ஹாண்ட்ஸ் அப் சொல்லும் "வாட்ஸ் ஆப்'!

'நீ உண்மையான இந்தியனாக இருந்தால்', "நீ உண்மையான தமிழனாக இருந்தால்', "உன் நெஞ்சில் ஈரமிருந்தால்', "நீ மனிதனாக இருந்தால்'" என்றெல்லாம் உசுப்பேத்திவிடுகின்ற "மிளகாய்ப் பொடி' ரக வசனங்கள்
ஹாண்ட்ஸ் அப் சொல்லும் "வாட்ஸ் ஆப்'!

'நீ உண்மையான இந்தியனாக இருந்தால்', "நீ உண்மையான தமிழனாக இருந்தால்', "உன் நெஞ்சில் ஈரமிருந்தால்', "நீ மனிதனாக இருந்தால்'" என்றெல்லாம் உசுப்பேத்திவிடுகின்ற "மிளகாய்ப் பொடி' ரக வசனங்கள் தினமும் உங்களை மிரட்டுகிறதா? "உடனே பகிருங்கள், "மிக அவசரம்'" என்று செய்திகள் ஒரு பக்கம் உங்கள் அலைபேசியில் வரிசைகட்டி நிற்கிறதா? "இந்த மந்திரத்தை... இந்த கடவுள் படத்தை, இத்தனை பேருக்கு இத்தனை நாட்களுக்குள் பகிர்ந்தால் நல்லது நடக்கும், இல்லையென்றால் நிறைய சிக்கல்களை சந்திப்பீர்கள்' என்று "கடவுள் காப்பாளர்கள் அணி' உங்களுக்கு பீதியைக் கிளப்புகிறதா? அப்படியென்றால் நீங்கள் "வாட்ஸ்ஆப்' செயலியைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கானவர்களுள் ஒருவர்.
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடியலும் ஒரு புதுவாழ்வை.... புது உயிரைப் பரிசளிக்கிறது. பக்தி பாடல்கள் இசைக்க, சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து நமது அன்றாட கடமைகளைச் செய்ய கிடைத்த விடியல் இன்று பெரும்பான்மையானவர்களுக்கு, குறிப்பாக... இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இல்லாமலே போய்விட்டது.
படுக்கையில் இருந்து எழுவதில் தொடங்கி... ஓய்வுக்கான இரவுநேரத்தின் கடைசி அயர்ச்சி வரும்வரை அலைபேசியை நோண்டி "வாட்ஸ்ஆப்' பார்த்துக் கொண்டே மாணவர்கள் தூங்குகின்றநிலை என்பதே இன்றைய யதார்த்தம். இன்றைய இளைஞர்களுக்கு மூன்று கைகள். அதில் அலைபேசியும் "வாட்ஸ்ஆப்'பும் முதலாவது கையாகிப் போனது.
2009- ஆம் ஆண்டு பிரையன் ஆக்டன், ஜேன் கோம் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்தச் செயலி, ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி மற்றும் ப்ளூபெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்கு தளங்களிலும் இயங்கும்.
இன்று, சராசரியாக உலகெங்கும் 100 கோடிக்கும் மேலான மக்களால் பயன்படுத்தப்படும் இந்தச் செயலியை, இந்தியாவில் 20 கோடி பேரும், தமிழ்நாட்டில் 2 கோடி பேரும் பயன்படுத்துவதாக செய்திகள் கூறுகின்றன. இந்தச் செயலியின் இப்படியொரு அசுர வளர்ச்சியின் காரணமாக "வாட்ஸ்ஆப்' நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து 2014 - ஆம்ஆண்டில் கையகப்படுத்தினர் என்பது கூடுதல் தகவல்.
பழமையை, தொன்மையை, கலாசாரத்தை, பண்பாட்டை, பாரம்பரியத்தை, அறிவியலை, பொது அறிவை எல்லாம் பகிர்கிறோம் என்று "கட்செவி'யில் வலம் வரும் செய்திகளில் பெரும்பான்மையானவற்றின் நம்பகத்தன்மை... உண்மைத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏற்கனவே இருந்த களேபரத்தை இப்பொழுது உக்கிரப்படுத்தியிருக்கிறது "டிக்டாக்' செயலி. இந்த செயலி மூலம் உருவாக்கப்படும் "காணொளி கருத்துகளுக்கான ஊடகம் பெரும்பாலும் கட்செவியே.
"வாட்ஸ்ஆப்'பின் அதீத பயன்பாட்டினால் பொதுவான கணினி பயன்பாட்டின் காரணமாக வரும் கழுத்து தோள்பட்டை இறுக்கம், நாள் பட்ட தலைவலி, சீரான இரத்த ஓட்டம் இல்லாமை போன்ற உடல் உபாதைகள் மற்றும் அது தொடர்புடைய நோய்கள் போக, விரல் வீக்கம், விரல் எலும்பு தேய்மானம் மற்றும் விரல் நடுக்கம், கண்நோய்கள் - கிட்டப் பார்வை பாதிப்புகள், விழித்திரை பாதிப்பு, உலர் கண்கள், மங்கலான பார்வை போன்ற பாதிப்புகள் இன்று மாணவர்களை, இளைஞர்களை வதைக்கத் தொடங்கியிருக்கின்றன. விளைவு, வீரியம் குன்றியவர்களாக மாணவர்கள் மிகக்குறைந்த வயதிலேயே வயோதிகத் தோற்றத்தோடு, பார்வைக் கோளாறைச் சரிசெய்ய கண்ணாடி அணிந்தவர்களாக, எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாத அலைபாயும் மனமுடையவர்களாக சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். 
இவை தவிர, பல்வேறு "கட்செவி குழுக்கள்' (WHATSAPP Groups) உருவாக்கப்பட்டு, அப்படி பல குழுக்களில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கதியோ பரிதாபமாக இருக்கிறது.
அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் போன்ற "அரசு - மக்கள் தொடர்பு' செயல்பாடுகளுக்கு பிரத்யேக "வாட்ஸ்ஆப்' எண்கள் ஒரு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.அதேநேரம், ஸ்மார்ட் போனுடன் "வாட்ஸ் ஆப்' வைத்திருப்பது என்பது நாகரிகக் குறியீடாகக் கருதப்படும் இன்றையச் சூழ்நிலையில், மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும், மாணவர்களின் பெரும்பான்மையானவர்கள் அதிகமாக அரட்டைக்காக மட்டுமே இந்த செயலியைப் பயன்படுத்துகிற தகவல் நமக்கு கவலையளிக்கிறது. மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காகப் பயன்படுத்துகின்றனர் என்பது அதிர்ச்சியாகவும் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களில் அதிகமான நேரம் "வாட்ஸ் ஆப்' பயன்படுத்துபவர்களின் 80%க்கும் மேலானோர் அவர்களது தேர்வுகளில் குறைவாக மதிப்பெண்களே எடுக்கின்றனர் என்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிற செய்தி.
போதைப் பொருட்களின் தாக்கத்தால் இன்று இளைஞர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் "வாட்ஸ் ஆப்' ஒரு புது போதையாக... கூடுதல் போதையாக உருவாகிவிட்டதோ என்கிற ஐயம் நமக்கு தீவிரமாகிறது. குற்றவாளிகளைச் சுற்றிவளைக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிக்க "உம்... கைகளை மேலே தூக்கு' (ஹாண்ட்ஸ் அப்)" என்று கட்டளையிடுகிற காட்சிகளை பல திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். அப்படி சுற்றி வளைக்கப்பட்ட குற்றவாளிகளைப்போல "வாட்ஸ்ஆப்' முன் மாணவர்கள் "ஹாண்ட்ஸ் அப்' நிலையில் சரணாகதி அடைந்து போதைக்கு அடிமையானவர்களைப் போல இருக்காமல், அறிவியல் கண்டுபிடிப்புகளை, தகவல் தொழில் நுட்பத்தை சரியாக... அதே நேரம் அளவாக பயன்படுத்தி தங்களது ஆற்றல் குறையாமல், வீரியம் பெருக்கி வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டிய நேரமிது என்பதை காலம் நமக்கு இட்டிருக்கும் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வோம்.
- கே.பி. மாரிக் குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com