Enable Javscript for better performance
உள்ளத்தனைய சாதனை!- Dinamani

சுடச்சுட

    

    உள்ளத்தனைய சாதனை!

    By DIN  |   Published on : 08th January 2019 10:00 AM  |   அ+அ அ-   |    |  

    im4

    சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளமைப் பருவத்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு, மரணத்தை எதிர்கொண்டவர், தனது மன உறுதியால் மாரத்தான் ஓட்டத்தில் தொடர் சாதனை படைத்து வருகிறார்.
     வாழப்பாடி அருகேயுள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுரளி. பாலமுரளி கடந்த பத்தாண்டுகளாக வாழப்பாடியில் கணினியில் டிசைனராக சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நீதித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
     30 ஆவது வயதில் பாலமுரளிக்கு தீராத தலைவலி ஏற்பட்டது. காது கேட்கும் திறனும் குறைய ஆரம்பித்தது.
     கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு "அக்குவாஸ்டிக் நீயூரோ பைப்ரோமா' எனும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மூளைக்கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
     மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையே வலது காதின் செவி நரம்பில் வளர்ந்த கட்டி பெரிதாகி மூளையை அழுத்துவதால், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, தலைவலி மற்றும் இதர உடல் உபாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
     உடலில் எந்தப் பகுதியிலும் தரும் சிறு அழுத்தம் தாங்காமல் கூட மூளைக்கட்டி உடைவதற்கு வாய்ப்புண்டு. அப்படி ஏற்பட்டால் உயிரிழப்பைத் தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். இதனால், மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார்.
     தனியார் மருத்துவமனையில், 3 நாள்கள் தொடர் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்குப் பின் 11 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தொடர்ந்து 8 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து மூளையில் இருந்த கட்டியை அகற்றி, அவரை காப்பாற்றியுள்ளனர்.
     வலது காதின் செவி நரம்பில் கட்டி இருந்ததால், கட்டியை அகற்றும்போது செவி நரம்புகளும், தண்டுவடத்திலிருந்து வலது முகத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளும் வெட்டுப்பட்டதால், வலது காதும், முகத்தின் வலது பகுதியும் உணர்விருந்தும் செயலற்றுப் போயின. வலது கண்ணும் இமைக்காமல் போனது.
     6 மாத ஓய்வு மற்றும் பிசியோதெரபி சிகிச்சையால் ஓரளவு மீண்டார்.
     உடலுக்கு எந்த அசைவும் கொடுக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார்.
     சமூக ஊடகங்களில் பொழுதைக் கழித்தபோது, முகநூலில் "உள்ளத்தனைய உடல்' என்ற முகநூல் குழுவில் பலரது சாதனை பதிவுகளைப் பார்த்ததால், நாமும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என, பாலமுரளிக்கு மனதில் உறுதி ஏற்பட்டுள்ளது. இந்த முகநூல் குழுவில் தன்னையும் இணைத்துக் கொண்ட இவர், அதிகாலை நேரத்தில் மெதுவாக நடக்கப் பழகினார். சிறிது ஓடிப் பார்த்தார். அது 25-க்கும் அதிகமான மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை படைப்பதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது.
     இதுகுறித்து மாரத்தான் சாதனையாளர் பாலமுரளி கூறியதாவது:
     "உடல் உறுப்புகள் செயலிழந்தும் அறுவைச் சிகிச்சைக்கு பின் வீட்டிலேயே முடங்கிப்போகாமல், ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினேன். அதனால் அடிப்படையே தெரியாமலேயே ஓட ஆரம்பித்தேன். அறுவைச் சிகிச்சைக்குப் பின், மெதுவாக நடக்கத் தொடங்கி பயிற்சி பெற்று தூரத்தைப் படிப்படியாக அதிகரித்தேன். உடலுக்கு எந்தப் பிரச்னையுமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
     முகநூல் நண்பர்களின் வழிகாட்டலில், பதிவுத்தொகை இல்லாத, "சென்னை டவர் டிவிஸ்டர்' நடத்திய மாரத்தான் போட்டியில் 10 கி.மீ. பிரிவில் - 2017 ஏப்ரல் 9-இல் பங்கேற்றதில் இருந்து எனது மாரத்தான் பயணம் ஆரம்பமானது.
     அடுத்து "சேலம் ரன்னர்ஸ் இந்தியா' குழுவினர் ஏற்காடு மலை அடிவாரத்தில் நடத்திய 10 கி.மீ. மாரத்தானை 1 மணி நேரத்தில் ஓடி முடித்தேன். இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி.ஆர்.ஹெச்.எம்., சென்னையில் நடத்திய அரை மாரத்தானில் (21 கி.மீ) பங்கேற்றேன்.
     அடுத்தது, 2017 செப்டம்பர் 10-இல், "சென்னை டிரையல் மாரத்தான்' (21 கி.மீ.), அக்டோபர் 1-இல் கோயம்புத்தூர் "வோடோபோன் மாரத்தான்', நவம்பர் 12-இல் "கொச்சி ஸ்பைஸ் கோஸ்ட் மாரத்தான்', டிசம்பர் 3 - இல் "சென்னை விப்ரோ மாரத்தான்', 2018 ஜனவரி 7 -இல் "முத்து மாரத்தான்' போட்டிகளில் குறித்த நேரத்தில் இலக்கை அடைந்தேன்.
     சேலம் கொங்கணாபுரத்தில் எனது 6-ஆவது அரை மாரத்தான் - 2018 ஜனவரி 7இல், 21.1 கி.மீ தூரத்தைக் கடந்து, எல்லையை 1:57: 21 மணிக்குள் தொட்டபோது, இதுவே எனது தனிப்பட்ட சிறந்த நேரமாக (நன்க்ஷ 2) பதிவானது. இதில் எனது மகன் தரணீஸ் உடன் பங்கேற்றது மறக்க முடியாத நிகழ்வாகிப்போனது. ஜனவரி 21-ஆம் தேதி சேலம் "மெகா மாரத்தான்', 27-இல் கொடைக்கானல் மலை "அல்ட்ரா 21 கி.மீ. மாரத்தான்', பிப்ரவரி 11-இல் புதுச்சேரி "ஆரோவில் மாரத்தான்', பிப்ரவரி 18-இல் ஏற்காடு, ஏப்ரல் 22-இல் ஈரோடு ரன், 29-இல் ஊட்டி அல்ட்ரா 30 கி.மீ. தூர மாரத்தான், ஜூலை 15-இல் சென்னை ரோலிங் ரன் மாரத்தானில் அதிகபட்சமாக 32.1 கி.மீ.தூர மாரத்தானிலும் பங்கேற்று குறித்த நேரத்திற்குள் எல்லையைத் தொட்டு வெற்றிக் கோப்பைகளைப் பெற்றேன்.
     எனது அதிகபட்ச தூர ஓட்டமாக, ஆகஸ்ட் 26- இல் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஏர்டெல் மாரத்தான் அமைந்தது. 42.195 கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் கடந்தேன். இடைவிடாது, கடந்த மாதம் கோவை புதூரில் நடைபெற்ற பசுமை மாரத்தானிலும் பங்கேற்றேன். மாரத்தான் போட்டிக்கு பயிற்சி, வெளியூர்களில் முகாமிட்டு பங்கேற்பு என்ற நிலையிலும், எனது சுயதொழிலையும் விட்டுவிடாமல் எனக்கென தனி வாடிக்கையாளர்களைப் பெற்று, நிலையான வருவாய் ஈட்டுகிறேன். வாழப்பாடி அரிமா சங்கத்தில் என்னை இணைத்துக் கொண்டு என்னால் முடிந்த அளவுக்கு இயலாதோருக்கு சமூக சேவைகளும் செய்து வருகிறேன்'' என்றார்.
     பி.பெரியார்மன்னன்
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp