சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 47- தா.நெடுஞ்செழியன்

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் போல செயல்படுவதற்கு அடிப்படையான கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு உதவி செய்தாலும், அவற்றை அடுத்தகட்டத்துக்கு
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 47- தா.நெடுஞ்செழியன்

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் போல செயல்படுவதற்கு அடிப்படையான கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு உதவி செய்தாலும், அவற்றை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தேவையான கல்விசார்ந்த தலைமை தேவையாக இருக்கிறது. 
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமையை எடுத்துக் கொண்டோமேயானால் இப்பல்கலைக்கழகம் ஒவ்வோராண்டும் 6.5 பில்லியன் டாலர் செலவழிக்கக் கூடி ய பல்கலைக்கழகமாக உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு நிறுவனங்களை நடத்துபவர்களிடம் இருந்து 17 சதவீதம் வருமானம் கிடைக்கிறது. நன்கொடையாளர்கள் பங்கு 20 சதவீதமாகவும், இதர முதலீடுகளிலிருந்து கிடைக்கும் பங்கு 5 சதவீதமாகவும் உள்ளது. மாணவர்களிடம் இருந்து 15 சதவீதமும், மருத்துவசேவைகள் வழியாக 20 சதவீதமும் பல்கலைக்கழகத்துக்கு வருமானம் கிடைக்கிறது. 
பரிசுகள் மூலமாக 7 சதவீதமும், தேசிய ஆய்வுக்கூடம் வாயிலாக 8 சதவீதமும், பிறதுறைகள் வாயிலாக 9 சதவீதமும் இப்பல்கலைக்கழகத்துக்கு வருமானம் வருகிறது. 
இந்த வருமானத்தில் மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தரக்கூடிய பேராசிரியர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான இதர சலுகைகளுக்காக 67 சதவீதம் செலவிடப்படுகிறது. இதர நிர்வாகச் செலவினங்களுக்காக 29 சதவீதமும், பல்கலைக்கழகம் செய்யும் நிதியுதவிகளுக்காக 5 சதவீதமும், துறைசார்ந்த செலவினங்களுக்காக 4 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது. 
2018 ஆகஸ்ட் மாத இறுதி வரை ஓராண்டில் மட்டும் 1.1 பில்லியன் டாலர் நன்கொடையாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்திருக்கிறது. 
இந்த நன்கொடையைக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 72 ஆயிரம். இதுபோன்ற நன்கொடைகளின் மூலம் இப்பல்கலைக்கழகம் நிதி திரட்டுகிறது. 
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான வசதிகளைச் செய்ய 26.5 பில்லியன் டாலர் மானியமாக பல்கலைக்கழகம் வழங்குகிறது. இவ்வாறு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தின் நிதிநிர்வாகம் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்படி எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளியிடப்படுகின்றது. 
ஆனால் நமது பல்கலைக்கழகங்கள் இவைபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் ஆதரவு மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஐஐடி - கான்பூர், ஐஐடி - பாம்பே, ஐஐடி - மெட்ராஸ் ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள் அவற்றின் வளர்ச்சிக்காக நிறைய நன்கொடைகள் கொடுத்துள்ளனர். இப்பல்கலைக்கழகத்துக்கு கல்வி பயில்வதற்காக வரக் கூடிய மாணவர்களின் கல்வி, பணம் இல்லாமல் தடைபடக் கூடாது என்பற்காக அவர்களுக்கும் பண உதவி செய்து வருகிறார்கள். 
ஆனால் இவை தவிர, இங்குள்ள ஒரு சில பல்கலைக்கழகங்கள், தாங்கள் ஈட்டும் வருமானத்தில் 80 சதவீதத்துக்கும் மேலாக மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம் மூலமாக எவ்வாறு வசூலிப்பது என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்கள். இதனால் நாளடைவில் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி குறைந்துவிடுகிறது. பல்கலைக்கழகங்களுக்கு இருந்த புகழ், பல்கலைக்கழகங்களின்பால் மக்கள் வைத்திருந்த மரியாதை எல்லாம் குறைந்துவிட்டன. 
அதுமட்டுமல்ல, மாணவர்களின் திறனும் குறைந்துவிட்டது. அன்றைய ஆசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள். இன்று ஆசிரியர்கள் சம்பளத்துக்காக வேலை செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதுவே நமது கல்வியின் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே பல ஆசிரியர்களுக்குத் தெரியாமல் உள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் போன்று நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும் செயல்பட வேண்டும் என்றால் உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பற்றித் தெரிந்த கல்விசார்ந்த புரிதல் உள்ளவர்கள் பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வர வேண்டும். அதுமட்டுமல்ல, கல்விநிலையங்களில் சுயநலம் உள்ள அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். 
எந்தத்துறைக்கு எதிர்காலம் உள்ளது? எந்தத்துறையை எடுத்துப் படித்தால் வேலை கிடைக்கும்? எது பிடித்தமானதுறை? என்ற இந்த மூன்று அடிப்படைகளை முன்வைத்து இன்று பெற்றோர்களும், மாணவர்களும் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தருணத்தில் எண்ணற்ற பெற்றோர், மாணவர்கள் உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்காக கொண்டிருக்கின்ற இந்த மூன்று அடிப்படைகளும் ஒருவிதத்தில் சரியில்லாதவையாகவே உள்ளன. 
முதலாவதாக, எந்தத்துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் என்று யாராலும் கணித்துச் சொல்ல முடியாது. உதாரணமாக நாம் யாருமே 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று அடைந்திருக்கும் மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டோம். அதாவது தொலைபேசி மூலம் இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும் என்றோ, தொலைபேசி மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றோ நாம் நினைத்துப் பார்த்ததில்லை. இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி இனிவரும் 10 ஆண்டுகளில் எப்படியிருக்கும் என்று யாராலும் கணித்துச் சொல்லிவிட முடியாது. மொபைல் டெக்னாலஜி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று நம்மால் இப்போது கற்பனை செய்து பார்க்க முடியாது.
மேலைநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நோயாளியின் உடலில் உருவாகின்ற கிருமிகளை நானோ போட்ஸ் (NANOBOTS) மூலமாக அழிக்கும் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. மனித உடலின் உட்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத இந்த நானோபோட்ûஸ (நானோ ரோபாட்களை) அனுப்பி புற்றுநோய்க் கிருமிகளை அழிக்க முடியும். இதய அடைப்பை சரி செய்ய முடியும். உடல்ரீதியான வேறு பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும். இப்படி மனிதகுலத்துக்குத் தேவையான ஆராய்ச்சிகளை மேலைநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மேற்கொள்கின்றன. இந்த ஆராய்ச்சிக்குத் தேவையான இளம் மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை வெவ்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தயாரிக்கிறார்கள். இதற்கு அனுபவம் மிக்க ஆசிரியர்கள் உதவுகிறார்கள். இதுபோன்று பல்வேறு துறைகளில் நாம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவாறு தொழில்நுட்ப வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்று ஒருதுறையின் வளர்ச்சி பிறதுறையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பிறதுறைகளில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் உதவுகிறது. 
எண்ணற்ற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட புதிய தொழில்நுட்பங்கள் அன்றாடம் உருவாகி வருகின்றன. எனவே நாம் கல்வியில் இந்தத் துறைக்குத்தான் எதிர்கால வாய்ப்பு உள்ளது என்று ஆழமான தேடல் இல்லாமல் நமக்குத் தெரிந்த தகவல்களை வைத்து கருதுவது சரியானதாக இருக்க முடியாது. 
அடுத்து வேலைவாய்ப்பு தரும் துறை என்று கருதி மாணவர்கள் கல்வியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஐடி துறையில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது என்று கருதி மாணவர்கள் நிறையப் பேர் ஐடி துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். மாணவர்கள் தங்களுடைய சொந்த தனித்திறமைகளை விட்டுவிட்டு வேலை என்பதற்காக இன்னொருதுறையைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. உதாரணமாக கற்பனை வளம் அதிகமாக உள்ள ஒரு மாணவர் அது தொடர்பான படிப்புகளை எடுத்துப் படித்திருந்தால், அந்தப் படிப்பை முடித்த பிறகு, அவர் அந்தத்துறையில் ஏறத்தாழ ஆண்டொன்றுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் அதே மாணவர் வேலை வாய்ப்புக்காக தகவல்தொழில்நுட்பத்துறை படிப்பைத் தேர்ந்தெடுத்து, படித்து முடித்து வேலைக்குச் சென்றால் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையை கிடைக்கிறது. அவர் இருபது ஆண்டுகளானாலும் அந்த ரூ.20 லட்சம் சம்பளம் பெறுவது மிகக் கடினமாகும். 
ஒரு மாணவர் எந்தத் துறை கல்வியைத் தேர்ந்தெடுக்க விரும்பினாலும், அவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு படிப்பதற்கு எண்ணற்றதுறைகள் உள்ளன. அந்தத் துறைகள் எவை எவை? அவற்றை எங்கு படிக்கலாம்? அவற்றை நன்றாகச் சொல்லித்தரக் கூடிய கல்விநிறுவனங்கள் எங்கு உள்ளன? என்பதை ஆழமாகத் தெரிந்து கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். பல மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகே உயர்கல்விக்கான வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். இவ்வளவு வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று பிற்காலத்தில் வருந்துகிறார்கள். எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புரிதல், தெளிவு மாணவர்களின் பள்ளிப்படிப்பின்போதே அவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் விருப்பம் சார்ந்த கல்வியை மேலோட்டமாகத் தேடக் கூடாது. பூமியில் நாம் மேலோட்டமாகத் தேடினால் வெறும் மணலே கிடைக்கும். ஆனால் ஆழமாகத் தேடினால் மட்டுமே வைரம் கிடைக்கும். 
எனவே வேலைவாய்ப்பு என்பதை அடிப்படையாக வைத்து தனிப்பட்ட மாணவர்களின் தனித்திறமைகளை இழந்துவிடக் கூடாது. மாணவர்கள் தம் தனித்திறமை மீது நம்பிக்கை வைத்து, இத்திறமையைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவார்களேயானால் வளர்ச்சிப் பாதையில் மாணவர்கள் முன்னேறிச் செல்வார்கள். மாணவர்களின் தனித்திறமையைக் கண்டறிந்து அதை மேலும் வளர்க்க, கல்விநிறுவனங்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உதவ வேண்டும். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com