உன்னத உறவே நட்பு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

சோழநாட்டின் மன்னர் கோப்பெருஞ்சோழன்; கவிப்புலமை மிக்கவர். ஆனால், அவர் பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் மீது மானசீகமான நட்பு கொண்டார்.
உன்னத உறவே நட்பு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

தன்னிலை உயர்த்து! 27
 சோழநாட்டின் மன்னர் கோப்பெருஞ்சோழன்; கவிப்புலமை மிக்கவர். ஆனால், அவர் பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் மீது மானசீகமான நட்பு கொண்டார். அதேபோன்று பிசிராந்தையாரும் சோழப் பேரரசர் கோப்பெருஞ்சோழன் மீது நட்பு கொண்டார். இருநாட்டுக்குமிடையே இடைவெளி தூரம் அதிகம் இருந்தும், அவர்களுக்குள் நட்புமனம் இணைந்திருந்தது.
 காலச்சூழ்நிலையால் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறக்கத் துணிந்தார். அப்பொழுது நகருக்கு வெளியே அவருக்கென்று ஓர் இருக்கையிடப்பட்டது. தனது இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கையைத் தனது நண்பர் பிசிராந்தையாருக்காக இடச் செய்தார். "மன்னா! பிசிராந்தையார் உமது பெயரையும், புகழையும் அறிந்தவரேயன்றி, இதுவரை உங்களை நேரில் கண்டவரில்லை; பழகியவருமில்லை. மேலும், அவர் தங்கள் நிலையறிந்து, பாண்டிய நாட்டிலிருந்து இங்கு வருவது சாத்தியமாகாது' என்றார் அமைச்சர்.
 அதற்கு மன்னர்பிரான் "எனது நண்பர் பிசிராந்தையார் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், நான் ஆட்சிபுரிந்தபோது வராவிட்டாலும், நான் உயிர் துறக்கும் இந்நேரத்திலாவது உறுதியாக வருவார்' என்றார் .
 தனது ஆருயிர் நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும், தனது சேயினைக் காணவரும் தாயைப்போல் ஓடோடி வந்தார் பிசிராந்தையார். ஆனால், அவர் வருவதற்குள் கோப்பெருஞ்சோழன் உயிர்துறந்திருந்தார். அதனைக் கண்டு வருந்தி, கண்ணீர் மல்கினார். தனது நண்பனை மண்ணுலகத்தில் தான் காணமுடியவில்லை. விண்ணுலகில் காண எண்ணி, தானும் மன்னர் தனக்கென இட்டிருந்த இருக்கையில் அமர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தார் பிசிராந்தையார். ஒருவரையொருவர் நேரில் சந்தித்து பழகிக்கொள்வது மட்டும் நட்பல்ல, உள்ளத்தால் உறவாடிக் கொள்வதுதான் நட்பு. "உண்மையான நட்பு என்பது ஈருடலில் ஓர் ஆத்மா' என்பார் கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.
 "தாய், தந்தை, உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் என்ற குடும்ப உறவுகள் தாண்டிய ஓர் உன்னத உறவு, நட்பு. உண்மையான நட்பு, அன்பின் அற்புதம்; பழகுவதின் உன்னதம்; வாழ்வில் கிடைத்ததற்கரிய பரிசு. "ஓர் உண்மையான நட்பின் ஆழம், பழகிய காலங்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை' என்ற தேசியகவி இரவீந்திரநாத் தாகூரின் வரிகளைப் போல் உணர்வுகளே நட்பின் ஆழத்தை ஓசையின்றி ஆழமாக்குகின்றன.
 நட்பு வாழ்க்கையின் நங்கூரம். அது கப்பலைக் ஆழிப்பேரலையில் இழுத்துச் செல்லாதபடி காக்கும். ஒரு நல்ல நண்பன் துன்பம் வராமல் காப்பான். துன்பம் வந்தால், அவனுக்குத் துணையிருப்பான். ஆனால், தீய நண்பர்கள் மகிழ்வான காலத்தில் உடனிருப்பர்; துன்பம் வரும் போது ஓடிவிடுவர். குளத்தில் உள்ள உயிரினங்களை உண்டு வாழும் பறவைகள், அக்குளத்தில் நீர் வற்றினால், வேறு குளத்திற்கு பறந்துவிடும். ஆனால், குளத்தில் வாழும் நீர்த்தாவரங்கள் குளத்தோடே கிடந்து வாடும் என்பதை
 அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
 உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
 கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
 ஒட்டி யுறுவார் உறவு
 - என்ற மூதுரையின் வரிகளில் நட்பின் இலக்கணத்தை வரையறுத்துக் காட்டுகிறார் நம் தமிழ்ப்பாட்டி, ஒளவை.
 இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. அதுபோல நண்பர்களே ஒரு மனித குணத்தின் பிரதிபலிப்புகள். உண்மையான நண்பர்கள் மட்டுமே நம்பிக்கையை மிளிரச் செய்து, ஒரு கண்ணாடியின் பிம்பத்தினைப் போன்று நட்பினைப் பிரதிபலிக்கமுடியும் என்பதை அயர்லாந்து நாட்டுச் சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, "உனது நண்பனை காட்டு, உன்னை யார் என்று சொல்கிறேன்' என்கிறார். மொத்தத்தில், நண்பர்கள் உள்ளத்தை வெளிப்படுத்தும் எக்ஸ் கதிர்கள். நம்பிக்கையை வார்த்தெடுக்கும் நட்பு உலைகள். நமக்குள்ளிருக்கும் திறமைகளை உலகிற்குப் பறைசாற்றும் தூதுவர்கள்.
 நல்ல நண்பர்கள் கிடைத்ததற்கரியவர்கள்; புனிதமானவர்கள்; புரிந்து கொள்பவர்கள்; பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைப்பவர்கள்; ஒரு தந்தையைப்போன்று இடித்துரைப்பவர்கள்; ஓர் அன்னையைப் போன்று ஈடில்லாத அன்பு கொண்டவர்கள்; நட்பையறிந்தவர்கள்; தன்னை அறிய வைப்பவர்கள்; உலகத்தைப் புரியவைப்பவர்கள். அவர்கள் எடுப்பதிலும், கொடுப்பதிலும் கணக்குப் பார்ப்பதில்லை. மாறாக, இடுக்கண் களைய துணை நிற்கும் நம்பிக்கைகள். "இந்த உலகில் உண்மையான நட்பினைவிட புகழ்வதற்கு வேறெதுவும் இல்லை' என்பார் இத்தாலி நாட்டு சிந்தனையாளர் தாமஸ் அக்கினாஸ். ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகம். நல்ல நண்பர்கள் புத்தகங்களின் தொகுப்பு.
 நண்பர்களில்லா வாழ்க்கை பாலைவனத்தில் நடக்கின்ற ஒற்றைப் பயணம். அதனால்தான் ஹெலன் கெல்லர் என்னும் அமெரிக்க நாட்டு எழுத்தாளர், "தனியாக வெளிச்சத்தில் நடந்து செல்வதைவிட இருளில் நண்பனோடு நடப்பதே சிறந்தது' என்பார். ஏனெனில் நட்பு இருளையும், வெளிச்சமாக்கும். எத்தகைய நட்பாயினும், அவற்றை மூன்றாகப் பிரிக்கமுடியுமென்பார் மாமேதை கயாஸி. முதல் வகை நட்பு உணவைப் போன்றது, இத்தகைய நட்பை "கொடுத்தும் கொளல் வேண்டும்'. இரண்டாம் வகை நட்பு மருந்தைப் போன்றது. எப்போதாவது நமக்குத் தேவைப்படும். மூன்றாவது வகை நட்பு நோயைப் போன்றது. இது தேவையில்லாதது.
 சிலருக்கு அதிக நண்பர்கள் இருப்பர். அதற்காக நமக்கும் ஒரு நட்பு வேண்டுமென்று ஆராய்ந்தறியாமல் நட்பு கொண்டால் அது தீங்காய் முடியும். ஆராயாமல் உருவாக்குகின்ற நட்பினால் வரும் கேடு அவரது தலைமுறைக்கே துன்பத்தை தரும் என்பதை
 "ஆய்ந்தாய்ந்து அறியாதான் கேண்மை தலைமுறை
 தான்சாய்ந் துயரம் தரும்'
 என எச்சரிக்கிறார் திருவள்ளுவர். ஏதென்ஸ் நாட்டு தத்துவமேதை சாக்ரடீஸ் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற ஒருவர், "ஐயா! உங்கள் வீடு மிகச்சிறியதாக இருக்கிறதே? இது உங்களுக்கு போதுமா?' என்று கேட்டார். அதற்கு சாக்ரடீஸ், "இச்சிறிய வீட்டினை நிரப்புவதற்கே உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை' என்றாராம். எனவே, நட்பு என்பது பழகிக் கொள்வது அல்ல, உணர்ந்து கொள்வது; உண்மை உள்ளங்களைப் புரிந்து கொள்வது.
 நட்பு வலிமையானது; ஆத்மார்த்தமானது. ஆதலால் தான் பெற்றோரிடம் பேச முடிந்தவை சில, உறவினர்களிடம் அளவளாவிக் கொள்பவை சில. காதலியிடமும், காதல் மனைவியிடமும், பேசிக்கொள்ள அளவுண்டு. ஆனால், இதயத்தின் ஆழத்திலிருக்கும் உண்மைகளை மறைக்காமல் மனம் விட்டு பேசிக் கொள்ளுமிடம் நண்பர்களோடு மட்டுமே. நண்பனால் மட்டுமே அத்தகைய சுதந்திரத்தினைத் தரமுடியும். மருத்துவத்தால் குணமடையாத வேதனைகளையும் நட்பு குணப்படுத்திவிடும். அதனால் தான் நட்பினைத் தேடி குசேலனின் கால்கள் கண்ணனின் துவாரகை வரை நடந்தது.
 நட்பு என்பது பேசி மகிழ்வதற்கு மட்டுமல்ல. வெறும் பொழுது போக்கும் நட்பு வாழ்வை பாழாக்கும். வியாபார நோக்குடைய நட்பு பணத்தைத் தரலாம், நல்ல குணத்தைத் தராது. அறிவுத் தேடல் கொண்ட நட்பே புனிதமானது. அது மன்னன் அதியமானும், தமிழ்பாட்டி ஒüவையின் நட்பை போன்றது. ஆதலால் தான் அமிழ்தினும் இனிய நெல்லிக்கனி தனக்கு கிடைத்த போது, அதை ஒüவைக்கு தந்தார் அதியமான். நட்பு ஒரு புனிதமானது. அதில் விரிசல்கள் தெரிவதில்லை.
 அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஜெஸ்சி ஓவன்ஸ், ஒலிம்பிக்கில் நான்கு முறை பதக்கங்களை வென்றவர். "ஓட்டப்பந்தயத்தில் வெற்றியாகக் கிடைக்கின்ற உண்மையான தங்கம் நட்பே! ஏனெனில் பதக்கங்கள் நாளடைவில் கருமையடைகின்றன. ஆனால் நட்பு என்றும் மாசுபடுவதில்லை' என்கிறார். ஒரே கிராமத்தில் பிறந்து, ஒன்றாக பயின்ற இரண்டு நண்பர்கள் ராணுவத்தில் சேர்ந்தனர். ஒருவர் பெயர் ஜிம்ஹாரி. அவரது நண்பர் பில். போரில், ஒருநாள் நள்ளிரவில் எதிரி நாட்டுப் படையினர் இவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பித்து செல்வதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. அனைவரும் அவ்வழியாக செல்ல முற்பட்ட போது, எதிரி நாட்டின் குண்டு மழைகளுக்கு இடையே ஒரு சத்தம். "தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்றது அக்குரல். ஹாரியின் அடிவயிற்றில் ஓர் இனம் புரியாத உணர்வு வந்து தொட்டது. ஆம்! அது அவன் நண்பன் பில்லினுடைய குரல். அந்தக் குரலில் இருந்த சோகம் ஹாரியின் மனதை வாட்டியது. உடனே அத்திசை நோக்கிப் புறப்பட்டான். "ஹாரி, அங்கே போகாதே! ஏற்கெனவே நம் படையில் பலர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டனர். நீயும் சென்றால் மடிந்து போவாய்! போகாதே!' என்று உரக்க கத்தினார் படைத்தளபதி. ஹாரியின் மனதில் ஏதோ ஓர் உறுத்தல். உத்தரவை மீறினான், ஒரு பல்லியை போல் ஊர்ந்து சென்று பில்லுவை தனது பதுங்கு குழிக்கு கொண்டு வந்தான்.
 "ஹாரி! குண்டடி பட்ட பில்லி இறந்திருப்பான் என்று சொன்னேன் அல்லவா! நீயும் துப்பாக்கி குண்டுக்கு இரையாகியிருந்தால் நான் உன்னையும் இழந்திருப்பேன்! நீ செய்தது மாபெரும் முட்டாள்தனம்!' என்று கத்தினார் படைதளபதி. அதற்கு ஹாரி, "ஐயா! நான் சரியான காரியத்தைத் தான் செய்தேன். நான் பில்லுவிடம் சென்றபோது அவன் உயிரோடு தான் இருந்தான். நான் அவன் அருகில் சென்று அவனைத் தூக்கி எனது தோளில் போட்டதும், "ஹாரி நீ கட்டாயம் வருவாய் என்று எனக்கு தெரியும்' என்று சொன்னதும் உயிர் துறந்தான். நான் அவனை அன்போடு சுமந்தேன். நான் மட்டும் அங்கு செல்லவில்லையெனில் "துன்பத்தில் நண்பன் துவண்டபொழுது காக்கத் தவறியவன்' என்ற இழி சொல்லுக்கு ஆளாகியிருப்பேன்'' என்றான் ஹாரி. போரில் வெற்றி பெறுவதற்கு முன்பே உண்மையான நட்பினால் வாழ்கையில் வெற்றி பெற்றான் ஹாரி.
 நல்ல நட்பு, பரிசு;
 உண்மையான நட்பு, பொக்கிஷம்!
 (தொடரும்)
 கட்டுரையாசிரியர்:
 காவல்துறை துணை ஆணையர்,
 நுண்ணறிவுப்பிரிவு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com