முகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி
இணைய வெளியினிலே...
By DIN | Published On : 30th July 2019 10:52 AM | Last Updated : 30th July 2019 10:52 AM | அ+அ அ- |

முக நூலிலிருந்து....
• நீங்கள் உற்சாகமாய் கைதட்டுங்கள்... அது
கேலி பேசுவோரின் கன்னத்தில்
அறைவதாய் இருக்கட்டும்...
புறம் பேசப்படும் வார்த்தைகள்
கைத்தட்டல் ஓசையில்
கேட்காமல் போகட்டும்.
கிரிதரன்
• ராகங்களுக்குக் கட்டுப்படுகிற
பேச்சு...
பாடலாகி விடுகிறது.
டி கே கலாப்ரியா
• மரணத்தைத் தாண்டிய
அமைதியும் இல்லை.
மறுத்தால்...
மனிதம் வாழ்வது தொல்லை.
முருகன் மணவாளன்
• வானத்தில் மிதக்கிறதா மேகம்?
மேகத்தில் மிதக்கிறதா வானம்?
மூழ்கி எழும்பும்
படகாகிறது நிலவு.
ராஜகுமாரன்
சுட்டுரையிலிருந்து...
• மழையை வரைந்து அழித்தேன்...
ரப்பரில் ஒட்டிக் கொண்டது
கருமேகம்.
பழைய சோறு
• காற்றிலும் அணையாமல் இருக்கிறது
அவள் ஏற்றிய தீபம்...
அவளின் அழகை ரசிப்பதற்காக.
அரஸ் நவநீ
• மரியாதை வயதைப்
பொருத்து வருவதில்லை...
அவரவர் செயல்களைப் பொருத்தே வருகிறது.
செவ்வந்தி
• பிட் அடித்து எழுதியதை
மறக்காத மாணவர்கள் தான்...
இணையதளத்திலும்
காப்பி - பேஸ்ட் செய்கிறார்கள்.
போஸ் பாண்டி
வலைதளத்திலிருந்து...
அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்த வாசிப்பின் வழியாகவும், அனுபவத்தின் வழியாகவும் தன்னுடைய முன்னகர்வை விரைவுபடுத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் புதிய வாசிப்புகளையும் அறிவுகளையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் வாழும் உலகு என்பது ஒரு சராசரி மனிதனின் உலகிலிருந்து மிகவும் முன்னே இருக்கின்றது. ஏனையவர்கள் அத்தகைய முயற்சி ஏதும் இல்லாததால் தங்களுடைய இடத்திலேயே இருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒரு கட்டத்தில் கட்டாயத்தின் காரணமாக தங்களைச் சற்றே முன்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். சிலர் தங்களால் தங்களுடைய சோம்பேறித்தனத்தை விட முடிந்த அளவிற்கு முன்னேறி, ஓர் இடத்தை அடைகிறார்கள். இதில் இடை நிலையை அடைபவர்கள் புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் மீதமுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இருக்கிறார்கள். இவர்கள், தான் வாழும் காலத்தில் பெரும் புகழ் அடைகிறார்கள். உதாரணமாக முதன் முதலாக சாட்டிலைட் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஒரு அறிவியலாளரை விட அதனை ஒரு தொலைக்காட்சிக்கான ஊடகமாக உபயோகிக்கும் ஒருவன் பெறும் புகழ் அதிகம்.
இந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தில் 2 விழுக்காடு மக்களே முற்றிலும் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாத் துறையிலும் நிகழ்த்துகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை. ஏனைய பிறர் அவற்றை பின் தொடர்வதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் அந்த 2 விழுக்காடு மக்கள் மீதமுள்ள 98 விழுக்காட்டிலிருந்தே மேலே வருகிறார்கள். நாம் அந்த 98 -இல் இருக்கலாம், அல்லது அதிலிருந்து படிப்படியாக முன்னேறி அந்த இரண்டு விழுக்காட்டை அடையலாம். அது எது என்பதனை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
http://www.mahiznan.com