Enable Javscript for better performance
மன்னனும்... மாணவர்களும்!- Dinamani

சுடச்சுட

  

  மன்னனும்... மாணவர்களும்!

  By DIN  |   Published on : 16th July 2019 12:35 PM  |   அ+அ அ-   |  

  im5

  "ஓர் இலக்கை நிர்ணயித்தப் பிறகு, அந்த இலக்கின்படி நாம் என்னவாக ஆகப் போகிறோமோ... அதுவாகவே ஆகிவிட்டதாக கருதி, நம் முயற்சிகளைத் தொடரவேண்டும்' என்கிறது ஓர் உளவியல் விதி. இதைப் புரிந்து செயல்படுத்தியவர்கள் அவர்களது இலக்கை சிறப்பாக சென்றடைந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் நம்மிடம் நிறையவே இருக்கிறது.
  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர், காவல்துணை கண்காணிப்பாளர் உட்பட பல உயர் பதவிகளுக்கான குரூப் - I முதல்நிலை (Preliminary) தேர்வுகள் முடிந்து, அத்தேர்வை எழுதிய நான்கரை இலட்சம் போட்டியாளர்களில் தேர்ச்சிபெற்ற ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்கள் முதன்மை (Main) தேர்வை எழுதுவதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 
  தமிழகம் முழுவதுமிருந்து வரும் மாணவர்கள் சென்னையில்தான் முதன்மைத் தேர்வையோ, நேர்காணல் தேர்வையோ சந்திக்கவேண்டும். பயணம், தங்கும் இட வசதி, உணவு என்று எல்லாமே செலவுதான்... நேரம் உட்பட. தண்ணீருக்கான தட்டுப்பாடு தாண்டவமாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் பணம் கொடுத்தாலும், கொடுக்கின்ற பணத்திற்கு தரமாக எல்லாம் கிடைக்கிறதா என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. இந்த யதார்த்தமான அவல சூழ்நிலையில் எனக்குத் தெரிந்த இரு முதல் தலைமுறைப் பட்டதாரிகள் இந்த குரூப் - I முதன்மைத் தேர்வுக்காக சென்னைக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தின் தென்கோடியிலிருக்கும் ஒரு சிற்றூரிலிருந்து தங்களை முதன்மைத் தேர்வு வரை முன்னேற்றிக்கொள்ள தயார்படுத்திக்கொண்டவர்கள், அவர்கள். "என்னப்பா.... சென்னைக்கு எப்ப போறீங்க? எப்படி போறீங்க?'' என்ற என் கேள்விக்கு எந்தவித பெரிய திட்டமிடலும் இல்லாமல், தேர்வுக்கு ஒருநாள் முன்னதாகவே கிளம்புவதை சொன்ன அவர்கள், எப்படிப் போகப் போகிறோம் என்பதில் தெளிவாக முடிவெடுத்து வைத்திருக்கவில்லை.
  முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பின் உழைப்பு பிரமிப்பாக இருக்கும் சூழலில் நாம் சேமிக்கும் ஒவ்வொரு நிமிடமும், உயிர் ஆற்றலும் முக்கியம் என்பதை அவர்கள் முழுமையாக உணர்ந்திருக்கவில்லையோ என்கிற ஐயம் என்னுள் எழுந்தது. பயண நேரமும், பயணிக்கும் மார்க்கமும், வாகனமும் இதுபோன்ற பணிகளுக்குச் செல்லும்போது ஒருவரது ஆற்றல் விரயத்தைக் குறைத்து... தடுத்து, உயிர் ஆற்றல் சேமிப்பிற்கு வழிவகுத்து, அது தேர்வு அல்லது சோதனைக்கு உட்படும் நேரங்களில் நமக்கு ஊட்டமளிக்க, ஊக்கமளிக்க வல்லது என்பதை ஏனோ இந்த நாளைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்கவில்லை என்று வருத்தமாக இருந்தது. 
  "தம்பி! நீங்க இரண்டு பேரும் "நாளைய உதவி ஆட்சியர்'கள் அல்லது "காவல் துணை கண்காணிப்பளர்'கள் ஆகப் போறீங்கறத நம்புறீங்களா? '' என்ற என் கேள்விக்கு அவர்கள் நேர்மறையாகவே பதில் கூறினர். 
  "அப்டின்னா... என்னதான் பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும்.... சென்னைக்கு தொடர்வண்டியிலோ..... 
  அல்லது சொகுசுப் பேருந்திலோகூட ஏன்ப்பா.... ஒரு முன்பதிவு செஞ்சுவைக்கல? இப்பலாம் அது ஒன்னும் அவ்வளவு செலவுக்குரிய பெரிய விசயமில்லையே?'' என்ற எனது தொடர்கேள்விக்கு அவர்களிடமிருந்து மெளனமே பதிலாக வந்தது.
  மீண்டும் நானே தொடர்ந்தேன்: ""கிரேக்க நாட்டு மன்னன் அலெக்சாண்டர் கிழக்குதிசை நாடுகளை நோக்கி... குறிப்பாக அகண்ட பாரத தேச மண்ணிற்குள் படையெடுத்து வந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?'' என்று கேட்டவுடன், ஒரு மாணவன், சுறுசுறுப்படைந்து, "ஆமா... சார்'' என்று சொல்லி தொடர்ந்தான். ""பொது ஆ.மு. 326 - இல் பாரசீகர்களைக் தோற்கடித்துவிட்டு அலெக்சாண்டர் இந்தியத் துணைக்கண்டத்தின் நுழைந்த போது தட்சசீலத்தின் அரசரான அம்பி உட்பட பலர் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் அவரிடம் சரணடைந்தனர். பின்னர் அலெக்சாண்டர் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸுடன் போரிட நேர்ந்தது. இரு இராணுவங்களும் ஹைடாஸ்பெஸ் போரில் சந்தித்தன. இதில் போரஸின் துணிச்சல், மண்ணுரிமை சார்ந்த போர்க்குணம், கண்ணியம் போன்ற குணங்களால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர், ""நான் உன்னை எப்படி நடத்தவேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?'' என்று போரஸிடம் கேட்டதற்கு போரஸ் சொன்ன பதில் வரலாறு: "என்னை ஓர் அரசனைப் போலவே நடத்து'' என்ற பதிலால் அதிர்ந்த அலெக்சாண்டர், அவனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் போரஸின் அரியணையைத் திருப்பித் தந்ததாக இருக்கிறது வரலாறு'' என்று அவன் கூறியவுடன், நான் இந்த உரையாடலை முடித்துவைத்தேன்.
  "தம்பி... நான் கலெக்டருக்குப் படிக்கிறேன்... கலெக்டருக்குப் படிக்கிறேன்'னு வெத்துக் கூப்பாடு போட்டுக்கிட்டு ஆடம்பரமா திரியுற பல மாணவர்களுக்கு மத்தியில, இவ்வளவு உழைக்கிற நீங்க... நாம நாளைய "உதவி ஆட்சியர்'என்கிற நம்பிக்கையோடுதானே பயணிக்கணும்? வெட்டியா கெத்து காட்ட வேணாம்... ஆனால் போரஸ் மன்னன் மாதிரி உங்களுடைய தகுதிக்கு உட்பட்ட பயணத்தை, நிலையை மறக்காமல் அடுத்தபடியை நோக்கி போகலாமே? பயணத்திற்கு முறையா முன்பதிவு செய்யுங்க... கண்ணியமா அலைச்சலைக் குறைத்து ஆற்றலை சேமித்து, கலெக்டர் மாதிரியே சென்னையில போய் இறங்கி... நல்லா ஓய்வெடுத்துட்டு முதன்மைத் தேர்வு எழுதுங்க. நீங்க இன்றைய மாணவர்கள்... நாளைய ஆட்சியர்கள்... நீங்கள் மன்னர்கள்தான். நம்புங்கப்பா'' என்று கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தேன்.
  என் அறைக்குள் மாணவர்களாக வந்த திரும்பிய அவர்களது நடையிலும் உடல்மொழியிலும் போரஸ் மன்னனின் கண்ணியமும், கம்பீரமும் இருந்தது. அவர்கள் முதன்மை தேர்வில் வெற்றிபெற்று நாளைய ஆட்சியர்களாக தமிழகத்திற்குள் வலம் வர நாம் எல்லோரும் முழுமனதோடு வாழ்த்துவோம்.
  கே.பி. மாரிக் குமார் 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai