சுடச்சுட

  
  JOB-SEARCH

  காட்டில் வசிக்கும் சிங்கத்திற்கு 250 கி.மீ சுற்றளவுக்குள்ளேயே அதன் வாழ்க்கை இருக்கும். அதைப் போல புலிக்கு 100 கி.மீ. சுற்றளவுக்குள்ளேயே அதன் இயக்கம் இருக்கும். இவ்வாறு ஒவ்வோர் உயிரினத்திற்கும் அதற்கென வாழும் சுற்றளவை இயற்கையே தீர்மானித்து வைத்துள்ளது. ஆனால் மனித இனத்திற்கு மட்டும் அத்தகைய வரையறை எதுவுமில்லை. காடு, மலை, கடல் கடந்து, விண்ணையும் தாண்டி மனிதர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். மண்ணுக்கடியில் அகழ்வாராய்ச்சி செய்வோர் சிலர்; விண்ணைத் தாண்டி மிதக்கும் விண்வெளி வீரர்கள் சிலர். இவை அனைத்தும் நமக்கு சாத்தியமானதிற்கு காரணம் தேடல் ஒன்றே.
   நாம் ஒவ்வொருவரும் நமக்கான சரியான இடத்தை தேட வேண்டும். அந்த இடம் நம்மை மட்டும் அல்லாது நமது சமூகத்தையும் உயர்த்துவனவாய், நம் வாழ்வை ஒளிரச் செய்வனவாய் இருக்க வேண்டும்.
   எனவே இயற்கை நமக்கு அளித்திருக்கும் இத்தகைய வாய்ப்பை வீணாக்காமல், சரியான, பொருத்தமான வேலையைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நம் வாழ்வின் ஓர் அங்கமாக விளங்கும் வேலை, நமக்கு பிடித்ததாகவும், பொருத்தமானதாகவும் இருந்தால்தான் வாழ்க்கை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும்.
   பொருத்தமான வேலையைத் தேடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
   நீங்கள் ஏற்கெனவே வேலை பார்ப்பவர் என்றால் அந்த வேலை திருப்தி அளிக்காததற்கு காரணம் என்ன? செய்யும் வேலையா, சக பணியாளர்களா, பணிபுரியும் இடமா அல்லது பணியாற்றும் துறையா என்பதை முதலில் சரியாக ஊகிக்க வேண்டும்.
   எந்த நண்பரின் வேலை உங்களை ஈர்க்கிறது? எந்த அறிவு சார்ந்த பணி உங்களுடைய ஆர்வத்தை தூண்டுகிறது? என்பதை ஆராய வேண்டும்.
   நீங்கள் பார்த்த பணிகளிலேயே எந்தப் பணியில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தீர்கள்? அதற்கான காரணம் என்ன?
   இந்த கேள்விகளுக்கான பதில் உங்களுக்குத் தெரியும் போது பொருத்தமான வேலைக்கான தேடலை நீங்கள் தொடங்கிவிடுவீர்கள்.
   பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுக்க சில வழிகள்:
   1. உங்களது திறமையை முதலில் மதிப்பிட வேண்டும். பணிக்கு அப்பாற்பட்டு உங்களது தனித்துவம் என்ன என்பதை உணர்ந்து அதை பணி சிறக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
   2. டாக்டராக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும் என வேலையை அடிப்படையாக கொண்டு தேடாமல் எனது இந்த திறமைக்குரிய வேலை எது, எனது அறிவுக்குப் பொருத்தமான வேலை எது என்று உங்களுக்குப் பொருத்தமான வேலையை அறிய வேண்டும்.
   3. உங்களுடைய அனுபவத்தைத் தோண்டிப் பாருங்கள். கடந்து வந்த அனுபவத்தை புதிய சிந்தனையுடன் பார்த்து உங்களுடைய தனித்துவத்தைக் கண்டறியுங்கள்.
   4. ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். நமக்கு அனுபவமில்லாத பணி குறித்து செவி வழிச் செய்திகள் மூலம் பெற்ற தகவல்களை வைத்து முடிவு செய்யாதீர்கள். அனுபவமிக்க, செய்யும் தொழிலை விரும்பிச் செய்யும் நபர்களிடம் பழகி, கேட்டு முடிவு செய்யலாம்.
   5. எந்த ஒரு வாய்ப்பையும் மறுக்கும் முன் அதனால் ஆய பயன் இன்னதென அறிந்து பின்னர் முடிவு எடுப்பது சிறந்தது.
   6. உங்களுக்குப் பொருத்தமான பணியைக் கண்டறிந்து அதை நெருங்கும் போது, அதை அடைய நீங்கள் எவ்வாறு தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும். பொருத்தமான இடத்தை அடைந்த பின்பு அதை தக்க வைத்துக் கொள்ளவும், மேன்மேலும் உயரவும் உங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தவும் வேண்டும்.
   - க.நந்தினி ரவிச்சந்திரன்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai