வேலை வாய்ப்புகள்...: வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சிகள்!

மலப்புரம் மாவட்டத்தின் ஒரு பண்ணை குடும்பத்தில் இருந்து வந்தவர் டாக்டர் ராஜேந்திரன். கேரள வேளாண் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு கடந்த 1983 - இல் கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.
வேலை வாய்ப்புகள்...: வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சிகள்!


மலப்புரம் மாவட்டத்தின் ஒரு பண்ணை குடும்பத்தில் இருந்து வந்தவர் டாக்டர் ராஜேந்திரன். கேரள வேளாண் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு கடந்த 1983 - இல் கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பிறகு கேலப்பாஜி வேளாண் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்த அவர் அங்கு 15 ஆண்டுகள் தோட்டக்கலை பாடங்களை மாணவர்களுக்குக் கற்பித்தார்.

உயிரி தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற ராஜேந்திரன், சவூதி அரேபியாவுக்குச் சென்று அங்கு பல வசதிவாய்ப்புகளோடு பணியாற்றியவர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனக்கயம் முந்திரி ஆராய்ச்சி நிலையத்தில் இணை இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். 25 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த நிலையத்தில் தண்ணீர் இல்லை. குடிநீருக்குக்கூட வழியில்லாத அந்த இடத்தில் பணியாற்ற எவரும் முன்வரவில்லை.

இந்த நிலையில், வயநாடு மாவட்டம், அம்பலவாயல் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் (Regional Agriculture Research Station) கூடுதல் பொறுப்பும் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. பின்தங்கிய மலைவாழ் மக்கள் நிரம்பிய இந்தப் பகுதியும் வறட்சியின் கோர பிடியில் சிக்கியிருந்தது.  பிறகு அதற்கு முற்றிலும் மாறான நிலையில் அனக்கயம் முந்திரி ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார்.

இந்த மையத்தில் 10 உறுப்பினர்கள், 6 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். ராஜேந்திரன் பணியில் சேர்ந்தவுடன் 30 பண்ணை ஆள்களையும், 24 சுய உதவிக்குழு பெண்களையும் வேலையில் சேர்த்தார். ஒரு குழுவை உருவாக்கி அவர்களுக்கு விடுமுறை நாள்களில் வேளாண் சார்ந்த 6 மாத உயர்நிலை தொழில் பயிற்சி அளிக்கச் செய்தார்.

மேலும், உயர் நுட்ப ஊழியர் குழுவை (ஏண் பங்ஸ்ரீட் அழ்ம்ஹ்) அமைத்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேளாண் பணிகளை வேகமாகச் செய்ய அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். 25 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு ஒட்டு முறை, திசு வளர்ப்பு, துல்லிய விவசாயம், மாடித்தோட்டம், காய்கறிகளில் மதிப்புக் கூட்டுதல், பழங்கள், தானியங்கள், பாசனத்துக்கான மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல், மீன் பிடித்தல் ஆகியவையும் கற்றுத்தரப்பட்டன.

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க   ராஜேந்திரன் மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்தினார். பெரிய  குளம் தோண்டப்பட்டு, அதன் உள்புறம் நீரை தரை உறிஞ்சாமல் தடுக்க பிளாஸ்டிக் உறையை அமைத்தார். இந்த குளத்தில் கிட்டத்தட்ட 2 கோடி லிட்டர் மழைநீர் சேகரிக்கப்பட்டு, அது நாற்றுகளுக்கு பாய்ச்சப் பயன்படுத்தப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து மேலும் 2 குளங்கள் தோண்டப்பட்டன. 

செறிவூட்டப்பட்ட தாவர உற்பத்தில் முறையில் நாற்று உற்பத்தி துரிதமாக நடைபெற்றது. தற்போது இந்த நிலையம், திசு வளர்ப்பு ஆய்வுக்கூடம் மற்றும் அதிக அளவிலான காய்கறி விதைகள் மற்றும் நடவுப் பொருள்களைக் கொண்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் 500 டன் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு, பண்ணைகளில் பயன்படுத்தப்படுவதோடு, எஞ்சியவை வெளிச் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உயர்வகை பழங்கள், அலங்கார தாவரங்கள், காய்கறி நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  

இந்த நிலையம் தன்னுடைய 265 ஏக்கர் நிலத்திலிருந்து ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் மட்டுமே வருவாய் பெற்றது. இந்த நிலையில், ராஜேந்திரன்  உள்ளூர் விவசாயிகள், சுய உதவிக்குழு, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், வீட்டுப் பெண்கள் அனைவரையும் சந்தித்து  நம்பிக்கையூட்டினார்.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், ""விவசாய உயர் நுட்ப ஊழியர் குழு, வேலைவாய்ப்பின்மையை விரட்டும் மிகப்பெரிய ஆயுதம். இதில், பசுமை வீடுகளை உருவாக்குவது, பசுமை வீடுகளில் தாவரங்களை வளர்ப்பது, பூ உற்பத்தி ஆகியவற்றில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக  6 மாதப் பயிற்சி வழங்கப்பட்டது. முதல் பயிற்சியிலேயே 50 ஆண்கள், 40 பெண்கள் பங்கேற்றனர். 

பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு தோட்டங்கள், மலர் காட்சி இடங்களை அழகுபடுத்துவது, பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மதிப்பு கூட்டுவது, தாவரங்களில் இனப்பெருக்கம், விதை உற்பத்தி போன்றவற்றில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

2 நிலையங்களிலும் நான் எடுத்த முதல் முயற்சி மழைநீர் சேகரிப்பை அதிகப்படுத்துவதுதான். தற்போது, மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் 15 குளங்களை உருவாக்கி, 300 கோடி லிட்டர் மழைநீரை சேகரிக்க வகைசெய்துள்ளது. அதேபோல, முன்பு கர்நாடக மாநிலம், கூடலூரில் இருந்து நடவுப் பொருள்களை பெற்றுவந்த விவசாயிகள், தற்போது வெகுதொலைவில் இருந்தும் ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்து நடவுப் பொருள்களைப் பெற்றுச் செல்கின்றனர். 

ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்கு வயநாடு ஆம்பலவாயல் மிகச் சிறந்த இடம். இதை மனதில் வைத்து சர்வதேச அளவில் வணிகரீதியான தோட்டக்கலை தாவரங்களை அங்கு வளர்த்தோம்'' என்கிறார். 

ராஜேந்திரனின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுவது, அவர் கடந்த 2014- இல் தொடங்கிய பூப்பொலி மலர் கண்காட்சிதான் (Poopoli Flower Show). இது அந்தப் பகுதி மக்களின் அடையாளமாகவும், சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. கடந்த ஆண்டு 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த மலர் கண்காட்சி 5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருந்தது. இதன்மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ. 1.75 கோடி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலர்க்காட்சி இடம் காய்ந்த வனாந்திரமாகக் கிடந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வயநாடு "சிறப்பு மலர்இயல் மண்டலமாக' (Special Floriculture Zone) அறிவிக்கப்பட்டுள்ளது.

குழுப் பணி, விடா முயற்சி, அயராத உழைப்பு, நவீன வேளாண் தொழில்நுட்பப் பயன்பாடு போன்றவற்றால், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் இப்போது விவசாயிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஆர்வமுள்ளவர்களுக்கு  இங்குள்ள வேளாண் தொழில்நுட்பம் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com