Enable Javscript for better performance
ஏற்றுமதி... இறக்குமதி... இளைஞர்களுக்கு வாய்ப்பு!- Dinamani

சுடச்சுட

    

    ஏற்றுமதி... இறக்குமதி... இளைஞர்களுக்கு வாய்ப்பு!

    By DIN  |   Published on : 04th June 2019 11:50 AM  |   அ+அ அ-   |    |  

    im6

    படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, வேலை தேடாமல் சொந்தமாகத் தொழில் செய்ய எவ்வளவு பேர் நினைக்கிறார்கள்? அப்படியே நினைத்தாலும் அவர்களுக்கு யார் வழி காட்டுவது? சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அரசு ஏதேனும் நலத்திட்டங்களை அறிவித்திருந்தால் அதை யார் அவர்களுக்குத் தெரிவிப்பது? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறவர்களுக்கு பதில் கூறும் விதமாக சென்னையில் கடந்த 25 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி நடந்தது. "ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ்' ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் இன்டைரக்ட் டேக்ஸஸ் சப் கமிட்டியின் தலைவரான வி.வி.சம்பத்குமார், எக்ஸிம் கன்சல்டன்ட் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் ஆர்.ஆர்.பத்மநாபன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு, ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யும் இளைஞர்களுக்கு வழிகாட்டும்விதமாக பல தகவல்களைச் சொன்னார்கள். 
    ஆர்.ஆர்.பத்மநாபனுடன் இது குறித்து பேசினோம்...
    "ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு அவர்கள் செய்த ஏற்றுமதி, இறக்குமதியின் மதிப்பில் ஏற்கெனவே விதித்துக் கொண்டிருந்த வரி அளவில் அரசு தற்போது மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது சுங்க வரியிலிருந்து 2 சதவீதம் திருப்பித் தரப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதே போன்று ஏற்றுமதியின் மதிப்பில் 3 சதவீதம் மானியம் வழங்குவதாக மத்திய அரசின் வணிக அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆக மொத்தம் 5 சதவீதம் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோன்று வெளிநாட்டினருக்கு சேவை தொடர்பான பணிகள் செய்பவர்களுக்கு 5 இலிருந்து 7 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை scrip வடிவத்தில் அளிப்பார்கள். நம் எல்லாருக்கும் தெரிந்த டிமாண்ட் டிராஃப்ட் போன்றதுதான் இந்த ஸ்கிரிப். ஆனால் இந்த ஸ்கிரிப்பை பணமாக மாற்ற முடியாது. அடுத்து செய்யக் கூடிய ஏற்றுமதி, இறக்குமதி பணியின்போது வரி கட்டும்போது இந்த ஸ்கிரிப் மதிப்பைக் கழித்துக் கொண்டு மீதிப் பணத்தை வரியாகச் செலுத்தலாம். 
    ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இத்தகைய மானியங்களை, வரிச் சலுகைகளை அளிக்க முன் வந்திருக்கிறது. 
    ஆனால் நமது இளைஞர்கள் பலருக்கு- அதிலும் சொந்தத் தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு - ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், சேவைகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. 
    சேவைகள் என்பனவற்றில் நேரடியாக மென்பொருளை ஏற்றுமதி செய்வது அடங்காது. ஆனால் மென்பொருளை வைத்து செய்யக் கூடிய எல்லாப் பணிகளுக்கும் 5 முதல் 7 சதவீதம் வரை மானியம் தரப்படும். 
    மெடிக்கல் சர்வீஸ், டூரிஸம், கட்டட வடிவமைப்புச் செய்து தருவது, ஆன்லைனில் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு டியூஷன் எடுப்பது எல்லாமே சேவைகள் என்பதில் அடங்கும். 
    வெளிநாட்டில் உள்ள ஒருவர் நமதுநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள நினைக்கிறார் என்றால், அவருக்கான எல்லா உதவிகளையும் நீங்கள் செய்து கொடுத்தால் அது சேவை. 
    ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யலாம். பொருள்களை ஏற்றிச் செல்வது, கண்டெய்னரில் அவற்றை ஏற்றுவது, பேக்கிங் செய்வது, இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை இறக்கி உரிய இடத்தில் அவற்றைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து இளைஞர்கள் வேலைக்குச் சேரலாம். 
    சொந்தமாக ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் செய்யலாம். அதற்கு இளைஞர்கள் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பொருளை ஏற்றுமதி செய்வது? எந்த நாட்டுக்கு, எந்த நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்வது? ஏற்றுமதி செய்யக் கூடிய பொருள்களின் தரம் எப்படி இருக்க வேண்டும்? ஏற்றுமதி செய்த பொருளுக்குப் பணம் தரப்படவில்லை என்றால் என்ன செய்வது? நேர்மையான வெளிநாட்டு நிறுவனங்களை எப்படிக் கண்டுபிடிப்பது? ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை எப்படி பேக்கிங் செய்ய வேண்டும்? ஏற்றுமதி தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான அனுமதியைப் பெறுவது எப்படி? என நிறையத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அதேபோன்று எந்தப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அவை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
    நமது தமிழகத்தில் ஏற்றுமதி செய்யக் கூடிய நிறையப் பொருள்கள் உள்ளன. மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இட்லியை ஏற்றுமதி செய்கிறார்கள். டுனிஷியாவிலிருந்து துபாய்க்கு கத்தரிக்காயை ஏற்றுமதி செய்கிறார்கள். நம்நாட்டில் சுவையாக உள்ள வெண்ணெய் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்யலாம். 

    ஈரோட்டில் இருந்து மஞ்சள், காஞ்சிபுரத்திலிருந்து பட்டுச் சேலைகள், கரூரிலிருந்து ஜமுக்காளம், குமாரபாளையத்திலிருந்து துணிகள், திருப்பூரிலிருந்து பனியன்கள், திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிகை என நாம் ஏற்றுமதி செய்ய ஏராளமான பொருள்கள் தமிழ்நாட்டில் உள்ளன. 
    அதிலும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. வெறும் தக்காளியை அனுப்புவதை விட ஜூஸ் செய்து அனுப்பலாம். முருங்கைக்காய் பவுடர், முருங்கைக்காய் சூப், வில்வ இலைப் பவுடர் என ஏற்கெனவே உள்ள பொருள்களை மதிப்புக் கூட்டி அனுப்பினால் நிறைய இலாபம் கிடைக்கும். 
    ஆனால் ஏற்றுமதி செய்வதற்கான நேர்த்தியுடன் பொருள்களை அனுப்ப வேண்டும். உதாரணமாக முருங்கைக்காய்களை அனுப்பினால், ஒன்று நீளமாக, ஒன்று குட்டையாக, ஒன்று பருமனாக, ஒன்று மெலிந்து என்று இருக்காமல் ஒரே சீராக உள்ளமுருங்கைக்காய்களை அனுப்ப வேண்டும். உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இப்படி இளைஞர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. 
    ஒரு சில ஆண்டுகள் ஏதாவது ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து, வேலையைப் பழகிக் கொண்டு, அப்புறம் சொந்தமாகத் தொழில் தொடங்கினால் சிறப்பாக ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை இளைஞர்கள் செய்ய முடியும்'' என்றார். 
    ந.ஜீவா


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp