வரவேற்பாளராக ரோபாட்!

ஓர் அலுவலகத்தில் மிகவும் கடினமான வேலை எது? என்று கேட்டால் வரவேற்பாளர் வேலை என்று சொல்வார்கள்.
வரவேற்பாளராக ரோபாட்!

ஓர் அலுவலகத்தில் மிகவும் கடினமான வேலை எது? என்று கேட்டால் வரவேற்பாளர் வேலை என்று சொல்வார்கள். காரணம், அந்த வேலை செய்ய மிகவும் பொறுமை தேவை. அலுவலகத்திற்கு ஏதாவது வேலை காரணமாக வருபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு புன்னகை மாறாத முகத்தோடு பதிலளிக்க வேண்டும். இடைஇடையே வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
 பெங்களூருவில் உள்ள ஸ்மார்ட்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் உள்ள வரவேற்பாளராக "மித்ரி' என்ற ரோபாட் உள்ளது. இது வரவேற்பாளர் வேலையை மட்டும் செய்வதில்லை. அங்கு பணிபுரியும் அலுவலர்களின் வருகையையும் பதிவு செய்கிறது.
 இந்த மித்ரியை உருவாக்கியவர்கள் பெங்களூரைச் சேர்ந்த இன்வென்டோ நிறுவனத்தினர்.
 இதற்கு முன்பு "மித்ரா' என்ற ரோபாட்டை உருவாக்கிய அனுபவம் இவர்களுக்கு உள்ளது. அந்த மித்ரா தற்போது சென்னை, புதுதில்லி விமான நிலையங்களில் உள்ளது.
 ஆனால் மித்ரா வெறும் ஒலியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும். அதை வைத்துச் செயல்படும்.
 மித்ராவின் வளர்ச்சியாக - அடுத்தநிலையாக - இந்த மித்ரியை உருவாக்கியிருக்கிறார்கள் இன்வென்டோ நிறுவனத்தினர்.
 இந்த மித்ரியுடன் நீங்கள் ஆங்கிலத்தில் பேசலாம். நீங்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் திறன் உடையது இந்த மித்ரி. உதாரணமாக ஒரு பெரிய அலுவலகத்துக்கு வந்து இந்தத் துறையில் இருக்கும் ஒருவரை நீங்கள் பார்க்க விரும்புவதாகச் சொன்னால், உடனே மித்ரி அதைப் புரிந்து கொண்டு, உங்களுக்கு விசிட்டர் பாஸ் தயாரித்துக் கொடுத்து, அந்தத் துறை எங்கிருக்கிறது என்று வழிகாட்டிவிடும்.
 அது மட்டுமல்ல, நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் உங்களுடைய முகம், வயது, உருவ அமைப்பு அனைத்தும் மித்ரியால் பதிவு செய்யப்பட்டுவிடும். அடுத்த முறை நீங்கள் அதே அலுவலகத்துக்குச் சென்றால், உங்களைப் பற்றிய விவரங்களை அது விரல்நுனிகளில் எடுத்து வைக்கும். உங்களுடன் கைகுலுக்குவதற்காக கைகளை உயர்த்தி சிறிது அசைக்கவும் செய்யும்.
 மித்ரியை உருவாக்கிய இன்வென்டோ நிறுவனத்துடன் ஸ்மார்ட்வொர்க்ஸ் நிறுவனம் ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி , இந்தியாவில் 9 நகரங்களில் உள்ள 20 மேற்பட்ட ஸ்மார்ட்வொர்க்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் பல மித்ரிகள் வரவேற்பாளராகப் பணி செய்வார்கள்.
 இந்த அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் உள்ளே நுழைந்ததுமே அவருடைய முகம், உருவம் ஆகியவற்றை இந்த மித்ரி கணக்கில் எடுத்துக் கொண்டு அவருடைய வருகையை உறுதி செய்யும். கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே செல்லும் பழக்கம் உள்ள ஒரு சிலர், இனிமேல் அம்மாதிரி வெளியே செல்ல முடியாது.
 அலுவலகம் சார்ந்த பொதுவான கேள்விகளுக்கு இந்த மித்ரி பதில் சொல்லும் வகையில் இதை உருவாக்கியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அலுவலகத்தின் ஒரு துறையைச் சேர்ந்த மேலாளரை நீங்கள் சந்திக்க விரும்புவதாகச் சொன்னால், உடனே இந்த மித்ரி அந்த மேலாளரின் பணிநிலைமைகளை ஆராய்ந்து, ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் தந்துவிடும்.
 ஏற்கெனவே கம்ப்யூட்டர்களில், மென்பொருள் கருவிகளில் உள்ள பலவிதமான வசதிகளை இந்த "வரவேற்பாளர் ரோபாட்'டில் இணைத்து, உருவாக்கியுள்ளார்கள்.
 உதாரணமாக, கம்ப்யூட்டரில் உள்ள சென்சார்கள், மொபைல் போனில் உள்ள கேமராக்கள், ஆடியோ, வீடியோவைப் பதிவு செய்யும் வசதிகள், பேச்சின் ஒலியைக் கேட்டால் அதை எழுத்தாக மாற்றும் தொழில்நுட்பங்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி, இந்த ரோபாட்டை இன்வென்டோ நிறுவனத்தினர் உருவாக்கியுள்ளார்கள். இப்போது ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ளும் ரோபாட்டை, பல மொழிகளில் பேசினாலும் புரிந்து கொள்ளும்படி உருவாக்க இருக்கிறார்கள்.
 ஒரே ஒரு பிரச்னை... உயிருள்ள மனிதர்கள் நிலைமைக்குத் தக்கவாறு தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவார்கள். இந்த வரவேற்பாளர் ரோபாட்கள் புரோகிராம் செய்ததற்கு உட்பட்டே செயல்படுவார்கள்.
 ந.ஜீவா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com