மிச்சமெல்லாம் உச்சம் தொடு! 4 - விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

1939-ஆம் ஆண்டு, ஒரு பள்ளியில் ஒரு மாணவன் வகுப்பிற்கு தாமதமாக வந்தான், அப்போது அவனது கணித ஆசிரியர் கணிதப் பாடத்தை நடத்தி முடித்திருந்தார், அதுமட்டுமல்ல, வீட்டுப் பாடத்திற்கு
மிச்சமெல்லாம் உச்சம் தொடு! 4 - விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

1939-ஆம் ஆண்டு, ஒரு பள்ளியில் ஒரு மாணவன் வகுப்பிற்கு தாமதமாக வந்தான், அப்போது அவனது கணித ஆசிரியர் கணிதப் பாடத்தை நடத்தி முடித்திருந்தார், அதுமட்டுமல்ல, வீட்டுப் பாடத்திற்கு என்ன கணக்கை செய்ய வேண்டும் என்று 2 கணக்குகளை கரும்பலகையில் எழுதிப்போட்டிருந்தார். வகுப்பில் என்ன நடந்தது என்று அந்த மாணவனுக்குத் தெரியவில்லை. அந்த மாணவன் இந்த வீட்டுப் பாடத்தை எழுதி வைத்துக் கொண்டான். வீட்டிற்குச் சென்று அந்த கணக்கைப் போட ஆரம்பித்தான். அது மற்ற கணக்குகளை விட மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் தான் படித்த கணிதத்தை வைத்தும், நூலகத்தில் இருந்து புத்தகத்தை படித்தும் வீட்டுப்பாடத்தை 3 நாள் தாமதமாக முடித்தான். தாமதமாகிவிட்டதே என்று பயந்து கொண்டு கணித ஆசிரியரிடம் சென்று, ""வீட்டுக் கணக்கை முடித்துவிட்டேன் சார், ஆனால் தாமதமாகிவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள்'' என்று சொன்னான். 
"என்ன வீட்டு கணக்கை முடித்து விட்டாயா, அந்த கணக்கிற்கு தீர்வு கண்டுபிடித்து விட்டாயா?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அந்த ஆசிரியர். மாணவனுக்குப் புரியவில்லை. ""முடிந்தவரை செய்திருக்கிறேன் சார்'' என்று சொன்னான் அந்த மாணவன். ஆசிரியர் அதை ஆழமாகப் படித்துப் பார்த்து விட்டு, அந்த மாணவனை கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டு சொன்னார்: "இதுவரை இந்த கணக்கிற்கான தீர்வை இந்த உலகில் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதை மாணவர்களுக்கு சொல்லித்தான் நீங்களும் முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்று வகுப்பில் எழுதிப்போட்டேன். ஆனால் யாராலும் தீர்வு கண்டுபிடிக்க முடியாத கணக்கு என்று நான் மாணவர்களிடம் சொன்னதை நீ தாமதமாக வந்ததால் கேட்கவில்லை போலும், அதனால் தான் இதற்கு நீ தீர்வு கண்டு பிடித்திருக்கிறாய். முடியாது என்று சொன்னதை, நம்பியவன் ஒருவனும் இதுவரை இதற்கு தீர்வு காணவில்லை. ஆனால் முடியும் என்ற உன் நம்பிக்கை தான், தீர்வே இல்லாததற்கு தீர்வை கண்டுபிடித்திருக்கிறது. தீர்வு சொல்ல இயலாத கணக்கிற்கு விடை கண்டுபிடிக்கக் காரணமாக இருந்திருக்கிறது'' என்று சொல்லி அந்த மாணவனின் தீர்வை ஒரு சர்வதேச கணித ஆராய்ச்சி கட்டுரையாகச் சமர்ப்பிக்கச் செய்தார். 
அந்த கணக்கைக் கொடுத்த ஆசிரியர் பெயர் நேமேன். யாராலும் கண்டுபிடிக்க முடியாத கணக்கிற்குத் தீர்வை கண்டு பிடித்த மாணவன் தான் லீனியர் புரோகிராமிங்கின் தந்தை என்று அழைக்கப்படும் ஜார்ஜ் பி டான்டிஜிக் (George B Dantzig,  Father of Linear Programming) என்பவர். அமெரிக்காவின் பெர்கிலியில் உள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தவர். விமான சேவை நிறுவனங்களும், கப்பல் கம்பெனிகளும் இன்றைக்கும் இவர் கண்டுபிடித்த தீர்வைக் கொண்டுதான் எவ்வளவு விமானங்கள், கப்பல்கள் ஏற்றப்பட்ட சரக்குகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்குவதற்குத் தேவை என்பதையும், எவ்வளவு சீக்கிரம், எந்தப் பாதையில், குறைந்த செலவில் செல்ல முடியும் என்பதைத் தீர்மானிக்கின்றன இன்று வரை. 
"முடியாது' என்ற சொல்லைக் கேட்டு, அதை நாம் ஆமோதிக்கும் போது, நமது எண்ணங்கள் முயற்சி செய்ய மறுக்கிறது. உனது முயற்சி தோற்கலாம். ஆனால் முயற்சி செய்வதில் தோற்கக் கூடாது.
நம்மில் எத்தனை பேர், ஒரு முறை முயற்சி செய்து விட்டு, அது தோல்வியில் முடிந்தால், நம்மால் முடியாது என்று ஒதுங்கி கொள்ளும் மனநிலையில் இருக்கிறோம். பழமையான, காலவதியாகிப்போன மூட நம்பிக்கைள் இன்றும் நம்மை சாதனையின் விளிம்பில் கூட செல்வதற்கு அனுமதிப்பதில்லை. முடியாது என்று எண்ணப்படுவதை என்னால் முடியும் என்று நம்பி முயற்சிப்பதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்? "அடுத்தவர்களால் முடியாததினால் என்னாலும் முடியாது' என்று நம்பும் எத்தனை பேர் இன்னும் நம்மில் உண்டு. 
"எதை உன்னால் உணர முடிகிறதோ, எதை நம்புகிறாயோ, அதை உன்னால் செய்து முடிக்க முடியும் என்று நீ நம்பினால், தோல்வி என்பது கற்றலின் முதல் படியாகும்.'
யார் என்ன சொன்னாலும், நீ நம்பிய முயற்சியை விட்டுவிடாதே. போராட்டம் தான் வாழ்க்கையின் அனுபவம்; போராட்டம் தான் வாழ்க்கையின் வெற்றி என்பதை நீ முதலில் நம்பு. காலம் நமக்கு முன்பு ஏற்படுத்திய தவறான நம்பிக்கைகளை தகர்த்து எறி. நம்மைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் கற்பனை கட்டுகளைத் தாண்டு, நீ வெற்றி பெறுவாய். 
கோழி தன் குஞ்சை ஒரு கால கட்டத்திற்கு பிறகு பிரிந்து தனி வாழ்க்கை வாழ விரட்டுகிறது. தன்னைச் சார்ந்து தன் கோழி குஞ்சை வாழ வைப்பதில்லை. கழுகு தன் குஞ்சை கூட்டில் இருந்து தள்ளி விடும். சிறிய குஞ்சு அதனால் பறக்க முடியவில்லை என்றால் மீண்டும் அதைப் பிடித்து கூண்டில் விடும். மீண்டும் குஞ்சு பறக்கும் வரை, கழுகு தள்ளி விட்டு கொண்டே இருக்கும். இது தொடரும். கோழியாவது தரையில் வாழுகிறது. கழுகு உயர்ந்த மரத்தில், மலையில் இருக்கும். அதில் இருந்து குஞ்சை கீழே தள்ளி விடுவது, பயிற்சி... பயிற்சி... மற்றும் பயிற்சியே. 
வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டிய உந்துதல். "யாரையும் சார்ந்து இருப்பதில் இல்லை வெற்றி. போராடிப் போராடி, தோல்வியை அனுபவித்து பின் பெறுவது தான் நிலையான வெற்றி." இது தான் இயற்கையின் நியதி. வெற்றி என்பது இறுதி புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளிகள். வெற்றி அனைவருக்கும் கிடைக்கும். ஆனால் வெற்றியில் தொடர்ந்து பயணப்படவேண்டும் என்றால், தோல்வி என்ற இடைப்புள்ளிகளை ஆரம்பத்தில் அனுபவித்து, ரசித்தால் தான் வெற்றி என்ற இறுதிப்புள்ளியில் தொடர்ந்து பயணப்பட முடியும். 
வாழ்வில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் எத்தனை பேரை உங்களால் நினைவு கூர முடியும். உங்கள் தாய், தந்தையின் போராட்ட வாழ்வும், தியாகமும் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் அண்ணன், அக்காவின் தியாக வாழ்வும், போராட்ட வாழ்வும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவர்களது வெற்றியும், தோல்வியும் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? சிந்தித்துப் பார்ப்போமா? 
உங்களுக்கு தெரிந்த உச்சம் தொட்ட ஆசிரியர்கள், நண்பர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலதிபர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், சமூக சேவகர்கள், சினிமா நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் தலைவர்களை நினைவு கூருங்கள். 
உச்சம் தொட்டவர்களில் எத்தனை பேரை வரலாறு ஞாபகம் வைத்திருக்கிறது? உச்சம் தொட்டவர்களில் எத்தனை பேர் சிலையாக மாறியிருக்கிறார்கள்? உச்சம் தொட்டவர்களில் மக்கள் மனங்களில் என்றென்றும் நீடித்த நிலைத்த புகழைப்பெற்றவர்கள் எத்தனை பேர்? எதற்காக இந்த வரலாறு அவர்களை ஞாபகம் வைத்திருக்கிறது? எத்தனை பேர் தான் வாழும் சமூகத்தைத் தாண்டி, நாட்டைத் தாண்டி, மதத்தைத் தாண்டி, இனத்தைத் தாண்டி, வாழும் காலத்தைத் தாண்டி காலம் கடந்து நினைவு கூரப்பட்டிருக்கிறார்கள். கோடானு கோடி மக்களில், ஒரு சிலர் மட்டுமே காலம் கடந்தும், நாடுகள் கடந்தும் இந்த உலகில் நினைவு கூரப்படுகிறார்கள். ஒரு சில ஆயிரம் பேர் தனது நாட்டில், தான் வாழும் சமூகத்தில் நினைவு கூரப்பட்டிருப்பார்கள். 
நண்பர்களே... நீங்களும் ஒரு நாள் இந்த சமூகத்தில், நம் நாட்டில், இந்த உலகத்தில் நினைவு கூரப்படும் தலைவர்களாக மாறுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா? உங்களில் எத்தனை பேருக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது? எத்தனை பேருக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் தலைவர்களாக அல்லது வரலாறு நம்மை நினைவு கூரும் வகையில் நம் வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது?
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@gmail.com 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com