சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 51- தா.நெடுஞ்செழியன்

வரலாற்றுச் சான்றுகள் ஆவணப்படுத்தப்படுவது என்பதை ஏதோ பழைய காலத்தின் சான்றுகளை ஆவணப்படுத்துவது என்று நினைத்துவிட வேண்டாம்
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 51- தா.நெடுஞ்செழியன்

வரலாற்றுச் சான்றுகள் ஆவணப்படுத்தப்படுவது என்பதை ஏதோ பழைய காலத்தின் சான்றுகளை ஆவணப்படுத்துவது என்று நினைத்துவிட வேண்டாம். இன்று பல்வேறு நிறுவனங்களின் தோற்றம், வளர்ச்சி, வெற்றி, தோல்விகள் எல்லாம் ஆவணப்படுத்தப்படுகின்றன. அது சினிமாத்துறையாக இருக்கலாம். தொலைக்காட்சிதுறையாக இருக்கலாம். கல்வித்துறையாக இருக்கலாம். அவற்றின் வரலாறுகள் இப்போது ஆவணப்படுத்தப்படுகின்றன. 
உதாரணமாக ஓவியத்துறையை எடுத்துக் கொள்வோம். ஓர் ஓவியர் வரைந்த பழைய ஓவியங்களை அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி, ஆவணப்படுத்தினால், அந்த ஆவணத்தைக் காண்பவர்கள் தங்களுக்குத் தேவையான ஓவியங்களை வாங்க நினைப்பார்கள். அதனால் அந்த ஓவியங்கள் மிக அதிகமான விலைக்கு உலகச் சந்தையில் விற்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 
"ஹிஸ்டரி வித் ஆர்க்யாலஜி' என்ற துறையை எடுத்துக் கொண்டோமேயானால், பூமியின் அடியில் புதைக்கப்பட்ட பொருள்களை பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிக்கொண்டு வந்து, அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, முறையாக ஆவணப்படுத்தி இன்றைய தலைமுறையினருக்குத் தருவது அதன் முக்கிய பணியாகும். தற்போது தமிழகத்தில் கீழடியில் உள்ளதைப் போன்று, அல்லது பழைய மொகஞ்சாதரோ நகரத்தில் எடுக்கப்பட்டவை போன்று உலகின் பல்வேறு இடங்களில் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்திருக்கின்றனர். 
தமிழ்நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள், கோயில்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் உள்ள கலைப்பொருள்களைப் பாதுகாத்தல், கல்வெட்டுகளை நகல் எடுத்தல், கல்வெட்டுகளில் உள்ளவற்றை புத்தக வடிவில் வெளிக்கொண்டு வருதல் போன்ற பணிகளைச் செய்வது தொல்லியல்துறையாகும். அரண்மனைகளைப் பாதுகாப்பதும் அவர்கள் பணியே.
"ஹிஸ்டரி ஆஃப் ஸ்ட்ரேடஜிக் மேனேஜ்மென்ட்' என்ற ஒரு துறை உள்ளது. இது 3500 ஆண்டுகளுக்கு முன்னதாக எகிப்தில் நடந்த போரில் மேற்கொண்ட யுத்த தந்திரங்கள் எவை? அவற்றை இன்றைய வணிகத்துக்கு, தொழில்துறைக்கு பொருத்துவது எப்படி? என்பதை இன்றைய வரலாற்றாளர்களின் உதவியுடன் வெளிநாடுகளில் உள்ள இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆய்வு செய்து பயன்படுத்தி வருகின்றன. பழைய வரலாற்றுச் சான்றுகளைக் கண்டறிந்து அவற்றில் உள்ள போர்த் தந்திரங்கள், தற்போது தங்களுடைய வணிகத்தில், தொழிலில் வெற்றி பெறுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
பழைய சீனத்தில் சன் ட்ஸþ என்ற ஒரு தத்துவஞானி இருந்தார். இன்றைக்கும் வணிகத்தில் உள்ளவர்கள், ராணுவத்தில் உள்ளவர்களுக்குப் பயன்படக் கூடியதாக அவருடைய போர்த்தந்திரங்கள் உள்ளன. அவர் தனது போர்த்தந்திரங்களை "தி ஆர்ட் ஆஃப் வார்' என்ற புத்தக வடிவில் வெளியிட்டார். போருக்குச் செல்லாமல், சண்டையிடாமல் பிற நாடுகளை போர்த்தந்திரங்களைப் பயன்படுத்தி எவ்வாறு வெல்லலாம்? என்பதை அந்தப் புத்தகத்தில் அவர் வெளியிட்டிருந்தார். 
இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக, ஆப்பிள் கம்பெனி பெர்சனல் கம்ப்யூட்டர் கொண்டு வரும்போது, மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சொல்லலாம். அப்போது கம்ப்யூட்டர் மார்க்கெட்டில் இயங்கிவந்த டோசிபா, ஏùஸர், லினோவா ஆகிய கம்பெனிகள் "விலை' என்ற ஒன்றை வைத்து மட்டுமே வாடிக்கையாளர்களை அணுகுவதில் போட்டியிட்டு வந்தார்கள். இந்தப் போட்டியினால் அவர்களுடைய லாபம் குறைந்து வந்தது. இதற்கு நேர்மாறாக வாடிக்கையாளர்களின் தேவைகளை அடிப்படையாக வைத்து அவற்றை நிறைவு செய்வது என்ற முறையில் ஆப்பிள் கம்பெனி செயல்பட்டது. அதற்கேற்ப அவர்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்தார்கள். பிற கம்பெனிகளை விட அதிக விலையை நிர்ணயித்தார்கள். போட்டியாளர்களைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல், மிகவும் துணிச்சலாக அவர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். மற்றவர்களுடன் போட்டியிட்டு தொழில் நடத்துவதை விட, அவர்களுக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி, எண்ணற்ற வாடிக்கையாளர்களை உருவாக்கினார்கள். இந்த வணிகத் தந்திரம், பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்த்தந்திரங்களிலிருந்து பெறப்பட்டது. 
இதே போன்று பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற போர்களில், பயன்படுத்தப்பட்ட போர்த்தந்திரங்களை இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நன்கு புரியும் வண்ணம் தெளிவாக எடுத்துச் சொல்பவர்கள் வரலாற்றாளர்களே. 
படைத்துறை சார்ந்த வரலாற்று ரகசியங்கள் சில மிலிடரி டிஃபன்ஸ் மியூசியங்களில் மட்டுமே ஆவணப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக திருச்சியில் உள்ள ஆர்டினன்ஸ் பேக்டரியில் துப்பாக்கி மியூசியம் உள்ளது. இதுவரை எத்தனை வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, அவை எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதையெல்லாம் ஆவணப்படுத்தியுள்ளார்கள். 
இதேபோன்று இந்தியாவில் பல்வேறு பாதுகாப்பு மியூசியங்கள் நிறுவப்பட்டுள்ளன. இப்போது உலகின் தலைசிறந்த தலைவர்களின்வாழ்க்கை வரலாறு சார்ந்தவை அருங்காட்சியகமாக வைக்கப்பட்டுள்ளன. 
பல்வேறுநாடுகள் அந்த நாட்டில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகளை இன்றும் அருங்காட்சியகங்களில் வைத்திருக்கிறார்கள். உதாரணமாக "இண்டியா ஹெரிட்டேஜ் சென்டர்' என்ற பெயரில் சிங்கப்பூர் அரசு, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எந்தெந்த துறையில் என்னென்ன பணியாற்றினார்கள் என்பதை ஆவணப்படுத்தியுள்ளார்கள். அங்கே அவர்கள் பாரம்பரிய இந்திய விளையாட்டுகளை, பரமபதம், பல்லாங்குழி, ஐந்து கல் ஆகியவற்றை இங்கு மாணவர்கள் அமர்ந்து விளையாடுவதற்கு வசதி செய்து தந்திருக்கிறார்கள். இதை இந்திய வம்சாவளி மாணவர்கள் மட்டுமல்லாமல், சிங்கப்பூரில் உள்ள எல்லா மாணவர்களும் விளையாடுகிறார்கள். 
இந்த அருங்காட்சியகத்தின் வாயிலாக இன்றைய மாணவர்கள் சிங்கப்பூரின் பாரம்பரிய வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அங்கு வாழ்ந்த இந்திய வம்சாவளியினரைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. 
இதுபோன்று நம்நாட்டிலும் எண்ணற்ற வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும் நமது நாட்டில் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் வரலாற்றுக் கல்வியைச் சொல்லித் தராததால், இந்தத் துறையைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாமற் போய்விடுகிறது. வரலாற்றுத்துறையின் சிறப்பு இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய எவ்வளவோ வரலாற்று ஆவணங்கள் - பிற தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியவை - கவனிப்பாரற்று சேதமடைந்து வருகின்றன. 
1984 இல் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னப் பட்டியலில் இந்தியாவின் 37 இடங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் நீலகிரியில் அமைந்துள்ள ஊட்டி ரயில் போக்குவரத்து, சோழர் கோயில்கள், மகாபலிபுரம் உட்பட 4 இடங்கள் தமிழகத்தில் இருந்து இடம் பெற்றிருக்கின்றன. 
வரலாற்றுத்துறையைத் தேர்ந்தெடுத்து, பயில விருப்பம் உள்ள மாணவர்கள் யுனிவர்சிட்டி ஆஃப் ஹைதராபாத் - இல் ஹிஸ்டரி வித் ஆர்க்யாலஜி, எம்ஏ இன்டகரேட்டடு ஹிஸ்டரி படிக்கலாம். இதேபோன்று புதுச்சேரியில் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்.ஏ. வரலாறு ஐந்து ஆண்டுகள் படிக்கலாம். இந்த ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டம் இந்த இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இங்கு கல்வெட்டுகளைப் படிப்பதற்கும், ஸ்க்ரிப்ட் பற்றி படிப்பதற்கும் முடியும். 
பிரான்ஸில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து கல்வெட்டுகள், பழந்தமிழ் எழுத்துருக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றன. எனவே புதுச்சேரியில் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பயிலும் தமிழ் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மாணவர்கள் பிரான்சில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் உள்ளன. 
பி.ஏ. வரலாறு படித்தவர்கள் டெல்லி ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டியில் எம்.ஏ. ஹிஸ்டரி படிக்க முடியும் .
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை விட வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறை, தமிழகத்தைப் பற்றி நாம் அறிந்திராத, கேள்விப்பட்டிராத, நமது பழைய வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார்கள். எனவே வரலாறு மிக மிக முக்கியமான துறையாகும். 
தமிழ்நாடு தொல்லியல்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம் முதுகலை டிப்ளமோ (PG DIPLOMA) மூன்று பாடப்பிரிவுகளில் வழங்கி வருகிறது. 1. கல்வெட்டுத்துறை, 2.தொல்லியல்துறை, 3.அகழ்வாராய்ச்சி. திருமலைநாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் அரண்மனை, ராமநாதபுரம் அரண்மனை ஆகிய மூன்றும் தமிழகத் தொல்லியல்துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இங்குள்ள நூலகத்தில் தொல்லியல், மானுடவியல், கலை, வரலாறு, கல்வெட்டியல் தொடர்பான இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. இங்கு 1980 முதல் தொல்லியல் ரசாயன ஆய்வுக்கூடம் இயங்கி வருகிறது. நினைவுச்சின்னங்கள், வெண்கலப் படங்கள், செப்புத் தகடுகள், நாணயங்கள், சுடுமண், ஓவியங்கள் பழமையான பொருள்கள் போன்றவை ரசாயனம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com