சுடச்சுட

  
  im13

  உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் தற்போது அடிப்படை தேவையாகிவிட்டது. பிறப்பில் இருந்து இறப்பு வரை அறிவியலும், தொழில்நுட்பமும் நம் நிழல் போல கூடவே வருகிறது. தொழில்நுட்பம் பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி பல சாதகங்களையும், பாதகங்களையும் கொண்டுள்ளது. அதனால் நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள்:
   தகவல் தொலைத்தொடர்பு
   ஓர் செய்தி கடல் கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலமெலாம் ஓடோடி போய் தற்போது நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான செய்திகள் கடல் கடந்து, நாடு கடந்து வந்தடைகின்றன. ஒருவர் வீட்டில் நடக்கும் நிகழ்வு அவரது அண்டை வீட்டாருக்கு தெரியும் நேரத்தில், எங்கேயோ வேறு கண்டத்தில் இருப்பவருக்கும் தெரிய வரும் அளவுக்கு நமது தொழில்நுட்ப வளர்ச்சி தகவல் தொலைத்தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
   இவற்றையெல்லாம் விட பிரமிப்பூட்டும் விஷயம் வேற்று கிரகத்துக்கே நாம் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஆனால் இத்தகைய பயனுள்ள தொலைத்தொடர்பு சாதனங்களையும், செயலிகளையும் நாம் பொழுதுபோக்குக்காகவும், வதந்திகளைப் பரப்புவதற்காகவும் மட்டுமே அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கோ இருக்கும் ஒருவரை அணுக வைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, நம் அருகில் இருக்கும் சுற்றத்தாரை நம்மிடம் இருந்து விலக்கி வைத்திருக்கிறது என்பது கசப்பான உண்மையே.
   கல்வி
   ஒரு காலத்தில் கல்வி அறிவை தேடி தேடிப் பெற்றனர். ஆனால் தற்போது அது நம்மைத் தேடி வருகிறது. ஒரு நொடியில் உலகை நம் விரல் நுனிக்குள் கொண்டு வந்து விடுகிறது. வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. கரும்பலகைகள் போய் மின்திரைகள் வந்துவிட்டன. கையளவு செல்லிடப்பேசியில் அனைத்து புத்தகங்களும் அடங்கிவிட்டன. மாணவர்கள் அறிவோடு மட்டுமன்றி அறிவியலோடும் வளர்கின்றனர்.
   ஆனால் இதே தொழில்நுட்ப வளர்ச்சியால் போட்டி அதிகமாகி, கல்வி வியாபாரமாகி வருகிறது. அனைவருக்கும் எளிதாக சமமாக கிடைக்க வேண்டிய கல்வி பலருக்கு அரிதாகி போய் விட்டது.
   மருத்துவம்
   தொழில்நுட்ப வளர்ச்சியால் மருத்துவமனைகள் நவீனமயமாகி விட்டன. நோய் தடுக்கும் முறை, கண்டறியும் முறை, காக்கும் முறை என அனைத்தும் எளிமையாகி விட்டன. உயிரைக் காப்பாற்றுவதால் மருத்துவர்களை கடவுளாக பார்த்து வந்தோம். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் தற்போது அவர்கள் படைப்பாற்றலையும் பெற்று விட்டனர். செயற்கை இதயம், சுவாசக் குழாய், சிறுநீரகம் என உடல் உறுப்பின் சிறிய செல்லை வைத்து புதிதாக உறுப்புகளை உருவாக்கும் வல்லமையை தொழில்நுட்பம் அளித்துள்ளது. ஆரோக்கியத்தை காக்கவும், பராமரிக்கவும் மணிக்கட்டிலேயே "பிட்னெஸ் பேண்ட்' என்ற மருத்துவரை கட்டிக் கொண்டு சுற்றுகிறோம். நாடித் துடிப்பில் இருந்து, அனைத்து வித உடல் நிலைகளின் செயல்பாட்டை நமக்கு அறிக்கையாக அளித்து நம்மை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள அந்த பிட்னெஸ் பேண்ட் மருத்துவர் உதவுகிறார்.
   எனினும், மருந்துகள் பெருகினாலும், நோய்களும் பெருகி வருவது தொழில்நுட்பத்தின் பக்க விளைவாகவே உள்ளது.
   பாதுகாப்பு
   தனிமனித பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் உதவிகரமாய் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கும், வீட்டின் பாதுகாப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் குறைந்து வருகின்றன. பெண்கள், முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செல்லிடப்பேசி செயலிகளும் உள்ளன. செயற்கைக் கோள் மூலமாக நாடு கடந்த பாதுகாப்பும், ஊடுருவல் அச்சுறுத்தல்களும் கண்காணிக்கப்பட்டு முறியடிக்கப்படுகின்றன.
   செயற்கை இடர்பாடுகள் மட்டுமன்றி இயற்கை சீற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்து கொள்ள தொழில்நுட்பம் பேருதவி புரிகிறது.
   நமது பாதுகாப்புக்காக தொழில்நுட்பம் பல்வேறு உதவிகளைப் புரிந்து வந்தாலும், தொழில்நுட்பத்தின் பாதுகாப்பில் குற்றவாளிகள் குற்றம் புரிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தவறான கைகளில் தொழில்நுட்பம் சென்றடையும்போது அதுவே பேராபத்தாகவும் மாறிவிடுகிறது.
   நம் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் பல பிரமிப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஒரு காலத்தில் கனவாக தோன்றியது எல்லாம் தற்போது நிஜமாகி போனது. எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தொழில்நுட்பம் நமது வேலைகளை எளிதாக ஆக்கிய அதேநேரத்தில் நம்மைச் சோம்பேறியாகவும் ஆக்கிவிட்டது.
   தொழில்நுட்பத்தின் வசதிக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகி வருகிறோம். நமது சந்ததியினர் தொழில்நுட்பத்தின் முழுநேர அடிமைகளாய் மாறவும் சாத்தியக்கூறு உள்ளது என்றால் அது மிகையாகாது.
   நமது தேவைக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அது நமக்கு அடிமை. இல்லையென்றால் அதற்கு நாம் அடிமை.
   - க. நந்தினி ரவிச்சந்திரன்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai