முகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி
பின்னோக்கி நடப்பதில் உலக சாதனை!
By DIN | Published On : 30th July 2019 11:01 AM | Last Updated : 30th July 2019 11:01 AM | அ+அ அ- |

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொருவருக்கும் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கே போதிய நேரம் இருப்பதில்லை. ஆனால் பயிற்சி, பாதுகாப்பு, கண்காணிப்பு என அதிக பணிச்சுமையுடன் ராணுவ வீரராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், ஒரு நாள் முழுவதும் (பகல்-இரவு) தொடர்ந்து சுமார் 157 கி.மீ. பின்னோக்கி நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சு.பாலமுருகன் (31). நாகலாந்து- அசாம் மாநில எல்லையான திமாப்பூரில் உள்ள படைப் பிரிவில் ராணுவ வீரராகப் பணியாற்றி வரும் இவர், சிவகங்கையில் "அண்மையில் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி'யின் ஒரு பகுதியாக, 24 மணி நேரத்தில் சுமார் 157 கி.மீ. பின்னோக்கி நடந்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து ராணுவ வீரர் சு.பாலமுருகன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்த போது, கோவையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று விளையாட்டு சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியில் சேர்ந்தேன். பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு பாடவேளையின்போது பயிற்சிக்காக சக மாணவர்களுடன் மித வேகத்தில் ஓடுவது வழக்கம். அப்போது, மாணவர்களுக்கிடையே சிறு, சிறு குறும்புத்தனம் வெளிப்படும். அதன் காரணமாக, ஆசிரியர் என்னைத் தேர்வு செய்து மற்ற மாணவர்கள் ஓடும் போது அவர்களுக்கு முன்னால் பின்னோக்கி மெதுவாக ஓடி வருமாறு தெரிவிப்பார். இது எனக்கு முதலில் மிகவும் கடினமாகத் தோன்றியது. அதுவே நாளடைவில் பயிற்சியாகவும், பழக்கமாகவும் மாறியதால் ஒன்றும் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தான் நான் பின்னோக்கி நடப்பதில் சாதனை புரிய வேண்டும் என்பதற்கு அடித்தளமாக அமைந்தது.
பணிவாய்ப்புப் பெற்றவுடன் வேலையில் எனது முழு கவனத்தையும் செலுத்தினேன். அவ்வபோது ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பின்னோக்கி நடந்தும், ஓடியும் பயிற்சி எடுத்தேன். சுமார் 12 ஆண்டுகள் தொடர் பயிற்சி காரணமாக இந்த சாதனையை என்னால் நிகழ்த்த முடிந்தது. ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக இன்னும் கூடுதலாக கடின பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்'' என்றார்.
இதுபற்றி "சோழன்' உலக சாதனை புத்தகத்தின் நிறுவுநர் நிமலன் நீலமேகம் கூறியது :
"சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஜூலை 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு ராணுவ வீரர் சு.பாலமுருகன் பின்னோக்கி நடக்க ஆரம்பித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹிநாதன் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தனர்.
அரை கி.மீ சுற்றளவு கொண்ட மைதானத்தில் காலை 9 மணிக்கு பின்னோக்கி நடக்க தொடங்கிய பாலமுருகன், ஜூலை 10 ஆம் தேதி காலை 9 மணியளவில் தனது பயணத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் 157 கி.மீ தூரத்தை கடந்திருந்தார். அவருக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பழச்சாறு வழங்கப்பட்டது. இதுதவிர 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவக் குழு பரிசோதனை செய்தனர். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் ஓய்வு எடுக்கவில்லை.
இதற்கு முன்னர் கடந்த 1988-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோனி தோர்ட்ன் என்பவர் 24 மணி நேரத்தில் 153.5 கி.மீ. பின்னோக்கி நடந்துள்ளார். அதுவே உலக சாதனையாகப் பதிவு பெற்றுள்ளது. அந்த சாதனையை சு.பாலமுருகன் கடந்து விட்டார். இதனை "சோழன்' உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம். மேலும், இந்த விளையாட்டு இதுவரை ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை. ஆனால் இனி நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் நடத்துவதற்கு முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
- ச.சந்தனக்குமார்