Enable Javscript for better performance
மருத்துவ உதவி செய்யும் ட்ரோன்கள்!- Dinamani

சுடச்சுட

  
  ARUNABHA_ANSHUL_AND_RISHABH

  சாலை வசதி இல்லாத பகுதிகள் இன்னும் உலகத்தின் பெரும்பகுதிகளில் இருக்கவே செய்கின்றன. சாலைகள் இருந்தாலும் வாகன வசதி பல இடங்களில் இருப்பதில்லை. அப்படிப்பட்ட பகுதிகளில் ஏற்படும் ஏதேனும் ஒரு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள், தேவையான ரத்தம் உடனே கிடைக்க என்ன செய்வது? அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் நினைத்தார் சிங்கப்பூரில் உள்ள NTU (NANYANG TECHNOLOGICAL UNIVERSITY) - இல் ஆராய்ச்சியாளராக இருந்த அன்சூல். 
  அவர் தனது நண்பர்களான ரிஷாப் குப்தா, அருணபா பட்டாச்சார்யா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்படி உருவானது தான் "ரெட்விங் ஏரோ ஸ்பேஸ்' நிறுவனம்.
  பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் ஆளில்லா சிறு விமானங்கள் மூலமாக - ட்ரோன்கள் மூலமாக - தேவைப்படும் தொலைதூர இடங்களுக்கு மருந்து, ரத்தம் ஆகியவற்றை எடுத்துச் சென்று கொடுக்கிறது. 
  இந்தியாவில் அல்ல. பசிபிக் தீவுநாடுகளில் ஒன்றான பாப்புவாநியூகினியாவில்.
  ட்ரோன்கள் இயக்குவதற்கு இந்தியாவில் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளதால், இந்தியாவில் இவர்களுடைய சேவை தற்போது இல்லை. 
  நண்பர்கள் மூவரும் சேர்ந்த சில லட்ச ரூபாய்களை முதலீடாகப் போட்டுத் தொடங்கிய இந்த நிறுவனத்தின் முதல் வேலையாக இவர்கள் உருவாக்கிய ட்ரோன்கள் ஒழுங்காகச் செயல்படுகின்றனவா என்பதைச் சோதித்துப் பார்ப்பதாகத்தான் இருந்தது. 
  ஆஸ்திரேலியாவில் உள்ள சிவில் அவியேஷன் சேஃப்டி அத்தாரிட்டி (CASA) நிறுவனத்திடம் ட்ரோன்களை முதலில் சோதனைக்குட்படுத்தினார்கள். அங்கே நல்ல நிலையில் உள்ளது என்ற சான்றிதழ் பெற்ற பிறகே அடுத்த கட்ட பணியைச் செய்தார்கள். 
  "2018 இல் எங்கள் நிறுவனம் "டெக்ஸ்டார்ஸ் யுஎஸ் ஆக்ஸலரேட்டர் புரோகிராமில்' பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது சுவிட்சர்லாந்திலும், அமெரிக்காவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் WEROBOTICS என்ற நிறுவனம் எங்களைத் தொடர்பு கொண்டது. அதன் மூலமாக நாங்கள் அமெரிக்காவின் அரசு சார்ந்த ஹெல்த் ஏஜென்சியுடன் தொடர்பு கொண்டோம். அந்த நிறுவனம் எங்களுக்கு பாப்புவா நியூகினியாவுக்கு மருந்துகளை ஏற்றிச் சென்று தர அனுமதி அளித்தது. இந்த பாப்புவா நியூகினியா பகுதியில் பெறும் அளவுக்கு போலியோவினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. போலியோ பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க யுனிசெஃப் பணியாளர்கள் படாதபாடு பட்டிருக்கின்றனர். 30 கி.மீ. செல்ல மூன்று நாட்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு சாலை வசதிகள் இல்லாத மோசமான பகுதி அது. எனவே எங்களுடைய சேவை தேவைப்படும் பகுதியாக அது இருக்கிறது'' என்கிறார் அன்சூல்.
  இப்போது ரெட்விங் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 25 -30 ட்ரோன்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் தடவை மருந்துகளை எடுத்துச் சென்று இந்தப் பகுதியில் கொடுக்கின்றன. ஒரு ட்ரோன் ஒரு நாளைக்கு சராசரி 180 முறை மருந்துகளை சப்ளை செய்கிறதாம். 
  "விபத்து நடக்கும் போது என்றில்லை, பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது எதிர்பாராதவிதமாக அதிக ரத்தம் வெளியேறி, ரத்தம் தேவைப்படலாம். மருந்துகள் தேவைப்படலாம். இவற்றுக்கெல்லாம் எங்கள் ட்ரோன்கள் உதவுவதே எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது. இந்தியாவிலும் சில ஆண்டுகளில் ட்ரோன்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தலாம். அப்போது நாங்கள் நம்நாட்டிலும் எங்கள் சேவையைச் செய்வோம்'' என்கிறார் அன்சூல். 
  சிறந்த முறையில் ட்ரோன்களை இயக்கியதற்காக அமெரிக்காவில் 12 விருதுகளைப் பெற்றிருக்கிறது இந்த நிறுவனம். 
  ந.ஜீவா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai