Enable Javscript for better performance
நேர்மையே பெரும் சொத்து! 31- Dinamani

சுடச்சுட

  
  im5

  தன்னிலை உயர்த்து!
  ஒரு பன்னிரண்டு வயது மாணவன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் அந்தப் பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரி ஆய்விற்காக வந்தார். அவர் ஐந்து ஆங்கிலச் சொற்களைக் கூறி அதனை அனைவரையும் எழுதச் சொன்னார். அதில் நான்கு சொற்களைச் சரியாக எழுதி, ஐந்தாம் சொல்லான Kettle என்பதைத் தவறாக எழுதினான் அந்த மாணவன். அவனது ஆசிரியர், அருகிலிருக்கும் மாணவனைப் பார்த்துச் சரியாக எழுத சைகை காண்பித்தார். அந்த மாணவன் ஆசிரியரின் செயல்பாட்டை உணரவில்லை. பிறரைப் பார்த்து எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் விரும்பவில்லை. நேர்மையாய் தனது மனதிற்கு எது சரியெனப்பட்டதோ, தனது அறிவிற்கு எது புரிந்ததோ அதை மட்டும் எழுதினான். அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மாணவன். நேர்மை என்பது ஞானம் என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம் என்ற அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சனின் வரிகளுக்கேற்ப அவன் பள்ளிபருவத்திலேயே ஞானம் பெற்றான். காந்தி, தனது நேர்மையாலும், உண்மையாலும், பிற்காலத்தில் மகாத்மாவானார். தனி வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் நேர்மையாய் வாழ்ந்ததால் தேசத்தின் தந்தையானார். 
  நேர்மை என்பது உண்மையான உண்மை; அது மனித வாழ்வின் உன்னதம்; உயரிய வாழ்க்கையின் குறியீடு; மனிதனின் மிகப் பெரிய சொத்து; மனிதத்தின் மாபெரும் வலிமையும் அற்புதமும் நேர்மையே. வாழ்வின் உச்சம் தொட நினைப்பவர்களின் கலங்கரை விளக்கு; தலையாய மனிதப் பண்பு; பண்புகளின் மகத்துவம், நேர்மை. 
  "நேர்மை ஒரு விலை உயர்ந்த பரிசு, அதனை மலிவானவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது'" என்பார் அமெரிக்க நாட்டு தொழிலதிபர் வாரன் பஃபெட் . 
  சந்திரகுப்தரின் தலைமை அமைச்சராக இருந்தவர் சாணக்கியர். ஒருநாள் சாணக்கியர் அரசவைக் கூட்டத்தில், "மன்னா! நம் நாட்டு மக்களில் பலர் ஏழ்மை நிலையில், கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை வழங்கி உதவ வேண்டும்'" என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு சந்திரகுப்தர், "தங்களது கருத்தை வரவேற்கிறேன். மேலும் அந்த பொறுப்பை தங்களிடமே ஒப்படைக்கிறேன்'' என்றார். அதன்படி ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகள் சாணக்கியர் வீட்டில் அடைக்கலமானது.
  சாணக்கியரின் வீடோ ஆடம்பரம் இல்லாத சாதாரண வீடு. நிறைய கம்பளிப் போர்வைகள் ஒரு சாதாரண வீட்டில் இருந்ததை அறிந்த திருடர்கள் அதைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள். நள்ளிரவில் கடுங்குளிரில் மூன்று கொள்ளையர்கள் சாணக்கியர் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கே கம்பளிப் போர்வைகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையை போர்த்திக்கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஒரே ஆச்சரியம். 
  திருடர்கள், தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், "ஐயா, நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிப் போர்வைகளைத் திருட வந்தோம். உங்கள் வீட்டில் இவ்வளவு கம்பளிகள் குவிந்திருக்கும்போது, நீங்களும், உங்கள் தாயாரும் பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே! இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?''" என்றான். அதற்கு சாணக்கியர், "அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருட்கள். அவற்றை எப்படி எங்கள் உபயோகத்திற்கு பயன்படுத்த முடியும்?'' என்றார். 
  நேர்மையின் மறு உருவாய்த் திகழ்ந்த சாணக்கியரின் கால்களில் விழுந்து, "இனிமேல் திருடுவதில்லை' என முடிவெடுத்தனர் திருடர்கள். 
  கொளப்பட்டோம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
  துளக்கற்ற காட்சி யவர்
  என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப தன்னை நம்புகின்ற அரசனையும், குடிமக்களையும் ஏமாற்றாமல் வாழ்ந்தவர் சாணக்கியர். நேர்மை என்னும் விளக்கு தன்னை மட்டும் வெளிச்சப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக தன்னை அணுகும் ஒவ்வொரு பொருளையும், அதன் உண்மையை உணர்த்துவதோடு அதை வெளிச்சப்படுத்திவிடும். 
  நேர்மை, உயிருக்கு உயிரான உறவுகளின் அச்சாரம்; மகத்துவமான பண்பு. தனக்கு நேர்மையாக இருப்பது உன்னதம், தன்னை நேசிப்பவர்களிடத்தில் நேர்மையாக இருப்பது மகத்துவம். அத்தகைய நேர்மையானவர்களே, இச்சமூகத்தை மாற்றியமைக்க வந்த இறைத்தூதர்கள். 
  நேர்மை ஒரு சிறந்த கொள்கை. அதை எத்தகைய சூழ்நிலையிலும் விட்டுவிடாமல் இருப்பது மாபெரும் வெற்றியைத் தரும். அதற்கான ஆற்றலையும் கொண்டு வரும். விரைவில் பணக்காரனாக வேண்டும், மற்றவர்களைவிட விரைவில் முன்னுக்கு வரவேண்டும் என்ற நோக்கோடு உழைக்காமலேயே உயர நினைப்பவர் பலர். அவர்கள் நூலில்லாமல் பறக்கும் பட்டங்கள். எவ்வளவு உயரப் பறந்தாலும், அவர்கள் விரைவில் வீழ்வதும், மறைவதும் உறுதி. திருவள்ளுவர் "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கத்தினை" எவ்வாறு சிந்திக்கச் சொல்கிறாரோ அது போல், நேர்மையற்றவனின் செல்வமும் விழலுக்கு இரைத்த நீரைப் போலவே மறையும், நீர்க்குமிழிபோல் அவர்களது வாழ்வும் அழியும். மொத்தத்தில் குறுக்கு வழியில் பெறும் வெற்றி என்பது தோல்வியே. 
  குழந்தைகளிடம் பண்புகளை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் பெற்றோரே. நற்பண்புகளுக்கு உரமிடும் பெற்றோர் அற்புதமான கனிகளையே தங்கள் குழந்தைகளிடம் பெறுகின்றனர். மாறாக குழந்தைகளின் தீய பண்புகளைக் களைய மறுக்கின்ற பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளால் காயப்படுவது உறுதி. ஒரு குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த இளைஞனிடம், " உனது திருட்டு குற்றத்திற்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை தருகிறேன். உனது கடைசி ஆசை என்ன?'' என்ற நீதியரசரின் கேள்விக்கு, "அத்தண்டனையின் சரிபாதியை எனது பெற்றோருக்கு கொடுங்கள்'' என்றான் அந்த குற்றவாளி. ஆச்சரியமாய்ப் பார்த்தார் நீதியரசர். "ஆமாம் ஐயா! நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது நண்பர்களிடம் திருடினேன். அதை எனது வீட்டிற்குக் கொண்டு வந்தேன். எனது பெற்றோர் என்னைக் கண்டிப்பதற்கு பதிலாக திருட்டுப் பொருள் எனத் தெரிந்தும் அதனைப் பெற்றுக் கொண்டனர். அவர்களால்தான் இன்று பெரிய திருடனாகி இந்நிலைக்கு ஆளானேன். எனவே நேர்மையற்ற வழியில் நான் வாழ்ந்ததற்குத் துணையாய் இருந்தவர்கள், எனது பெற்றோரே! அதனால் தான் அவர்களுக்கும் தண்டனை வழங்குங்கள்'' என்றான் அக்குற்றவாளி இளைஞன். நேர்மையின்மை ஒரு மனிதனை அதலபாதாளத்தில் தள்ளிவிடுகிறது. நேர்மையே ஒரு மனிதனை மென்மேலும் உயர்த்துகிறது. பன்மடங்கு பலப்படுத்துகிறது. ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அடிகோலுகிறது. 
  யார் ஒருவர் சின்னச் சின்ன செயல்பாடுகளில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கின்றார்களோ, அவர்கள் பெருஞ்செயல்களிலும் நேர்மையாகவே இருக்கின்றார்கள். மாறாக, சிறுசிறு செயல்பாடுகளில் நேர்மைக்கு மாறாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் இருப்பவர்களால் பெருஞ்செயல்களிலும் நேர்மையாக இருக்க முடிவதில்லை. "நேர் வழியில் அடைய முடியாததை குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது' என்றார் ஜெர்மன் நாட்டு மேதை கதே.
  "கிடைத்ததற்கு அரியது இந்த மனித வாழ்க்கை. அதில் ஒரு கொள்கைப் பிடிப்புடனும், விடாமுயற்சியுடனும் நேர்மையான செயலில் ஒருவன் ஈடுபட்டால், வாழ்க்கையின் எல்லாத் துன்பங்களிலிருந்தும் ஒருவன் விடுபடுவான்'" என்ற புத்தரின் வரிகளுக்கேற்ப ஒரு நேர்மையான வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளமாகும். 
  நேர்மையான மனிதர்கள் "நாமார்க்கும் குடியல்லோம், நமனை யஞ்சோம்'" என்ற அப்பரின் வரிகள் சொன்னது போல் எவருக்கும் அஞ்சுவதில்லை. எமனுக்கும் அஞ்சுவதில்லை. ஆதலால் அவர்கள் எதற்கும் கவலைப் படுவதில்லை. தவறு செய்பவர்கள் அடிக்கடி அஞ்சுகிறார்கள். ஒரு முறை செய்த தவறுக்கு ஓராயிரம் முறை அஞ்சுவர். அதனால் அவர்களுக்கு உடல் பாதிப்பதோடு உள்ளத்திலும் பாதிப்பு ஏற்படுவதால் விரைவில் உடல்நலம் குன்றுவர். தவறு செய்யாது நேர்மையாக வாழ்பவர்கள் பயமின்றி வாழ்வதால் அவர்கள் நீண்ட காலம் நோயின்றி வாழ்வர். 
  "உலகின் தலைசிறந்த மனிதர்களின் பண்பு நேர்மை. "எல்லா செயல்பாடுகளிலும், நேர்மையாக இரு. உனது தொழிலில் நேர்மையாய் இரு. இல்லையெனில் நேர்மையுள்ள தொழிலுக்கு மாற்றிக்கொள்'" என்றார் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன். அவர் சிறுவயதில் ஒரு சேமிப்பு கிடங்கில் எழுத்தராகப் பணியாற்றினார். ஒருநாள் அக்கிடங்கிற்கு வந்த பெரியவர், ஆறு டாலரை அதிகமாக கொடுத்துவிட்டார். அதை தவறுதலாக ஆப்ரகாம் லிங்கனும் கணக்கில் சேர்த்துவிட்டார். அன்று இரவு பணி முடிந்ததும் கணக்கினைச் சரிபார்த்தபோது அதில் ஆறு டாலர் அதிகமாக இருந்தது. அதற்குச் சொந்தமானவர் காலையில் வந்திருந்த பெரியவர் என்பதை அறிந்தார். அப்பெரியவரது மனம் படும்துயரத்தினை உணர்ந்தார். கடுங்குளிரில், பனிவிழும் இருளில் அந்தப் பெரியவரின் வீட்டிற்குச் சென்றார். ஆறு டாலருக்கான நாணயங்களைத் திருப்பித் தந்தார், நாணயம் மிக்கவரானார் ஆப்ரகாம் லிங்கன். நேர்மையான அவரது வாழ்க்கைப் பயணத்தில் பல துன்பங்களையும், தோல்விகளையும் சந்தித்தாலும் இறுதியில் அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதியாக உயர்ந்தார். 
  நேர்மையற்ற வாழ்க்கை அழியும் வாழ்க்கை;
  நேர்மையான வாழ்க்கை, ஆனந்த வாழ்க்கை!
  (தொடரும்)
  கட்டுரையாசிரியர்:
  காவல்துறை துணை ஆணையர், 
  நுண்ணறிவுப் பிரிவு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai