திறமையை வளருங்கள்! வேலையைப் பெறுங்கள்!

உலகில் வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம்
திறமையை வளருங்கள்! வேலையைப் பெறுங்கள்!

உலகில் வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம். இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை பிரச்னை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 சர்வதேச அளவில் சுமார் 7 கோடி இளைஞர்கள் வேலையில்லை எனப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். பதிவு செய்யாத இளைஞர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 உலக வங்கியின் கணக்குப்படி, சுமார் 62 கோடி இளைஞர்கள் வேலை, கல்வி, பணிக்கான பயிற்சி ஏதும் மேற்கொள்ளாமல் இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் 20 கோடி பணியிடங்களுக்காக 60 கோடி இளைஞர்கள் போட்டியிடுவார்கள் என ஆய்வுகள் தெரிவிப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
 இத்தகைய சூழலில், அனைவரையும் உள்ளடக்கிய தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியையும், அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலையை வழங்குவதையும் முக்கிய இலக்காகக் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
 இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், அனைவரும் வேலையின்மைக்கான காரணிகளைக் கண்டறிந்து, அதற்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
 வேலையின்மை எதனால்?
 பொருளாதார வீழ்ச்சி:
ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்திக்கும்போது, அந்நாட்டில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களிலும் சரிவு ஏற்பட்டு, தொழில் நஷ்டத்தை நோக்கி செல்லும் வகையிலோ, நிறுவனம் திவாலாகும் வகையிலோ பாதிப்பு ஏற்படுகிறது.
 இந்த இழப்பைச் சரி செய்யும் வகையில், நிறுவனங்கள் தங்களது பணியாளர்களைப் பெரிய அளவில் பணிநீக்கம் செய்வதால் வேலையின்மை அதிகரிக்கிறது.
 தகுதி முரண்: வேலையின்மை பெருகி வரும் சமயத்தில், அதிக தகுதியுடைவர்கள் கூட, தங்களது தகுதிக்கும், திறனுக்கும் பொருத்தமற்ற பணிகளில் பணியாற்றத் தொடங்கி விடுகின்றனர்.
 8-ஆம் வகுப்பு தகுதி தேவையுடைய ஒரு பணிக்கு பொறியாளர்கள் விண்ணப்பித்து தேர்வானால், 8-ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு வேலையில்லாமல் போகிறது. அவர்கள் அதனினும் குறைந்த தகுதியுடைய பணிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படு
 கிறது. இந்த சுழற்சி அடுக்கடுக்காக கடைநிலைப் பணியாளர்கள் வரை வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.
 முதலீடு பற்றாக்குறை: தொழில் தொடங்குவதற்கு தேவையான அளவுக்கு நிதி வசதி தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு இருப்பதில்லை. போதிய பண வசதி இல்லாததால் அவர்களும் வேலையில்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது.
 தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு: உலக அளவில் பல்வேறு நாடுகள் தொழில்நுட்பத்தில் பன்மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. எனினும், பல ஏழை நாடுகளுக்கு அந்த வளர்ச்சி எட்டாக் கனியாகவே உள்ளது. வளரும் நாடுகளிலும் இந்த வளர்ச்சிகளைப் பயன்படுத்துவதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில், ஏழை மாணவர்கள், ஏழை இளைஞர்களுக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளன. இத்தகைய சூழலில் அனைவருடனும் போட்டியிட்டு அவர்களுக்கான வேலையை அடைவது பெரும் கடினமாகிறது.
 வேலையின்மைக்கான தீர்வுகள்!
 கல்வி முறையில் மாற்றம்:
பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி பாடத்திட்டங்களில் நவீன வளர்ச்சிக்கு உகந்தவிதத்தில், தேவைக்கு ஏற்றவிதத்தில் முதலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் இளைஞர்களுக்கு பயனடையும் வகையில் கல்வி இருக்க வேண்டும்.
 பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வெறும் புத்தக அறிவு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு நிர்வாகத் திறன், உள்ளிட்டவற்றையும் கற்பிக்க வேண்டும்.
 நம்நாட்டில் பட்டப் படிப்பில் ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால்தான், தற்போது பொறியியல் படித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அவ்வாறு இல்லாமல் அனைத்து துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அனைத்து துறைகளைக் குறித்தும் பள்ளியில் இருந்தே தெரியப்படுத்த வேண்டும். தனக்குப் பிடித்த துறையை, ஆர்வமான துறையை அவர்களாக தேர்ந்தெடுக்கும்போது, நிச்சயம் வேலையில்லாமல் போகாது.
 திறன் மேம்பாடு: உலக நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரிய சவாலாக இருப்பது, வேலையின்மை அல்ல. வேலைக்குத் தகுதியில்லாமல் இருப்பதே. நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தும் அதற்கு தகுதியுடைய இளைஞர்கள் இல்லாமல் இருப்பது வேலையின்மைப் பிரச்னைக்கு ஒரு காரணமாகும்.
 பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே இளைஞர்கள் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வகுப்பில் இணைந்து தங்களது திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 தொழில் தொடங்க முதலீடு: தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் குறைந்தபட்ச வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி வங்கிகளை மட்டும் சார்ந்து இருக்காமல், கிரெளட் ஃ பண்டிங் முறை மூலம் தற்போது நிறைய இளைஞர்கள் தங்களது தொழிலைத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு நாள்தோறும் தொழில் தொடங்க முதலீட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்த வாய்ப்புகளை தேடிப் பெற்று பயனடைய வேண்டும்.
 தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துதல்: பல நாடுகளில் தொழில்நுட்பத்தை பெறுவதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சில இலவச இணையதளங்களும் உள்ளன என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இலவசமாக இணையதளம் உருவாக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, இலக்கை சரியாக நிர்ணயித்துப் பயணித்தால் நமக்கான வேலை நிச்சயம் காத்துக் கொண்டிருக்கும்.
 -க. நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com