வானியல் ஆய்வகங்களை உருவாக்கும் 19 வயது இளைஞர்!

மாலை நேர வானத்தை அனைவரும் ரசித்தாலும், சிலருக்கு மட்டும்தான் அதை ஆராயத் தோன்றும். அவ்வாறு ஆராய்ந்த ஒரு சிறுவன்தான் இன்று 19 வயதிலேயே பள்ளிகளுக்கு வானியல் ஆய்வகங்களை
வானியல் ஆய்வகங்களை உருவாக்கும் 19 வயது இளைஞர்!

மாலை நேர வானத்தை அனைவரும் ரசித்தாலும், சிலருக்கு மட்டும்தான் அதை ஆராயத் தோன்றும். அவ்வாறு ஆராய்ந்த ஒரு சிறுவன்தான் இன்று 19 வயதிலேயே பள்ளிகளுக்கு வானியல் ஆய்வகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தில்லியின் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆர்யன் மிஸ்ரா (Aryan Mishra)இவரின் தந்தை செய்தித்தாள் விற்பனை
யாளர். ஆர்யன் சிறு குழந்தையாக இருந்தபோது இரவு நேரங்களில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்குவார். அப்போதே, நட்சத்திரம் என்பது என்ன? அவை ஏன் வானத்தில் இருக்கின்றன என்று அவர் கற்பனை செய்வார். ஆனால், அவரது குடும்பத்தினருக்கோ, 
அப்பகுதியில் இருந்தவர்களுக்கோ வானியல் குறித்த புரிதல் இல்லை. 
இதையடுத்து, ஆர்யன் தனது பள்ளியில் உள்ள வானியல் கிளப்பில் சேர்ந்தார். பள்ளியில் ஒருநாள் இரவு வான்நோக்கு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, தொலைநோக்கி மூலம் முதல் முறையாக சனி கிரகத்தைப் பார்த்தார். அப்போதிருந்து, வானியல் குறித்த அவரது ஆர்வம் பன்மடங்காகப் பெருகியது. என்றாலும், ஆர்யனின் பெற்றோருக்கு அது பிடிக்கவில்லை.
இந்த நிலையில், தான் ஒரு தொலைநோக்கி வாங்க விரும்புவதாக பெற்றோரிடம் கூறினார் ஆர்யன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். காரணம், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தொலைநோக்கியை வாங்குவது என்பது அவர்களுக்கு ஒரு பெரிய காரியம். பொருளாதாரப் பிரச்னை மற்றும் பெற்றோரின் ஆதரவு இல்லாததால், தானே தொலைநோக்கியை வாங்க ஆர்யன் முடிவுசெய்தார். 
அவர் தனது செலவுக்கு வழங்கப்பட்ட சிறு தொகையைச் சேமிக்கத் தொடங்கி, சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரத்தை சேமித்தார். அதை வைத்து 12 வயதில் தனது முதல் தொலைநோக்கியை வாங்கினார். 
2014 -இல் 14 வயதாக இருந்தபோது நாடு தழுவிய அளவில், சிறுகோள் தேடல் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற ஆர்யனும், அவரது நண்பர் கீர்த்திவர்தனும் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழனுக்கும் இடையே ஒரு சிறுகோளை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆர்யன் கூறுகையில், "கண்டுபிடிப்புக்குப் பிறகு நான் செய்தித்தாள்களில் இடம்பெற்றபோது, நான் ஏன் வானியல் மீது ஆர்வமாக இருந்தேன் என்பதை பெற்றோருக்கு நிரூபித்தேன். எனது மிகப்பெரிய சவால், என்னைச் சுற்றியுள்ள உலகத்தை கையாள்வதில் இல்லை. அதேநேரத்தில், என் பெற்றோருக்கு நான் தகுதியானவன் என்பதை நிரூபிப்பதும், நான் ஏன் வானியலால் ஈர்க்கப்பட்டேன் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதிலும் இருந்தது. ஒரு செய்தித்தாள் விற்பனையாளரின் குழந்தை செய்தித்தாளில் இடம்பெறுவது பெரிய விஷயம்'' என்கிறார் ஆர்யன்.
ஆர்யன் தற்போது ஹரியாணாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. இயற்பியல் படித்து வருகிறார். கடந்த ஆண்டு (2018)  Spark Astronomy  என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். 
"அண்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பும் நம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்பதும், அதை சிறப்பாகச் செய்வதுமே எனது நோக்கம். அதற்காக, குழந்தைகள் விண்வெளி மற்றும் அதற்கும் அப்பால் உள்ளவை குறித்து அறிந்துகொள்வதற்கான ஆய்வகங்களை அமைப்பதற்கான யோசனையை நான் கொண்டு வந்து செயல்படுத்தினேன். குறைந்த செலவில் தொலைநோக்கி குறித்தும், அதை எவ்வாறு பயன்படுத்துவது, நட்சத்திரங்களின் வெப்பநிலையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பவை குறித்தும் 50-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை இந்த ஆய்வகத்தில் பெறமுடியும்'' என்கிறார் ஆர்யன்.

இன்று ஆர்யனின் தொடக்கநிலை நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஆய்வகங்கள் வான் கண்காணிப்புக்கு 4 அடிப்படை தொலைநோக்கிகளை வழங்குகின்றன. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி அவரே உருவாக்கும் கருவிகள் ஆய்வகங்களில் உள்ளன. அவரது நிறுவனம், வெவ்வேறு வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும், ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பையும் வழங்குகிறது. மேலும், ஆசிரியர்கள் ஆய்வகங்களை இயக்கவும் பயிற்சியளிக்கிறது. இவரது நிறுவனத்தில் பதிவுபெறும் மாணவர்கள் வானியல் துறையில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த வழக்கமான செய்திமடல்களைப் பெறலாம்.
Spark Astronomy ஸ்டார்ட்அப் நிறுவனம் ரூ. 3 லட்சத்தில் வானியல் ஆய்வகத்தை பள்ளிகளுக்கு அமைத்து கொடுக்கிறது. தற்போது தில்லியில் 2, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் தலா ஒரு பள்ளி என 5 தனியார் பள்ளிகளுக்கு வானியல் ஆய்வகத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. 
Spark Astronomy ஸ்டார்ட் அப் உதவியுடன் நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வானியல் ஆய்வகங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
ஆர்யனின் முயற்சிகள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த குறைந்த கட்டண ஆய்வகங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஆர்யன் கூறுகிறார்.
Spark Astronomy மற்றும் மத்திய அரசின் இந்த சோதனை திட்டத்தில், டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 8 ஆய்வகங்களை அடுத்த 3 மாதங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆர்யனின் பொருளாதாரப் பின்னணி, ஆதரவற்ற நிலை அவர் தனது கனவுகளை அடைவதை ஒருபோதும் தடுக்கவில்லை. ஆர்யனுக்கு விமானி ஆக வேண்டும் அல்லது வான்இயற்பியலில் முதுநிலை பட்டம் பெறவேண்டும் என்ற கனவும் உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "அடுத்த 3 ஆண்டுகளுக்கு நான் அரசுடன் இணைந்து பணியாற்றுவேன். அதன் பிறகு, லடாக்கின் தொலைவான பகுதியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மலை பிரதேசத்திலோ ஓர் ஆய்வகத்தை அமைக்க விரும்புகிறேன். அங்கு மக்கள் வந்து தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானத்தை கவனிக்கலாம், ஆராய்ச்சியும் செய்யலாம்'' என்கிறார்.
-இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com