வாடகை மின்சார பைக்!

சைக்கிளை வாடகைக்கு விடும் கடைகள் நம் எல்லாருக்கும் தெரியும். பைக்... அதுவும் சுற்றுச்சூழுலுக்குப் பாதிப்பில்லாத மின்சார இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் கடை...
வாடகை மின்சார பைக்!

சைக்கிளை வாடகைக்கு விடும் கடைகள் நம் எல்லாருக்கும் தெரியும். பைக்... அதுவும் சுற்றுச்சூழுலுக்குப் பாதிப்பில்லாத மின்சார இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் கடை... இல்லை...நிறுவனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 
தில்லியை தலைமையகமாகக் கொண்ட ங்ஆண்ந்ங் என்ற நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் முயற்சியை 2017 - ஆம் ஆண்டு அமிர்தசரஸில் தொடங்கியது. தொடங்கும்போது அந்த நிறுவனத்திடம் இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 70. இன்று 460 பைக்குகளுக்கு மேல் வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. 
இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் இர்ஃபான் கான். "வித்தியாசம்... வித்தியாசமா யோசிக்கிறாங்கப்பா' என்று சிலரைப் பற்றிச் சொல்வோமே... அந்த சிலருள் இவரும் ஒருவர்.
இர்ஃபான் கான் படித்தது மாற்று மருத்துவத்தில் ஆராய்ச்சிப் படிப்பு. மனிதர்களைக் குணப்படுத்த வேண்டியவர், அதற்கு முன்பாகச் சுற்றுச் சூழலைக் குணப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதன் விளைவுதான் இந்த eBike நிறுவனம். இது தொடர்பாக இர்ஃபான் கான் கூறியது...

"நான் 2014 இல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தன்னார்வ அமைப்பைத் தொடங்கினேன். சுற்றுச்சூழல் மாசினால் மிகவும் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் தில்லியின் சுற்றுச்சூழலை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினேன். நிறைய மாணவர்கள், அலுவலகப் பணியாளர்களின் ஆதரவோடு அதை நடத்தினேன். அவர்களுடைய தொடர்பு அதனால் எனக்குக் கிடைத்தது. இருந்தும் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் போதாது என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. அதனால்தான் நான் eBike நிறுவனத்தைத் தொடங்கினேன். 
அதற்குத் தேவையான பணத்தை நண்பர்களிடம், பெற்றோரிடம், உறவினரிடம் பெற்றேன். அமிர்தசரஸில் தொடங்கப்பட்ட நிறுவனம் இப்போது ஆக்ரா, தில்லி, ஜலந்தர், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலும் கிளை விரித்திருக்கிறது. 
நாங்கள் ரூ.83 ஆயிரம் விலையுள்ள மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்துகிறோம். இந்த மின்சார வாகனம் லித்தியம் அயன் (Li-on) பேட்டரியால் இயங்கக் கூடியது. இந்த வாகனங்கள் இயங்குவதால் புகை வருவதில்லை. காற்றில் மாசு கலப்பதில்லை. 
இந்த வாகனத்தின் குறைந்தபட்ச வாடகை ரூ.20. இந்த வாடகைக்கு நான்கிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டலாம். ஒரு நாளைக்கு ரூ.200 வாடகை. ரூ.5000 மாத வாடகைக்கும் இருசக்கர வாகனங்களைத் தருகிறோம். 
இந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகள், பொருள்களை விநியோகம் செய்யும் டெலிவரி ஏஜெண்ட்கள். ஒரு பெட்ரோலால் இயங்கும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதை ஓட்டுவதைவிட , இந்த மின்சார இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்துவது லாபம் என்பதால் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகி வருகிறார்கள். பெட்ரோலால் இயங்கும் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.400 வாடகை தர வேண்டும். ரூ.200 க்கு பெட்ரோல் போட வேண்டும். ஒரு நாளைக்கு ரூ.600 செலவழிக்க வேண்டும். எங்களுடைய மின்சார இருசக்கர வாகனத்தின் வாடகையும் குறைவு. பெட்ரோலும் போடத் தேவையில்லை. எங்களால் பல சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில் இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். வாகனத்தை வாடகைக்கு எடுப்பவர் அவருடைய சொந்த இடத்தில் சார்ஜ் செய்து கொண்டால் ஒரு முறை சார்ஜ் செய்ய ரூ.20க்கும் மேல் மின்சாரக் கட்டணம் ஆகாது. ஜெய்ப்பூரில் ஒன்று, தில்லியில் ஒன்று, அமிர்தசரஸில் இரண்டு, ஆக்ராவில் ஒன்று, ஜலந்தரில் ஒன்று என எங்களுடைய சார்ஜிங் ஸ்டேஷன்கள் தற்போது ஆறு இடங்களில் உள்ளன. இந்த மின்சார வாகனத்தில் உள்ள பேட்டரியைத் தனியே எடுத்து சார்ஜ் செய்யலாம் என்பதால், சார்ஜ் செய்த கூடுதல் பேட்டரியை வாகனத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளலாம். 

ஏற்கெனவே உள்ள பெட்ரோல் நிலையங்களில் பேட்டரியை சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்தவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் இப்போது 80 பேர் வேலை செய்கின்றனர். மின்சார இருசக்கர வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்தப்படுத்தும் நிலை வந்தால், காற்றில் கலக்கும் கார்பன் மோனாக்ஸைடின் அளவு 5 இலிருந்து 6 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது. அதை நோக்கித்தான் எங்கள் பயணம் உள்ளது'' என்றார்.
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com