Enable Javscript for better performance
தன்னிலை உயர்த்து! - 28: மன்னிப்பு  மகத்துவத்தின் மணிமகுடம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  தன்னிலை உயர்த்து! - 28: மன்னிப்பு  மகத்துவத்தின் மணிமகுடம்!

  By ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., காவல்துறை துணை ஆணையர  |   Published On : 22nd January 2019 12:16 PM  |   Last Updated : 22nd January 2019 12:26 PM  |  அ+அ அ-  |  

  im3

  இளைஞன் ஒருவன் தனது நண்பர்களோடு சேர்ந்து சிறுசிறு குற்றங்களைச் செய்தான். ஒரு நாள் அக்குற்றங்கள் அவனது மனத்திற்குள் நெருஞ்சி முட்களாய்க் குத்தியது. இனிமேல் தவறு செய்யக்கூடாது  எனத் தீர்மானித்தான். ஆனாலும், இதுவரை தான் செய்த குற்றத்திற்கு தகுந்த தண்டனை பெற்றால்தான் அக்காயங்கள் ஆறும் எனத் தெளிந்து  தன் தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ள முடிவு செய்தான். 

  தந்தையோ வீட்டில் நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தார். அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அடிப்பாரென்றோ அல்லது திட்டுவாரென்றோ பயமில்லை. ஏனெனில், அவனுக்கு ஞாபகம் தெரிந்தவரை அவனது தந்தை அவனை அடித்ததே இல்லை. ஒரு தாளினை எடுத்தான். அதில், "தான் ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்திருந்தும் மாமிசம் சாப்பிட்டது; நண்பனின் பேச்சைக் கேட்டு ஒரு வேசியின் வீட்டிற்குச் சென்றது (நல்லவேளை கடவுள் அவனை தவறு செய்யும்முன்பே காப்பாற்றினார்) ; தனது அண்ணனின் தங்கக் காப்பை கொஞ்சம் வெட்டித் திருடியது' என தனது ஒப்புதல் வாக்கு மூலத்தை வரிசைப்படுத்தினான். பின் அதனைத் தந்தையிடம் கொடுத்துவிட்டு  ஒரு பாம்பினைக் கண்ட பையன் போல பயத்தோடு எதிரிலே அமர்ந்தான். 

  தந்தை படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார். அத்தாளினை முழுவதுமாகப் படித்தார். முத்துத் துளிகளாய் அவர் கன்னங்களில்  கண்ணீர் வழிந்து அக்காகிதத்தை நனைத்தது.  தந்தையின் வேதனையை உணர்ந்த அந்த இளைஞன் கதறி அழுதான்.  தந்தையின் கண்ணீர் தன் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி பாவத்தை கழுவிவிட்டதை உணர்ந்தான். அன்பு தான் வாழ்வில் உயர்ந்தது என்று புரிந்தான். அப்பா அக்கடிதத்தை கிழித்து எறிந்தார்.

  அன்றுதான் அகிம்சா தர்மத்தின் முதல் பாடத்தை இளைஞனான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவரது  தந்தையிடம் கற்றுக் கொண்டார். அன்புக் கணைகளின் ஆழத்தை அன்று உணர்ந்தார்; அன்பும் அகிம்சையும் ஒன்றெனத் தெளிந்தார் காந்தி.  குற்றத்தை மறைக்காமல் ஒப்புக்கொள்கிறவருக்கு மன்னிப்பு மனதார வந்து சேர்கிறது. மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை மறைக்காது ஒப்புக்கொள்ளுங்கள்; செய்த குற்றத்திற்காக வருத்தப்படுங்கள்;  இனி இத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்று உறுதிமொழி கூறுங்கள்; அவரது அன்பு உங்கள் மீது பலமடங்கு அதிகரிக்கும் என்பது காந்தியின் வாழ்க்கைச் செய்தி.

  மன்னிப்பு என்பது வாய்திறந்து சொல்வதல்ல. அது மனம் திறப்பது. மன்னிப்பு வார்த்தையல்ல; அது எத்தகைய மனக்காயத்தையும் ஆற்றுகின்ற அருமருந்து. செய்த சிறு சிறு தவறுகளுக்குகூட மன்னிப்பு கேட்பது உணர்தலின் வெளிப்பாடு. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க மறுப்பது அகங்காரத்தின் நங்கூரம். அறியாமல் செய்த தவறுக்கும் மன்னிப்பு கோருவது மனிதத்தின் உன்னதம். 

  மன்னிப்பு உணர்வின் வெளிப்பாடு. சிறு தவறுகளை மன்னிக்கும் செயல்பாடுகளினால் உறவுகள் விரியும். உணர்வுகள் இணையும். நட்புணர்வு மிகும். இருவரிடத்திலும் தவறுகள் இருந்து "மன்னிப்பை முதலில் அவர் கேட்கட்டும்' என்ற நிலையில் உறவுகள் விரிசல்படும். வெறுப்புணர்வு புகைபிடித்து தீப்பிழம்பாய் எரியும். 

  மன்னிக்கும் மனமே இதயத்திற்கு வலிமை. மன்னிக்கும் மனமிருந்தால் இதயநோய் வருவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா பேராசிரியர் பிரிட்டா லார்சனின் ஆராய்ச்சி முடிவு.  தங்களுக்கு தீமை செய்தவர்களை கண்முன் நிறுத்தி அவர்களை பழிவாங்குவதுபோல் கற்பனை செய்தவர்களின் ரத்த அழுத்தத்தின் அளவு  அதிகமாகவும், உடலெங்கும் ஒரு பாதிப்பையும் உருவாக்கியது. மாறாக, தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னித்து மறந்து விடுவது போன்ற கற்பனை செய்தவர்களின் ரத்த அழுத்தம் இயல்பாக இருந்தது. மன்னிக்கும் மனமிருப்பவர்கள் மனஅமைதி பெறுவதோடு, நீண்ட ஆயுளும் பெறுவது திண்ணம். "பகைவனுக்கு அருள்வாய்! நன்னெஞ்சே, பகைவனுக்கு அருள்வாய்!' என்ற மகாகவி பாரதியாரின் கூற்று மன்னிப்பின் ஆலமர விழுது.

  மன்னிப்பதைவிட உலகத்தில் புனிதமான பழிக்குப்பழி வேறெதுவுமில்லை. ஜெர்மனியின் ஹிட்லரின் நாசிப்படையால் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் இருவர்  நீண்ட காலம் கழித்து சந்தித்துக் கொண்டனர். ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மற்றொருவரோ மிகவும் மனவேதனையோடு நோய்வாய்ப்பட்டு இருந்தார். காரணத்தை ஆராய்ந்தபோது சோகமான நபரோ, எப்பொழுதும் தனக்கு ஏற்பட்ட கொடிய அனுபவத்தை நினைத்து, பழிக்குப் பழி வாங்க முடியவில்லையே என வருத்தத்தோடே இருந்தார். மகிழ்ச்சியான மனிதரோ நாசிப்படையினரை "நன்றல்லது அன்றே மறுப்பது நன்று' என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப நாசிப்படையின் முகாமிலிருந்து விடுதலையான அன்றே மன்னித்துவிட்டார். "எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு. அதைவிட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை' என்பார் அயர்லாந்து நாட்டு அறிஞர் ஆஸ்கார் ஒயில்ட். 

  களங்கங்கள் இல்லாத மனிதர்கள் அபூர்வம். பளிச்சென்று தகதகக்கும் சூரியனில்கூட கரும்புள்ளிகள் உண்டு. நாம் சூரியனின் வெளிச்சத்தை ருசிக்கப் பழகியதால் அதன் கரும்புள்ளிகள் நம் கண்ணில் தென்படுவதில்லை. அதுபோல மனித வாழ்விலும் பிறரது குற்றங்களை பார்க்காது அவர்களில் நல்ல குணங்களை மட்டுமே பார்க்கின்ற கண்களிலிருந்தால் "பாவமன்னிப்புகள்' ஒவ்வொரு நெஞ்சத்திலும் கங்கை நதியாய்க் கரைபுரளும், அதில் அனைத்துப் பாவங்களும் கரையும். 

  எத்தகைய தீயவனிடத்தும் உள்ள நல்ல குணங்களை மட்டுமே கண்டால், எத்தகைய தீயவனும் நல்லவனாகிவிடுவான். எத்தகைய நல்லவனிடமுள்ள   தீய குணங்களையே கண்டால் அவன் கெட்டவனாகவே தெரிவான். மன்னிக்க மறந்துவிட்டு வாழ்கின்ற அன்னையை, அப்பொழுதே மன்னித்துவிட்டு ஓடி வந்து கட்டிக்கொள்ளும் குழந்தைபோன்ற மனதே மன்னிப்பு என்னும் மகத்துவம். இதன் மணிமகுடம்.

  வார்த்தைகளும் அதன் தொனியுமே மன்னிப்பை நிர்ணயிக்கின்றன. “Why won’t you apologies” என்னும் புத்தகத்தில் "நல்ல எண்ணத்தோடு கேட்கப்படுகின்ற மன்னிப்புகள் கூட தோல்வியில் முடிவதுண்டு என்கிறார்' அதன் ஆசிரியர் ஹாரிப் லெர்னர்.

  மன்னிப்பு கேட்பது உணவில் உப்பை போன்றது. அது மிகையினும் அல்லது குறையினும் உணவின் சுவை மாறும். அதுபோன்று தேவையான இடங்களில் கேட்கப்படாத மன்னிப்பும், தேவையற்ற இடத்தில் கேட்கும் மன்னிப்பும் தவறே. மன்னிப்புகள் ஆணையிட்டு வழங்கப்படக்கூடாதது; அது மண்டியிடவைத்து பெறக்கூடாதது; கட்டாயப்படுத்தி பெறப்படும் மன்னிப்பு, அவமானத்தையும், இழிவையும், ஏற்படுத்தும். அது மன்னிப்பவனின் காயத்தை போக்கலாம், ஆனால் கேட்பவனின் மனதில் உள்ளாறாத வடுவினை உருவாக்கும்.

  மன்னிப்பு உடைந்த உறவினை புனரமைக்கும். நட்புப் பாலத்தை பலமாக்கும்.

  தன்னிடம் தவல்லையென்றாலும் "தவறுகள் இயற்கை' என்ற மனமுள்ளவர்களால் மட்டுமே மன்னிப்பைத் தர முடியும். மன்னிப்பு என்பது ஒரு மனிதனின் செயலையும், அவரது பண்பையும் பிரித்து காட்டுவது. அவரது செயல்பாடு காயப்படுத்தியிருக்கலாம், அதற்காக அவர் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும்போது "மனச்சமன்' அடைந்து மன்னிப்பதே பெருமை தரும். 

  மன்னிப்பு மனித இதயங்களை ஒட்ட வைக்கும் பசை. ஆயிரம் முறை தோல்வி கண்டு அதன் பின் விடாமுயற்சியில் மின்சார பல்பினை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மனதில் ஓர் ஆசை. தனது வெற்றியை முதன் முதலில் விருந்தினர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும்  காண்பிக்க வேண்டும் என்பதே. அவர்களை வரவைத்து அமர வைத்ததும், எல்லோரும் ஆவலாய் மின்சார பல்பினை கொண்டு வரும் வாசல் நோக்கி காத்திருக்க, அதனை எடுத்து வந்த அவரது உதவியாளர் கை தவறிட பல்பு உடைந்ததும் சுக்குநூறாகியது. உதவியாளரின் மனம் எப்படி இருக்கும்? எல்லோரும் திகைத்தனர். உதவியாளரின் பார்வை ஒரு மன்னிப்புக்காக ஏங்கியது. கவலைப்படாதே! என்று சொல்லி எடிசன் உடனடியாக ஆய்வகம் சென்றார். மற்றொரு பல்பினைச் செய்து, அதே உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் சொன்னார். 

  "பல்பை உடைத்தவரிடமே மீண்டும் அதே வேலையை கொடுக்கிறீர்களே?' என்று கேட்டதற்கு, "பல்பு உடைந்தால் என்னால் திரும்பவும் செய்து கொள்ள முடியும், ஆனால் அவரது மனது உடைந்தால் அதை என்னால் சரிசெய்து விட முடியாதே! அதனால்தான் திரும்பவும் கொடுத்தேன்' என்றார். 

  தான் செய்த குற்றத்திற்கு "மன்னிப்பை' எதிர்பார்ப்பதும் பிறர் செய்கின்ற குற்றத்திற்கு "தண்டனை' கொடுக்க நினைப்பதும் மனித இயல்பு. தனக்கு தீங்கு செய்தவனை மன்னித்தால் பகை, கோபம், பிடிவாதம் மனக்கசப்பு, அறியாமை போன்ற மன ஒட்டுண்ணிகள் நீங்கும்.

  இன்னாசெய்  தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.(987)


  என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப பிறர் நமக்கு தரும் துன்பங்களுக்கு, ஈடாக அவர்களை மன்னிப்பதே நலம்.

  பெத்தலஹேமில் பிறந்து வளர்ந்த இயேசு, மனித குலம் முழுவதும் நல்வாழ்வு வாழ பல அற்புதங்களைச் செய்தார். அவர் ஓர் இறைத்தூதர் என்பதை நம்பாமல் பழித்தனர். இவன் சாகவேண்டியவன் என்று தலைமை குருவோடு சேர்ந்து மக்களும் குரல் எழுப்பினர். ஏசுவின் ஆடைகளை கலைந்து தலையில் முள்கீரிடம் சூட்டி, "யூதரின் அரசே வாழ்க' என கேலிகுரல் எழுப்பியும் அவரது தோளில் சிலுவையை சாத்தி பல மைல்கள் நடக்க வைத்து அவருக்கு இருபுறமும் இருகயவர்களை சேர்த்து சிலுவையில் அறைந்து உடலெங்கும் ரத்தம் வழிய செய்த நிலையிலும் ஏசு இறைவனை நோக்கி "தந்தையே! இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே இத்தவற்றைச் செய்கிறார்கள். இவர்களது பிழையை மன்னித்து அருளும்!' என்றார்.  தன்னை கொடுமைப்படுத்தியவர்களை மன்னித்ததோடு, கடவுளையும் அவர்களை மன்னிக்க மன்றாடியபோது  மனித உருவில் வந்த இயேசு, தெய்வமானார்.
  மன்னிப்பு  கேட்பவர் தைரியமானவர்!

  மன்னிப்பவர் வலிமையானவர்!
  முதலில் மறப்பவர் மகிழ்ச்சியானவர்!

  (தொடரும்)


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp