நீரில் மூழ்குபவரை காப்பாற்றும் ட்ரோன்!
By DIN | Published On : 30th July 2019 12:19 PM | Last Updated : 30th July 2019 12:19 PM | அ+அ அ- |

தண்ணீரில் மூழ்கியிருப்பவரைக் காப்பாற்றும் வகையில் அருமையான ட்ரோனை வடிவமைத்துள்ளார் அலியாஸ்கர்.
ஜெர்மனி சீஜென் பல்கலைக்கழகத்தில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அவர் அந்த சிறப்பான ட்ரோனை வடிவமைத்துள்ளார். கடல் சார் தொழிலில் ஆர்வம் கொண்ட அவர், தனது தந்தை அகமதுஷேக் மற்றும் சகோதரர் தாகிர் அகமது ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுதான் இந்த ட்ரோன்.
EAC Marine Pvt Ltd என்ற நிறுவனத்தை விசாகப்பட்டினத்தில் தொடங்கிய அலியாஸ்கர், இந்திய கடலோர பாதுகாப்பு, இந்திய கடற்படை பாதுகாப்பு போன்ற ஏஜென்சிகளுடன் இணைந்து பணிபுரியத் தொடங்கியுள்ளார்.
விசாகப்பட்டினத்தின் கடலோரப் பகுதி மிகவும் கடினமாக இருப்பதால் பலர் மூழ்கிவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. அதனால் அப்படி மூழ்குபவர்களை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என சிந்தித்தன் விளைவே ட்ரோன் உருவாக காரணமாகியது என்கிறார் அலியாஸ்கர்.
"எனது தந்தையின் துணையோடு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தண்ணீர் ட்ரோன் வடிவமைக்க தீர்மானித்தோம். கடந்த மே மாதம் இதற்கான முன்வடிவம் தயாரானது. இந்த ட்ரோன் பிரத்யேக ரிமோட் வாயிலாக இயக்கப்படுகிறது.
இந்த ட்ரோன் இணையத்தையோ அல்லது டவர் சிக்னலையோ சார்ந்து செயல்படுவதில்லை. இது ரேடியோ அதிர்வலையைக் கொண்டு இயங்குகிறது. குறிப்பாக புயல், நிலநடுக்கம் போன்ற சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் இருக்கும் நேரத்தில் கூட ரேடியோ அலைகள் பயனுள்ளதாக அமையும். தண்ணீரில் ட்ரோன் தூக்கியெறியப்பட்டதும் 7 knots (நொடிக்கு 14 மீட்டர்) வேகத்தில் இது செல்லும். மனிதர்களால் இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. எங்களுடைய தயாரிப்புக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம்.
ஒரு நபர் நீரில் மூழ்குவதை கண்டால் உடனடியாக ட்ரோனைக் கடலில் வீசலாம். ரிமோட்டை இயக்கி மூழ்கிக்கொண்டிருக்கும் நபரின் திசை நோக்கி ட்ரோனை நகர்த்தி அவரை பாதுகாப்பாக மீட்க முடியும். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு, உயிர் காத்தல்,வெள்ளம் பாதித்த இடங்களில் மருந்துகள் விநியோகித்தல் உள்ளிட்ட வெவ்வேறு பயன்பாடுகளுக்காக 12 ட்ரோன் மாதிரிகளை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. ரிமோட்டின் தொடர்பு எல்லை 3 கிலோமீட்டர் என்றபோதும் இது 10 கிலோமீட்டர் வரை நீட்டித்துக் கொள்ளலாம். ரிமோட்டை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் தேவைப்படும்
சுமார் 12 கிலோ எடை கொண்டது, மிதமான லோடில் 45 நிமிடங்களும், ஜிபிஎஸ் ட்ராக்கிங்கிற்கு எட்டு மணி நேரமும் பேட்டரி நீடிக்கும். ஹெச்டி கேமிரா, ரோபோடிக் ப்ரோப் உள்ளிட்ட கருவிகளுடன் இதை இணைத்துக்கொள்ளலாம்'' என்கிறார் அலியாஸ்கர்.
- வி.குமாரமுருகன்