செயற்கை நுண்ணறிவு: ஐஐடி-இல் புதிய படிப்புகள்!

ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் முழுமையான பி.டெக். கோர்ஸை வரும் 2019-20 ஆம் கல்வியாண்டில் தொடங்க உள்ளது
செயற்கை நுண்ணறிவு: ஐஐடி-இல் புதிய படிப்புகள்!

ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் முழுமையான பி.டெக். கோர்ஸை வரும் 2019-20 ஆம் கல்வியாண்டில் தொடங்க உள்ளது. இது இந்திய கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் பி.டெக். கோர்ஸைத் தொடங்கும் முதல் கல்வி நிறுவனம் என்பதும், உலகளவில் 3 ஆவது நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமெரிக்காவில் உள்ள கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகம், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை மட்டுமே செயற்கை நுண்ணறிவு தளத்தில் பி.டெக். கோர்ஸைத் தொடங்கியுள்ளன. 
ஆயிரக்கணக்கான இந்திய தொழில்துறை நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இந்தத் துறை ஆண்டுதோறும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது, இந்தத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 2020 - இல் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத்தளத்தில் பி.டெக். படிப்பைத் தொடங்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கோர்ஸில் கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) தேர்ச்சி பெற்ற 20 மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கப்பட உள்ளனர். செயற்கை நுண்ணறிவு- இயந்திர கற்றல் தளத்தின் கோட்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் முழுமையான அடிப்படைப் புரிதலைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே இந்த கோர்ஸின் முக்கிய நோக்கம். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தளத்தில் நாட்டின் உடனடி தேவையைப் பூர்த்தி செய்ய மாணவர்களை தயார் செய்வதே இந்த படிப்பு தொடங்கப்படுவதன் குறிக்கோள் எனக் கூறப்படுகிறது.
B.Tech. (AI) கோர்ஸ், கணினி அறிவியல் துறை, மின் பொறியியல் துறையில் சிக்னல் செயலாக்கம், இயந்திரப் பொறியியல் துறையில் ரொபாடிக்ஸ், கணித அடிப்படைகள் உள்ளிட்ட பாடத்திட்டங்களுடன், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தளத்தில் முழுமையான பார்வையை அளிக்கும். அதோடு, உடல்நலம், வேளாண்மை, ஸ்மார்ட் மொபிலிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் இது கற்பிக்கும். மேலும், செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை தாக்கம், அதன் தொழில்நுட்பங்களில் தனியுரிமை, ஆர்வம் உள்ளிட்டவை தொடர்பான பிரச்னைகளும் இந்த கோர்ஸில் முக்கிய கூறுகளாக உள்ளன. 
இந்த கோர்ஸின் முக்கிய அம்சங்கள் குறித்து IIT-H-இன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மையர் முனைவர் சுமோஹன சேனப்பாய்யா கூறுகையில், "செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள் உடல்நலம், வேளாண்மை, மண் மேலாண்மை, தட்பவெப்பநிலை கணிப்பு, கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் ராணுவம் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கிய களங்களில் ஒரு பெரிய சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்த களங்களில் உள்ள சிக்கல்களுக்கு செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான முறையான நீண்டகால மற்றும் வலுவான தீர்வுகள் தேவைப்படுகின்றன. எனவே இந்தத் துறையில் தற்போது உள்ளதைக் காட்டிலும், பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கான தேவை மிகப் பெரிய அளவில் உள்ளது. அந்த வகையில், இந்தச் சூழல் குறித்து விளக்கும் ஒரு முன்னோக்கிய படியாகவும் இந்த B.Tech. (AI) கோர்ஸ் உள்ளது. 
அதோடு, பி.டெக். வேதி பொறியியல், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளில் பட்டம் பெறும் மாணவர்கள் கூட வரும் ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு குறித்த குறும்படிப்புகளில் சேர்ந்து பயில முடியும். இது IIT-H மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தளத்தில் அனைத்துத் துறைகளிலும் தங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ள திறனுள்ளவர்களாக உருவாக்கும்'' என்கிறார்.
செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் இயந்திர கற்றல் வழிமுறை தொழில்நுட்பம் தொடங்கி, நெறிமுறை சார்ந்த பிரச்னைகள் என பல வகையான பயிற்சிகளை இந்தப் படிப்பு வழங்கும். இதில் பயிலும் மாணவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்துறைகளில் பணியாற்றும்போது, அவர்கள் அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிக்கும் வகையில் இங்கு பயிற்சி வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாமல், IIT-H கடந்த 2015-16 முதல், பணியில் உள்ளோருக்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் அது தொடர்பான தகவல்களுடன் கூடிய M.Tech., Data Science கோர்ஸை இணைய வழியில் வழங்கி வருகிறது. இதில் சேரும் மாணவர்கள் 2 முதல் 5 ஆண்டுகளில் கோர்ஸை முடிக்கலாம். பணியில் உள்ளோர் அதிலிருந்து விலகாமலும், இடம் பெயராமலும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள இந்த கோர்ஸ் வகைசெய்கிறது.
IIT-H-இல் உள்ள Liberal Arts துறை, கணினி அறிவியல் மற்றும் மின் பொறியியல் துறை பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதத்துவம் (AI and Humanity) என்ற புதிய குறும்படிப்பைத் தொடங்கியுள்ளது. 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com