சரியான பார்வை...வழி...செயல்! 28 - தா.நெடுஞ்செழியன்

செயின்ட் ஜான் டான் பாஸ்கோ சிறந்த கல்வியாளர். பொது அறிவும், கடவுள் நம்பிக்கையும் இவரை ஒரு முழுமனிதனாக உருவாக்கியது.
சரியான பார்வை...வழி...செயல்! 28 - தா.நெடுஞ்செழியன்

செயின்ட் ஜான் டான் பாஸ்கோ சிறந்த கல்வியாளர். பொது அறிவும், கடவுள் நம்பிக்கையும் இவரை ஒரு முழுமனிதனாக உருவாக்கியது. உடல், மனம், ஆன்மா இந்த மூன்றையும் யார் ஒருவர் குழந்தைப் பருவத்திலிருந்தே சரியாகப் பராமரிக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கை நல்ல நிலையை அடையும் என்பது இவருடைய அடிப்படை கருத்தாகும். இத்தகைய நெறிமுறையை குழந்தைகள் முதற்கொண்டு எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இவர் விருப்பம்.
எவ்வளவு சிறப்பான கல்விமுறையாக இருந்தாலும், கல்வியுடன் சேர்த்து இந்த மூன்றையும் இணைத்துக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கு மாணவர்களை நண்பர்களைப் போல நடத்த வேண்டும் என்று நினைத்தார். மாணவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க எந்தவிதத் தடையையும் அவர் ஏற்படுத்த விரும்பவில்லை. கருத்துகளை அவர்களிடம் திணிக்கவில்லை. இவ்வாறு செய்வது மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறியவும் அவற்றை வளர்க்கவும் உதவும் என்று கருதினார். பிற்காலத்தில் மாணவர்களுக்கு எது நல்லதோ, எது ஆரோக்கியமானதோ, எது மகிழ்ச்சியைத் தரக் கூடியதோ அதற்குத் தேவையான சிந்தனைகளை, செயல்களை பள்ளியில் கற்கும்போதே மாணவர்களிடம் உருவாக்க வேண்டும் என்று நினைத்த வித்தியாசமான சிறந்த கல்வியாளர் ஜான் டான் போஸ்கோ. 
இத்தாலியில் தொழிற்புரட்சி நடப்பதற்கு முன்பு கல்வெட்டும் தொழிலாளர்களின் குழந்தைகள், கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள், இருப்பிடத்தை விட்டு பிழைப்புக்காக புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு கல்வி கற்றுத் தந்தார். வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயர்ந்து தொழிற்சாலைகளில் குறைந்த கூலிக்கு வேலை செய்து வறுமையிலும் துன்பத்திலும் கஷ்டப்படுகிற மக்கள் வேறு வழியின்றி தங்கள் குழந்தைகளையும் அதே தொழிற்சாலைகளில் வேலை செய்ய வைத்தனர். இந்த நிலையை மாற்ற, அக்குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்று செயின்ட் ஜான் டான் பாஸ்கோ நினைத்தார். அதற்காக அவர் குழந்தைகளுடன் நிறைய நேரத்தைச் செலவழித்தார். அந்த ஏழை மாணவர்களின் மனதை உயர்வானதாக மாற்ற அவர் பாடுபட்டார். நல்ல இடவசதியுள்ள இடத்தில் ஏழை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தார். 
1859 ஆம் ஆண்டு SALESIAN CONGREGATION என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். குறிப்பாக மாணவர்களிடத்தில் எவ்வாறு அன்பைச் செலுத்தி அவர்களுக்குக் கல்வியைக் கற்றுத் தர வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளே இந்த அமைப்பினுடையது. இன்று உலக அளவில் சுமார் 20 ஆயிரம் குருமார்கள், சிஸ்டர்கள், தன்னார்வத் தொண்டர்களுடன் இயங்கி வருகிறது. இவர்கள் உலக அளவில் கோடிக்கணக்கான ஏழை மாணவர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கும் பின் தள்ளப்பட்டவர்களுக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது. 
இவர் மாணவர்களை கல்வியில் சிறப்புற்று விளங்க ஊக்குவித்தார். இசை, நாடகம், விளையாட்டு, ஆகியவற்றின் வாயிலாக கல்வியைக் கற்றுக் கொடுத்தார். அந்தக் காலகட்டத்தில் இத்தகைய முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்நாள் முழுவதும் இளம் மாணவர்களின் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்தார். 
மாணவர்களுக்குத் தண்டனை தரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதை எல்லா மிஷனரிகளுக்கும் தெரிவித்தார். "நாம் ஏற்படுத்தக் கூடிய சூழல், மாணவர்களைத் தவறு செய்யவிடாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்' என்றார். ஆசிரியர் மாணவர் உறவு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என வரையறுத்தார். பிற மாணவர்களின் முன்னிலையில் எந்த ஒரு மாணவரையும் திட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு மாணவரை அழைத்து செய்த தவறைக் குறிப்பிட்டு திரும்பவும் அந்தத் தவறைச் செய்யாமல் இருப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார். ஆசிரியர்கள் மாணவர்களைத் தவறாக நடத்தினால், மாணவர்கள் நீதிநெறியற்றுப் போவார்கள் என்பதால், அவர்களைச் சிறப்பாக நடத்தினார். மாணவர்கள் பின்னாளில் அரசு நிர்வாகத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், தனிநபர் என்ற முறையில் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார், கல்வியறிவின்மை, குழந்தைத் தொழிலாளர்முறை, தீண்டாமை போன்றவை மாணவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மாணவர்கள் இளம் வயதில் எந்தவொரு சூழலில் இருந்தாலும், அவர்களின் சமூகநிலை எதுவாக இருந்தாலும், கல்வி ஒன்றின் வாயிலாக, அவர்களை அன்புடன் நடத்துவதன் வாயிலாக, அவர்களைத் தன்னம்பிக்கையுடனும், சுய ஒழுக்கத்துடனும் வாழ வைக்க முடியும் என்று கருதினார். இந்த அடிப்படையில் அவர் எடுத்த முயற்சிகள் - இவர் உருவாக்கிய பள்ளிகள் - இப்போதும் சிறப்புற்று விளங்குகின்றன. 
சென்னை எழும்பூரில் டான் பாஸ்கோ மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் 1959 இல் தொடங்கப்பட்டது. இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. 1978 இல் மெட்ரிக்குலேஷன் பள்ளியாக உருவானது. 1979 ஹையர் செகண்டரி பள்ளியாக மாறியது. செலிசியன் சொசைட்டி வாயிலாக மும்பை, ஹெளகாத்தி, சென்னை, கொல்கத்தா உட்பட பத்து இடங்களில், தமிழகத்தில் சென்னையிலும், திருச்சியிலும் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்கள். இந்தியா முழுவதும் 34 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. தொழிற்கல்வியையும் கற்றுத் தருகிறார்கள். செயின்ட் ஜான் டான்பாஸ்கோவின் குறிக்கோள்களுக்கு இணங்க, இந்தப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி விவேகானந்தரால் ராமகிருஷ்ண மிஷன் அமைப்பு உருவாக்கப்பட்டது. எந்தவொரு தன்னலமும் இல்லாமல் மக்களுக்கு உழைக்க எண்ணற்ற தன்னார்வத் தொண்டர்கள் இந்த அமைப்பின் மூலமாகப் பணியாற்றத் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் மக்களின் நல்வாழ்வு. பேரழிவு மீட்புப் பணிகள், கிராமப்புற வளர்ச்சி, பழங்குடியின மக்கள் மேம்பாடு, தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வி என பலவகைகளில் இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது. இதில் தங்களை அர்ப்பணித்த எண்ணற்ற துறவிகள், ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் வாயிலாக இவர்களுடைய பணி இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கர்மயோகம் எனப்படும் செயல் வழி வழிபாட்டுக் கொள்கைகளைக் கொண்டு இந்த மிஷன் செயல்பட்டு வருகிறது. இந்த மிஷனின் தலைமையிடம் கொல்கத்தா பேலூர் மடத்தில் உள்ளது. 1897 இல் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனின் செயல்பாடுகள் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்டதிட்டத்துக்கு இசைவாக இருந்திருக்கின்றன. யுனெஸ்கோ இதை வியந்து பாராட்டியுள்ளது. 1998 ஆம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசு ராமகிருஷ்ணா மிஷனுக்கு வழங்கப்பட்டது. இந்த மடத்தின் கீழ் இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் கொல்கத்தாவில் 27 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். பீகாரில் 1 ஜார்க்கண்டில் 1 உ.பி.3 தமிழ்நாட்டில் 4, கேரளாவில் 1, ஆந்திராவில் 1, கர்நாடகாவில் 2, அருணாச்சல பிரதேசத்தில் 2, திரிபுராவில் 2, உத்தரபிரதேசத்தில் 2, ஒடிசாவில் 2, டெல்லியில் 2 , அமெரிக்காவில் 2 என ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளை நடத்திவருகிறது. 
1946 ஆம் ஆண்டு ஜுன் 21 இல் தத்துவஅறிஞர் அரசியல் வல்லுநர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியை சென்னை மயிலாப்பூரில் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்தக் கல்லூரி ராமகிருஷ்ணா மிஷன் கீழ் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரி வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம். சுப்பராய அய்யர். அவர் 1947 முதல் 60 வரை இக்கல்லூரியின் நிறுவனச் செயலாளராக இருந்தார். இவர் வருமானவரி வழக்கறிஞராக இருந்தார். விவேகானந்தா கல்லூரி 20 ஆசிரியர்கள் மற்றும் 339 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. 4 இளங்கலைப் பட்ட வகுப்புகளுடன் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1960 இல் இது ராமகிருஷ்ண மிஷனின் முழுக்கட்டுப்பாட்டுக்கு வந்தது. ராமகிருஷ்ணா மிஷன் வித்யாவித் என்பதையும் சென்னை மயிலாப்பூரில் கொண்டு வந்தார்கள், 2004 இல் இந்தக் கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆர்ட்ஸ், சயின்ஸ், காமர்ஸ் ஆகியதுறைகளில் இளங்கலைப் பட்டப்படிப்புகள் முதல் ஆராய்ச்சிப் படிப்புகள் வரை கற்றுத் தருகிறார்கள். 11 இளங்கலைப் பட்டப்படிப்புகள், 7 முதுகலைப் பட்டப் படிப்புகள் மற்றும் எம்.பில், பிஎச்.டி படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன. 
இங்கு படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இரண்டு ஆராய்ச்சி மையங்கள் உதவுகின்றன. VINSTROM என்று அழைக்கப்படக் கூடிய விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் ட்ராபிகல் மைகாலஜி அவற்றில் ஒன்று. மற்றொன்று VIAT என்றழைக்கப்படுகிற Vivekananda Institute of Algal Technology. இது உயிரியல்துறையின் கீழ் இயங்கி வருகிறது. 
இந்தக் கல்லூரியில் மாணவர்களை மையப்படுத்திய கல்வித் திட்டம் பின்பற்றப்படுகிறது. இளங்கலைப் பட்டப்படிப்பின்போதே மாணவர்களுக்கான செய்முறைத்திட்டங்கள் (PROJECT) கொடுக்கப்படுகின்றன. புதிதாகச் சேரக் கூடிய கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொடுக்கின்றனர். மாணவர்கள் ப்ராப்ளம் சால்விங் திறனுடையவர்களாக்கப்படுகின்றன. மாணவர்கள் வருகை கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. 
இந்தக் கல்லூரியில் பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக நடிகர், பத்திரிகையாளர் சோ.ராமசாமி, நடிகர் ஜெயசங்கர், கர்நாடக சங்கீத பாடகர் பி.உன்னிகிருஷ்ணன், பின்னணி பாடகர் ஹரீஸ் ராகவேந்திரா, கர்நாடக சங்கீதத்தின் வாய்ப்பாட்டுக் கலைஞர் சிக்கில் குருசரண், தொழிலதிபர்எம்.ஏ.எம். ராமசாமி, பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, டி.எம்.கிருஷ்ணா, திரைப்பட இயக்குநர் மணிரத்னம் ஆகியோரைக் கூறலாம். 
கல்லூரியில் படித்த மாணவர்களில் பன்னாட்டு நிறுவனங்களில் டிலாய்ட் கன்சல்ட்டிங், எர்னெஸ்ட் யங், பிடபிள்யுசி, பேங்கிங் இன்ஸ்டிடியூஷன், ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர்.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com