பொன்னான வரிகள் சிலவற்றை தொடர்ந்து கோடிட்டு பேசிக் கொண்டேயிருப்பார்.
"உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்', "நேரத்தை தள்ளிப்போடாதே', "தாமதித்தால் அபாயமான முடிவு ஏற்படும்', "ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இருக்க முடியாது', "நறுமண மலர்களோ மெதுவாக வளரும், களைகளோ வேகமாக வளரும்', "வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி செல்லும்போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம்' என்பன போன்ற ஷேக்ஸ்பியரின் வரிகள் எல்லாமே என் நண்பர் அடிக்கடி உரக்கச்சொல்லி என் மனதில் ஆழமாகப் பதிந்த பொன்மொழிகள்.
வாசிப்பு என்பது ஒரு கற்றல்; அறிவுத்தேடல். குறிப்பிட்ட துறையில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் படிப்பது மட்டுமே முழுமையான கல்வியல்ல. அது மிகச் சரியாக அமைந்தால் கற்றலுக்கு அது வழிகாட்டும்; நெறிப்படுத்தும். வாசிப்பைத் தொடரும் போதுதான் கற்றல் செயற்பாடு விரிகிறது; ஆழமாகிறது. இந்தவகையில் வாசிப்பை கற்றலின் நங்கூரமாகவே நாம் கருதவேண்டும். வெறுமனே பொழுதுபோக்குக்கான ஒரு வழியல்ல அது.
தன் துறை சார்ந்து கற்றலை விரிவுபடுத்த வாசித்தலை அத்துறை சார்ந்தவரே அதனை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். தனது குறிப்பிட்ட துறையின் முன் மாற்று சிந்தனைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும், பார்வைகளையும் கற்றலே இந்த வாசிப்பின் அடிப்படையாக இருக்கிறது; இருக்க வேண்டும். 
அடுத்து தனது துறைக்கு வெளியே உள்ள அறிவுப் பகுதிகளை வாசித்தல் என்பது ஒரு பெரும் கலையாகும். ஒருவர் ஆங்கிலத்துறை சார்ந்தவராயின் ஏனைய கலை, மருத்துவம், பொருளாதாரம், வானவியல், புவிசார் அறிவுகள் என்பனவற்றை தெரிந்து கொள்ள வாசித்தல் மற்றொரு வகை. இதுவே உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், பிரச்னைகளைப் பல கோணங்களில் பார்க்கவும் உதவி செய்யும்.
பொதுவான வாசிப்பு என்பது மூன்றாவது வகை என்றாலும் முக்கியமானது. இந்த வகை துறைசார் கலைச் சொற்பிரயோகங்கள், வகைப் படுத்தல்களை விட்டு நீங்கிய நூல்களை வாசித்தலாகும். இத்தகைய நூல்கள், பொருளாதாரம், அரசியல், மருத்துவம் போன்ற துறைகள் பற்றிப் பேசும். ஆனால் அக்கலைகளில் பொது உண்மைகளையும் அவை சார்ந்த பிரச்னைகளையும் பேசும். இவையே வாசிப்பின் அடிப்படையாகும். வாசிப்பை இங்கிருந்து தொடங்குவது சாலச் சிறந்தது. வெறும் ஆரம்ப அறிவு பெற்றவர் கூட தன் கற்றல்களை இந்த வாசிப்பிலிருந்து தொடங்கலாம்.
வாசிப்பு வெறும் கல்விக்காகவும் பொழுது போக்குக்காகவும் மட்டுமானதல்ல என்கிற புரிதல் மிக முக்கியமானது. அப்போதுதான் அது அறிவு தேடலுக்கான அனைத்துப் பண்புகளையும் பெறும். ஆற்றல்மிக்க ஒருவரை, பல சராசரிகளிடமிருந்து மாறுபட்டவராக ஒருவரை, அறிவுஜீவியாக ஒருவரை கல்வி நிறுவனங்கள் மட்டுமே உருவாக்கிவிடுவதில்லை. சில அடிப்படைகளை மட்டும் அது கொடுக்க முடியும். பரந்த ஆய்வடிப்படையிலான வாசிப்பே ஓர் அறிவு ஜீவியை உருவாக்கிறது.
குறைந்தது வாசிப்பு பாமரத்தன்மையை இல்லாமல் ஆக்கும். விஷயங்களை மிகவும் மேலோட்டமாகப் பார்ப்பதும்,வெறும் வசன, சொற்கவர்ச்சிகளுக்கு உட்பட்டு பேசுவது போன்ற செயல்களே பாமரத்தன்மை என்று வகைப்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களிலும் பாமரர்கள் உள்ளனர். தமது பாடத்திட்டத்திற்கு வெளியில் எதுவும் தெரியாது, பட்டம் பெற்ற பிறகு தேடலை, வாசிப்பை நிறுத்திக் கொண்டவர்கள் என்று பலர் இந்த வகையில் உள்ளனர்.
நாம் இதுவரை கவனத்தில் எடுத்துக்கொண்டு பேசிய குணங்களில் நேர்மறையான அம்சங்களை கடைபிடித்தும் எதிர்மறையான அம்சங்களைத் தன்னிடமிருந்து விலக்கியும் அப்பொழுதே தன் வாழ்க்கை பாதையை வகுத்துக்கொண்டவர்தான் நாம் மேலே குறிப்பிட்ட "ஷேக்ஸ்பியர்'. அன்றைய அந்த மாணவரை "வந்துட்டாருப்பா ஷேக்ஸ்பியர்' என்று விளையாட்டாகவும், வினையாகவும், ஆங்கில மொழியின்மீது இருந்த வெறுப்பால் கேலி பேசியவர்கள் எல்லாரையும் விட, இன்று தரமான மதிப்புமிக்க, அதே நேரம் நேர்மையாக நல்ல வருமானமும் ஈட்டுகிற பெரிய மனிதராக, உலக அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணைய வழியாக நல்ல சிந்தனைகளை, செய்திகளை, கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற அரிய மனிதராக மிளிர்ந்துகொண்டிருக்கிறார் அவர். 
மொழி எனும் ஆயுதம் கொண்டு நாமும் மேம்பட்டு இம்மானுடத்தையும் மேம்படுத்துவோம்.
- கே.பி. மாரிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com