Enable Javscript for better performance
வெற்றியின் அடையாளம்...குழு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.- Dinamani

சுடச்சுட

    

    வெற்றியின் அடையாளம்...குழு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

    By DIN  |   Published on : 08th January 2019 10:00 AM  |   அ+அ அ-   |    |  

    im6

    தன்னிலை உயர்த்து! 26
    காட்டில் ஒரு வேடன் வலை விரித்து, அதனுள் தானியங்களைப் பரப்பி காத்திருந்தான். அவனது எதிர்பார்ப்பிற்கும் மேலாக நிறைய புறாக்கள் பறந்து வந்து தானியங்களை கொத்தித் தின்று, அந்த வலையில் அகப்பட்டுக் கொண்டன. அகப்பட்ட புறாக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளத் துடித்தன. சில பறவைகள் வலையைக் கொத்தின. சில பறவைகள் வேகமாகச் சிறகுகளை அடித்து பறக்க முயற்சித்தன. சில பறவைகள் சப்தமிட்டன. பல புறாக்கள் செய்வதறியாது திகைத்தன.
    தூரத்தில் மறைந்திருந்த வேடன் தனது வலையில் நிறைய புறாக்கள் அகப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். அவற்றைப் பிடிக்க அருகே வந்தான். விபரீதத்தை அறிந்த ஒரு புறா, அனைத்து புறாக்களுக்கும் ஓர் ஆணை பிறப்பித்தது. "புறாக்களே! வலையில் சிக்கிய கால்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். வேகமாக சிறகுகளை அடித்து மேலே எழும்ப முயற்சியுங்கள்'' என்றது. இதைக்கேட்ட அனைத்து புறாக்களும் ஒரே நேரத்தில், ஒரே வரிசையில், சிறகுகளை விரித்தன. அதுவரை வலையைவிட்டு எழும்ப முடியாத புறாக்கள் இப்போது வலையுடன் வானத்தில் உற்சாகமாகப் பறந்தன. ஒட்டு மொத்த புறாக்களும் ஒரே நோக்கத்தில், ஒரே சிந்தனையில் கூட்டாய் முயற்சித்த போது வலையே அவற்றிற்கு விமானமானது. ஏமாந்து போனான் வேடன். 
    ஒரு கூட்டியக்கம் (Team Work) என்பது ஒரு குழு தனது மொத்த இலட்சியத்தை நேர்த்தியான வழியில் செலுத்தும்போது வெல்வதாகும். "பலர் ஒன்றிணைந்து ஒரு பணியைச் செய்வதால் அது குழுவாகாது. அனைவரும் நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதுதான் குழு' என்கிறார் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் சைமன் சினெக்.
    ஒரு கூட்டியகத்தின் அடிப்படை ஒத்த சித்தனையேயாகும். இதனை 
    முப்பதுகோடி முகமுடையாள் - உயிர்
    மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
    செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற்
    சிந்தனை ஒன்றுடையாள்...
    என்றார் மகாகவி பாரதி. மகாகவியின் இத்தகைய வரிகள்தாம் சிதறிக்கிடந்த இந்தியர்களை ஒன்றிணைத்தது. அதனால்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கைவசமானது. 
    மனிதர்கள் உடலாலும், உள்ளத்தாலும் வேறுபட்டவர்கள். உடல் வேறுபாடு அவசியமானது. உள்ளத்து வேறுபாடு உணர்வுகளைச் சிதறடிக்கும். உள்ளத்து வேறுபாட்டில் எதிர்மறை எண்ணங்களைக் களைந்தால், நேர்மறை எண்ணங்கள் ஆக்கம் பெறும். அப்போது, குழு என்னும் அற்புதமான ஆலமரத்தில், அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் விழுதுகளாவர். அக்குழுவினரின் அர்ப்பணிப்பு அந்த ஆலமரத்தின் நீள அகலங்களில் வெளிப்படும். 
    தனி மனிதர்களின் இணைப்புதான் குழு. இருப்பினும், ஒரு தனி மனிதனுக்கும், குழுவிற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. தனிமனித வெற்றியில் திறமை மட்டுமே மிளிரும். அது ஓர் ஓட்டப்பந்தய வீரன் வெற்றி பெறுவதைப் போன்றது. ஆனால், ஒரு குழுவின் வெற்றி என்பது கிரிக்கெட் விளையாட்டின் வெற்றியைப் போன்றது. அதில் பந்து வீச்சிலும், மட்டை வீச்சிலும் எவ்வளவு திறமையான வீரர்கள் இருப்பினும், அக்குழுவோடு இணைந்து செயல்பட்டால் தான் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். 
    குழு, வலிமையானது; உற்சாகமானது; உன்னதமானது; நம்பிக்கை மிகுந்தது; அரவணைக்க வல்லது ; நினைத்ததை சாதிக்க வல்லது. குழு, வெற்றியின் அடையாளம். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் "அக்னி' ஏவுகணையை உருவாக்கிய பின்னர் இஸ்ரோவில் (ISRO) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது குழுவைப் பற்றி குறிப்பிடும்போது, "இணைந்து பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளாலும், தொழில்நுட்ப வல்லுநர்களாலும் தான் இத்தகையை சாதனை சாத்தியம்'' என்றார்.
    "ஒன்றாய் வருவது ஆரம்பம். ஒன்றாயிருப்பது முன்னேற்றம். ஒன்றாய் பணிசெய்வதே வெற்றி'' என்பார் உலகின் தலைசிறந்த அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி போர்டு. ஒரு குழுவின் மிக சிறந்த பண்பே வேற்றுமையில் ஒற்றுமையாய் இருப்பதே. மிகச்சிறிய குழு என்பது இருவர். ஆனால் அவர்கள் இரண்டு பலம் வாய்ந்த தனி நபர்களை விட அதிக பலம் கொண்டவர்கள் என்பது தான் அவர்களின் சிறப்பு. ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு என்பது கணிதம். ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் அதன் மதிப்பு மூன்று அல்லது அதற்கு மேலானது என்பதே குழுவின் புனிதம். 
    தங்களுக்குள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளும் தனது நான்கு பிள்ளைகளைத் தந்தை அழைத்தார். அவர்களிடம் ஆளுக்கொரு சுள்ளி விறகைக் கொடுத்தார். அவை ஒவ்வொன்றையும் உடைக்கச் சொன்னார். அவர்கள் அதனை எளிதில் உடைத்தனர். பின்னர் அதே போன்ற நான்கு சுள்ளிகளை ஒன்றாக கட்டி ஒவ்வொருவரிடமும் கொடுத்து உடைக்கச் சொன்னார், அவர்களால் உடைக்க முடியவில்லை. அதுதான் குழுவின் பலம். எளிதில் எவராலும் அசைக்க முடியாத பலமாகும். 
    குழுவின் வெற்றி அதிலிருப்போரின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல. அவர்களின் எண்ணத்தைப் பொருத்தது. அதில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடில்லை. திறமையானவர், திறமை குறைந்தவர் என்ற வேறுபாடில்லை. அவர்களுக்கு தங்களின் இலக்கு மட்டுமே முக்கியம். ஒரு குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு சதுரங்க விளையாட்டின் காய்கள் போன்றவர்கள். அதில் சிப்பாயிலிருந்து, ராஜா வரை அனைவரும் இன்றியமையாதவர்களே. அவர்கள் தங்களுக்கு முன் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக இருப்பார்களே தவிர, அப்பிரச்னைக்குக் காரணமாக இருக்க மாட்டார்கள். அதில் யாரும் பெரும்புள்ளியும் அல்ல. எவரும் சிறுபுள்ளியும் அல்ல. அனைவரும் இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கின்ற ஒரே புள்ளியை மையம் கொண்டு பயணிப்பவர்கள்.
    ரஷ்ய குழந்தைகள் வீடுகட்டி விளையாடும் பொம்மைகள் கனமானவை. அவற்றை ஒரு குழந்தையால் தூக்க முடியாது. ஏனென்றால், குழந்தைகள் விளையாடும்போதும் கூட தனித்து விளையாடாமல் ஒரு குழுவோடு விளையாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு உருவாக்கப்படுகிறது. பாப்பா பாட்டில் "கூடி விளையாடு பாப்பா' என்ற பாரதியின் வரிகள் தனி மனிதத்தைத் தாண்டி, ஒரு குழுவே ஒவ்வொரு செயலுக்கும் அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. குழுவோடு பயணிப்பவரின் பண்பு உண்மையில் அனைவரையும் பரவசப்படுத்துவதாய் அமையும். ஒரு குழு அதிலுள்ளோரின் பண்புகளைப் புரிந்துகொள்ளும். அதற்கேற்ப விட்டுக் கொடுக்கும். பலவீனங்களைச் சமப்படுத்தும்; பலத்தை அதிகரிக்கும். மொத்தத்தில் ஒவ்வொரு சாதாரண மனிதனையும் சாதனையாளராக்கும். 
    ஒரு சிறந்த இலக்கினை நிர்ணயித்துக்கொண்டு, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடு, ஒரு கற்பனைக் கண்ணோட்டத்தில் நம்பிகையோடு பயணிப்பதே ஒவ்வொரு வெற்றிகரமான குழுவிற்கும் ஆதார சுருதி. அது பழைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு புதுமையை நடத்திக் காட்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, இராபர்ட் ஷுல்லர் என்னும் அமெரிக்க பேச்சாளர், சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒரு படிக தேவாலயத்தை (Crystal Cathedral) கட்டினார். உலகின் பிரமாண்டங்களில் அதுவும் ஒன்று. "யாருக்குப் பெருமை சென்றடையும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயலாற்றுபவர்களால் மட்டுமே மகத்தான காரியங்களை இறைவனால் நிறைவேற்ற முடியும்; தான் என்னும் மமதை அழிந்தாக வேண்டும்' என்று அதனை வடிவமைத்து நிர்மானித்த குழுவிற்கு நன்றி செலுத்தும் வண்ணம் அவர் எழுதினார். Team work, Works (குழுச் செயல்பாடே, செயல்படுத்தும்) என்பது ஓர் ஆங்கில வழக்கு மொழி. எனவே, ஒரு குழுவிலுள்ளோர் அதில் எத்தகைய பெருமை கிடைக்கும் என்று எதிர்பாராமல் தங்களது திறமையை அக்குழுவிற்கு அர்ப்பணிப்பவர்களாகவே இருப்பர்.
    குழுவில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அதன் இயக்கத்திற்கு பலவீனம். குழுவோடு இணைத்துக் கொள்வது அழகான கூட்டியக்கம். குழுவிற்காக அர்ப்பணிப்பவர் ஒவ்வொருவரும் அதன் அங்கம். ஒரு தலைமையின் கீழ் குழு பணிபுரிவதில்லை. திறன் வாய்ந்த உறுப்பினரே குழுவின் சிறந்த தலைவராகிறார். 
    பிரம்மாண்டமான பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்திருந்தது. அதை அகற்றுவதற்காக ஒரு படைக் குழுவினர் முயன்று கொண்டிருந்தனர். இன்னும் ஒருவர் உதவிக்கு இருந்தால் அதனை அகற்றிவிட முடியும் என நம்பினர்; அவர்களது தளபதி சற்று தூரத்தில் நின்று "நகர்த்துங்கள்! நகர்த்துங்கள்!'' என்று அவர்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்ததார். அப்போது அவ்வழியே குதிரையில் வந்த ஒருவர் இவர்களைக் கண்டதும் கீழே இறங்கினார். அவர்களோடு சேர்ந்து அப்பெரிய மரத்தை நகர்த்தினார். சிறிது நேரத்தில் அந்த மரம் அவர்களின் முயற்சியால் சாலையின் நடுவிலிருந்து அகற்றப்பட்டது. 
    படைத்தளபதி ஆச்சரியமாய் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர், குதிரையில் ஏறச் சென்றவரிடம், "யார் நீங்கள்?'' என்றார். அதற்கு அவர், " இன்னொரு முறை ஒரு தளபதி தனது குழுவோடு இணைந்து செய்ய வேண்டிய பணிக்கு இந்த நாட்டின் தலைமைத் தளபதி வருவான் என்று எதிர்பார்க்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டு குதிரையில் ஏறிச் சென்றார். அப்பொழுதுதான் அத்தளபதிக்கு தனது குழுவிற்கு உதவியவர் தங்கள் நாட்டின் தலைமை படைத்தளபதியான ஜார்ஜ் வாஷிங்டன் என்று புரிந்தது.
    தனி மனித வளர்ச்சி, ஒரு மரம்;
    குழுவோடு வளர்ச்சி, ஒரு வனம்!
    (தொடரும்)
    கட்டுரையாசிரியர்:
    காவல்துறை துணை ஆணையர், 
    நுண்ணறிவுப்பிரிவு.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp