சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 29 - தா.நெடுஞ்செழியன்

கோவையில் இருந்து 19 கி.மீ.தொலைவில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா 1930 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 29 - தா.நெடுஞ்செழியன்

கோவையில் இருந்து 19 கி.மீ.தொலைவில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா 1930 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் டி.எஸ்.அவினாசிலிங்கம் 5.75 லட்சம் பணத்துடன் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். ஒரேயொரு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்தான் இதன் முதல் மாணவர். இவ்வளவு சிறியதாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இன்று நல்ல கல்வி நிலையமாகவும், ஆன்மிகத்தில் இளம்மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும் இது உள்ளது. 
டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்லூரியில் படிக்கிற காலத்தில் சுவாமி ராமகிருஷ்ணாவின் சீடரான சுவாமி சிவானந்தாவை சந்திக்க நேர்ந்தது. அவர் மூலமாக சுவாமி விவேகானந்தரைப் பற்றி நன்கறிந்திருந்தார். சுவாமி விவேகானந்தா, சுவாமி சிவானந்தா ஆகியோரின் எண்ணப்படி கல்வி ஒன்றே நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று கருதி இந்தப் பள்ளியைத் தொடங்க நினைத்தார். இந்தப் பள்ளிக்கு 1934 -ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டினார். இங்கு பயிலும் மாணவர்கள் நாட்டுப்பற்று மிக்க உண்மையான சிறந்த மாணவர்களாகவும் விளங்க வேண்டும் என்று காந்தி அப்போது வாழ்த்தினார்.
"நல்ல மனிதனை உருவாக்கும் விதத்தில் கல்வி இருக்க வேண்டும்' என்ற சுவாமி விவேகானந்தாவின் அறிவுரையை டி.எஸ். அவினாசிலிங்கம் கடைப்பிடித்தார். தனி மனித வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்ற நோக்கில் ஒவ்வொரு தனிமனிதரையும் தற்சார்பு, சுயகட்டுப்பாடு, நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்புணர்வுடன் உருவாக்க கல்வி உதவ வேண்டும் என்று விரும்பினார். எதிர்காலத்தில் நல்ல முன்னுதாரணமான மனிதர்களாகத் திகழ்பவர்களை உருவாக்கும் விதத்தில் இந்தப் பள்ளியில் கற்பிக்கும்முறை இருக்கிறது.
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியின் 3000 மாணவர்கள் அருகாமையில் உள்ள 50 தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். நாட்டுப்பற்றுப் பாடல்களும், பக்திப் பாடல்களும் மிக முக்கியமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. 
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவின் கீழ் காந்தி ஆசிரியர் பயிற்சி கல்வி நிலையம் 1942 -இல் தொடங்கப்பட்டது. 1951 -இல் ஐஐடி தொடங்கப்பட்டது. கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1956 -இல் மாருதி உடற்பயிற்சி கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டன, கலை, அறிவியல் கல்லூரி 1964 -இல் தொடங்கப்பட்டது. 
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் சுமார் 7000 மாணவர்கள் பயில்கின்றனர். 
2000 மாணவர்கள் தங்கக் கூடிய 12 தங்கும் விடுதிகள், காலை, மாலையில் வழிபாடு செய்ய வழிபாட்டு கூடங்கள் உள்ளன. பாரம்பரியமுறையில் நிறைய மாணவர்களை உருவாக்கி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் நாட்டுப்பற்றுடனும், தொழில், வர்த்தகம் என எல்லாத்துறைகளிலும் பணிபுரியும் திறமைகளுடனும் உருவாக்கப்படுகிறார்கள். 7000 மாணவர்களுக்கும் 800 பணியாளர்களுக்கும் இலவச மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது, ராமாயணப் பூங்கா இங்கு உள்ளது. மாணவர்கள் கிராமப்புற வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபடுகிறார்கள். 
மதுரை அருகே உள்ள திருவேடகத்தில் 1971 -இல் விவேகானந்தா கல்லூரி தொடங்கப்பட்டது. எண்ணற்ற கிராமப்புற மாணவர்கள் கல்வி அறிவு பெற இது உதவுகிறது. 
சமுதாயத்தில் ஆண்களுக்கு மட்டுமே கல்வி என்ற எண்ணத்தைத் தகர்க்க, சாரதா வித்யாலயா என்கிற பெயரில் சகோதரி சுப்புலட்சுமி என்பவர் தொடங்கி பெண் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் . சாரதா மிஷன் வித்யாலயா தொடங்க முக்கிய காரணமாக அவர் இருந்தார். இன்று இது உலகெங்கிலும் பல இடங்களில் வேரூன்றி எண்ணற்ற மாணவிகளுக்கான கல்வியை அளித்து வருகிறது. 1938 -ஆம் ஆண்டு ராவ் பகதூர் ஸ்ரீ ராமானுஜாசாரியார் சாரதா வித்யாலயாவை ராமகிருஷ்ணா மிஷனுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். அப்போது சுப்புலட்சுமி வயோதிகத்தின் காரணமாக தொடர்ந்து செயல்பட முடியாத நிலையில் இருந்தார். இதனால் இந்தப் பள்ளி ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. 
சென்னை தி.நகரில் 1938 -இல் ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பள்ளிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது இது 2 உயர்நிலைப் பள்ளிகளையும், 1நடுநிலைப் பள்ளியையும் 1 தொடக்கப்பள்ளியையும் அரசின் நிதி உதவியோடு நடத்தி வருகிறது. இதன் நிர்வாகம் ராமகிருஷ்ண மிஷனின் கீழ் உள்ளது. மாணவிகளுக்கான தங்கும் விடுதி மற்றும் பணி செய்யும் மகளிருக்கான விடுதியும் உள்ளன. 
"சாரதா காலேஜ் ஃபார் உமன்' திருநெல்வேலியில் உள்ளது. 1986 -இல் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. 1961 -இல் சேலத்திலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பெண்களின் உயர்கல்விக்காக இவை தொடங்கப்பட்டன. 
விவேகானந்தா மிஷன் கல்விநிறுவனங்கள் எண்ணற்ற மாணவர்களை சுய கட்டுப்பாட்டுடனும் நாட்டுப் பற்றுடனும், எதிர்காலத்தில் உலகின் எந்தப் பகுதிக்கு அவர்கள் சென்றாலும் "நான் இந்தியன்' என்ற உணர்வுடன் இருப்பவர்களாகவும், இந்தியத் திருநாட்டை அடுத்தகட்டத்துக்கு உயர்த்த என்னவெல்லாம் செய்யலாம் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பவர்களாகவும் உருவாக்கி வருகிறது. 
மதுரை ரயில் நிலையத்துக்கு அருகில் 1889 -ஆம் ஆண்டு வெங்கட்ராம அய்யங்கார் ஏழை மாணவர்கள் சுமைதூக்கும் தொழிலாளர்களின் மாணவர்கள், கைரிக்ஷா இழுப்பவர்களின் குழந்தைகள் கல்வியறிவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு கல்வி தருவதற்காக தொடக்கப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இந்தப் பள்ளிக்காக போதிய பண வசதி இல்லாமல் அவர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ராமநாதபுரம் அரசராகிய பாஸ்கர சேதுபதி அவருடைய விருந்தினர் மாளிகையை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்காக இலவசமாக வழங்கினார். அப்படி தொடங்கப்பட்ட பள்ளிதான் சேதுபதி மேல்நிலைப் பள்ளி. பாஸ்கர சேதுபதி ஞாபகார்த்தமாக இப்பள்ளிக்கு சேதுபதி பள்ளி என்று பெயரிடப்பட்டது. இந்தப் பள்ளியில் தொடக்க காலம் முதல் இப்போது வரை மிகக் குறைந்த கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது. இப்பள்ளியின் சிறப்புகள் என்னவென்றால் இப்பள்ளியில் 1904 -ஆம் ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவர் மாத சம்பளம் வெறும் ரூ.17 தான். அவர் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது இந்த பள்ளியில் பயிலும் பல ஏழை மாணவர்களுக்கு தமிழார்வத்தை ஏற்படுத்தினார். அதற்கு இப்பள்ளி துணை நின்றது. இந்தப் பள்ளி தற்போது 130 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்தப் பள்ளிக்கு மகாத்மா காந்தி வந்து சிறப்புரையாற்றியிருக்கிறார். கர்நாடக சங்கீதத்தின் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி கச்சேரி செய்திருக்கிறார்கள். 
மகாகவி பாரதிக்கு இந்தப் பள்ளியில் ஓர் அருங்காட்சியகம் அமைத்து, மதுரைக்குச் சுற்றுலா வரக்கூடியவர்களுக்கும், இன்றைய இளம் தலைமுறைக்கும் பாரதியின் அரும்பணிகளைப் பற்றி எடுத்துச் செல்லும் மையமாக அதை மாற்ற வேண்டும். இதை அரசோ, புரவலர்களோ, பள்ளியோ செய்ய வேண்டும். அது பாரதிக்கு நாம் செய்யும் பெருமையாகும்.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com