Enable Javscript for better performance
வேலை வாய்ப்பு: தேவை... மொழிபெயர்ப்புத்திறன்!- Dinamani

சுடச்சுட

  
  im3

  இன்றைய உலகமயமாக்கல் கொள்கைகளில் யாரும், எந்த நாட்டிலும் சென்று பணியாற்றும் அல்லது வியாபாரம் செய்யும் சூழல் அமையலாம். அப்படியொரு நிலையில், சம்பந்தப்பட்ட நாட்டின் மொழியில் நாம் உரையாடப் பழகுவதும், கடிதங்கள் எழுதப் பயிற்சி பெறுவதும் தான் நம்முடைய தொடர்புத் திறனை மதிப்பிடுவதாக அமையும். இதற்கு நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்பதும், அவற்றில் சரளமாக உரையாட, எழுத, பயிற்சி பெறுவதும் அவசியம். 
  இந்தத் தொடர்பு மொழித் திறன், மொழிபெயர்ப்புத் திறனாக பரிணமிக்கும் போது, நம்முடைய வேலைவாய்ப்புக்கான சாதக நிலை பல மடங்கு உயரும். இதையொட்டி, மொழிபெயர்ப்புத் திறனின் அவசியம் குறித்து இளம் வயதிலேயே உணர்ந்து அதற்கான பயிற்சியை மாணவர்கள் பெறவேண்டும் என்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரி அறிவியல் பேரவை அண்மையில் ஒரு முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
  மொழிபெயர்த்து பேசுதல் மற்றும் எழுதுதல் திறன் (Language Translation
  and Interpretation) குறித்த திறன் மேம்பாட்டு முகாமை கன்னியாகுமரி அருகேயுள்ள சிதறால் மலைக்கோயில் பகுதியில் கடந்த மே 5 ஆம் தேதி குமரி அறிவியல் பேரவை நடத்தியது. மொழிபெயர்ப்பு மற்றும் அதன் வகைகள், மேடைப்பேச்சு மற்றும் அதன் உடனடி மொழிபெயர்ப்பு, எழுத்து மொழிபெயர்ப்பின் முறைகள் ஆகியவை குறித்து இளைஞர்களுக்கு விளக்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். 
  இதில், குமரி அறிவியல் பேரவையின் முன்னாள் இளம் விஞ்ஞானியும், தற்போது கேரளத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்து இளங்கலைப் பட்டம் பயிலும் குழித்துறை மாணவியுமான ஏ.எஸ். லக்ஷ்மி, முன்னாள் இளம் விஞ்ஞானிகள் பிரின்ஸி, திருஷ்யா ஆகியோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று மொழிபெயர்ப்புப் பயிற்சி அளித்தனர்.

  இந்தப் பயிற்சியின் குறிக்கோள் குறித்து குமரி அறிவியல் பேரவையின் அமைப்பாளர் முள்ளஞ்சேரி எம். வேலையன் கூறியது:
  "இந்த நவீன உலகில் ஒவ்வொரு மாணவரும் பிற மொழிகளை அறிந்திருப்பதோடு, அந்த மொழியில் சரளமாகப் பேசும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, மொழிபெயர்ப்புத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் உயர்கல்வி, வெளிநாட்டு கல்வி, வேலைவாய்ப்பு முன்னுரிமை, பதவி, ஊதிய உயர்வு போன்றவற்றுக்கு கைகொடுக்கும். இதையொட்டியே, மொழிமாற்றிப் பேசுதல், எழுதுதல் திறன் வளர்ச்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
  பொதுவாக எழுத்தில் உள்ளவற்றை மொழிபெயர்ப்பதற்கும், பேச்சை மொழிபெயர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எழுத்து மொழி பெயர்ப்பில், நமக்கு நிறைய கால அவகாசம் கிடைக்கும். நம்முடைய அறிவையும், உத்திகளையும் அதில் பயன்படுத்த முடியும். ஆனால், பேச்சை உடனடியாக மொழிபெயர்க்கும்போது இந்த வாய்ப்புகள் இருக்காது.
  மேலும், பேச்சு மொழிபெயர்ப்புக்கு தன்னம்பிக்கை மிக முக்கியம். பெரும்பாலானோருக்கு மேடை ஏறியவுடன் ஒருவிதப் பதற்றம் உண்டாகும். மொழிபெயர்ப்பின் போது, பேச்சாளரின் உணர்வுகளுக்கு ஏற்ப, நாமும் மொழிபெயர்ப்பில் உணர்ச்சிகளை மாற்றி அமைக்க வேண்டும். நாம் பேசும் இடத்துக்கு ஏற்ப மொழிபெயர்ப்பை பொருத்திக்கொள்ளவோ அல்லது ஒழுங்கு படுத்திக்கொள்ளவோ வேண்டும். 
  மொழிபெயர்ப்புக்கான பேச்சை நுணுக்கமாகக் கவனிப்பதும், அதை சரியாகப் புரிந்துகொள்வதும் அவசியம். பேச்சைக் கவனிப்பதில் கவனம் சிறிது தவறினாலும், நம்முடைய புரிதல் மாறிவிடும். முதல் நபர் குறிப்பிட்டு சொல்ல வந்த செய்தியை நம்மால் சரியாக விளக்க முடியாமல் போய்விடும். இவையெல்லாம் பேச்சு மொழி பெயர்ப்பில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.
  மொழிபெயர்ப்பில் ஈடுபட விரும்புவோர் இரண்டு மொழிகளின் இலக்கணத்தையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். பல மொழி நாவல்களை படிப்பதோடு, பிறமொழித் திரைப்படங்களைப் பார்க்கும்போது மொழியின் உச்சரிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு, புதிய வார்த்தைகள், ஏற்ற இறக்கம் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். எந்த மொழியை நாம் புதிதாகக் கற்றுக்கொண்டாலும், அதில் அவ்வப்போது ஏற்படும் புதுமைகளையும் (Updates) உடனடியாக அறிந்து பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
  தற்போதைய நிலையில், French, German, Portuguese, Russian, 
  Spanish ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான அதிக தேவை உள்ளது. அரபி, சீன, ஜப்பானிய மொழிகள், ஹிந்தி, கொரியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. 
  நல்ல மொழிபெயர்ப்புத் திறன் உள்ள இளைஞர்கள் நிறைய ஊதியம் ஈட்டும் பணிகளில் சேரஅதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த விஷயங்கள்தான் கருத்தாளர்கள் மூலமாக முகாமில் பங்கேற்றவர்களுக்கு விளக்கப்பட்டது'' என்றார் அவர்.

  கருத்தாளராகப் பங்கேற்ற முன்னாள் இளம் விஞ்ஞானி ஏ.எஸ். லக்ஷ்மி, முகாம் குறித்து கூறுகையில், "நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் பயிலும் போது குமரி அறிவியல் பேரவையில் இளம் விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது, நான் பெற்ற பல பயிற்சிகள், அனுபவங்கள் என்னை இன்னும் மனதளவிலும், செயலளவிலும் ஊக்குவித்து வருகின்றன. இப்போதுள்ள இளம் விஞ்ஞானிகளும், இளைஞர்களும் என்னைப் போல ஊக்கம் பெறவேண்டும் என்பதற்காக, மொழிபெயர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு முகாமில் கருத்தாளராகப் பங்கேற்றேன்'' என்றார். 
  இரா. மகாதேவன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai