Enable Javscript for better performance
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!- Dinamani

சுடச்சுட

  
  im5

  "ஞானம் என்னும் புத்தகத்தின் முதல் அத்தியாயம் நேர்மை' - தாமஸ் ஜெபர்சன்.
  தீபாவளி, நம்மைக் கடந்து சென்றுவிட்டது. 
  பலருக்கு "அப்பாடா' என்கிற அலுப்பையும், சிலருக்கு - குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு "ஆஹா' என்கிற மகிழ்ச்சியையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறது. வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த பலருக்கு இந்த தீபாவளி எதிர்பாராத "மந்த தீபாவளி'யாக முடிந்திருக்கிறது. இலக்கு நிர்ணயம் செய்து போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் பலருக்கு தீபாவளி, கூச்சலிட்டு கொண்டாடப்பட்ட பள்ளிக்கூட காலத்து "விளையாட்டு வகுப்பு' (கேம்ஸ் பீரியட்), என்பதால் அந்த மனநிலையிலிருந்து இன்னும் பல மாணவர்கள் மீளவில்லை. 
  கடினமாக உழைத்து போட்டித்தேர்வில் வெற்றி பெற்று இன்று நல்ல பணியில் உள்ள சில அரசு ஊழியர்கள் "இந்த தீபாவளி.... ஒன்னும் சரியில்லை' என்று அலுத்துக்கொண்டனர். 
  அரசு ஊழியராக, வாங்குகின்ற மாத ஊதியத்தை மட்டும் வைத்து நிறைவாக வாழுகின்ற நேர்மையாளர்கள் பலர் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் குடும்பங்களின் தீபாவளி எந்தவித நெருக்கடியுமின்றி மகிழ்ச்சியாகவே முடிந்திருக்கிறது. 
  வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாகவும் உருவான காலந்தொட்டுதான் அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் என்கிற நடைமுறைக்கு அவசியம் வந்தது. அதற்கு முன்னர் வெறும் சிபாரிசு, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு, சிபாரிசு என்றெல்லாம் இருந்திருக்கிறது. இந்த நிலை மாறிய போது, படிப்பு, திறமை, தகுதி, சமூக நீதி, இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி பணமும், சிபாரிசும் அவசியமற்ற ஒன்றாகிப் போனது. போட்டித் தேர்வுகளை சரியாக எழுதும், தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசுப்பணி கிடைத்தது. 
  ஊதியம் தாண்டி எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பது அரசு ஊழியரின் அடிப்படையான கடமையாக இருக்கும்போது, "லஞ்சம் தவிர்த்து; நெஞ்சம் நிமிர்த்து' என்று சொல்லக் கூடிய நிலை ஏன் வந்தது? "இது நல்ல பதவி; மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்யலாம், "இது அதிகாரமிக்க பணி; இடைத்தரகர்கள் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாகவே மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கலாம்" என்று நல்ல பதவிகளை நோக்கி தங்களைத் தயார்படுத்திக் கொண்ட போட்டித் தேர்வர்களின் மனநிலையில், ""அந்த சீட்ல நல்ல காசு, "இந்தப் பதவி ரொம்ப பசையானது' என்று பேராசைப் பேச்சு வரத் தொடங்கிய காலம் அவலமான காலகட்டமே. 
  கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பழனி, ஆயக்குடியில் கமலக் கண்ணன் என்பவர் "மக்கள் மன்றம்' என்கிற பெயரில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுத்து நூற்றுக்கணக்கான வெற்றியாளர்களை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆயக்குடி பயிற்சி மையத்தின் வெற்றி, தமிழகமெங்கும் இதுபோன்ற பல இலவசப் பயிற்சி மையங்கள் தொடங்குவதற்கு முன்மாதிரியாக, உந்துசக்தியாக இருந்திருக்கிறது. ஆயக்குடி "மக்கள் மன்றத்தின் பயிற்சியில் இணைய விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பத்தோடு,""தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்கள் பணி செய்ய லஞ்சம் வாங்க மாட்டேன்' என்கிற உறுதிமொழியை கையொப்பமிட்டு கொடுத்த பின்னரே, பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதைப்போலவே மதுரையில் "ரமணா' ஜெயராமன் போன்றவர்களும் அறம் மற்றும் விழுமியங்களை உள்வாங்கிய வெற்றியாளர்களை, கையூட்டை அருவருக்கின்ற அரசு ஊழியர்களை உருவாக்கி இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் நற்பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். 
  ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயம் நிதானமாகத் தமது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த புகழ்பெற்ற பதவியாளர் ஒருவர் அதிர்ச்சியுடன், ""என்ன மிஸ்டர் லிங்கன்... உங்கள் ஷூவுக்கு நீங்கள் பாலிஷ் போடுகிறீர்கள்?'' என்று இளக்காரக்குரல் எழுப்பினாராம். ""ஏன்... நீங்கள் வேறு யார் ஷூவுக்கு பாலிஷ் போடுவீர்கள்?'' என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார் லிங்கன். உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்களே சோம்பேறிகள். அதுவும் மக்களுக்கான சேவைகளைச் செய்யும் அரசுப் பதவிகளில் அமர்ந்துகொண்டு, அப்பணியை செய்ய மாத ஊதியம் போக அப்பாவி மக்களிடம் வேறு "பரிசுகளை' எதிர்பார்ப்பவர்கள் ஒரு வகையில் பிச்சைக்காரர்களே! சமூகத்தின் ஒட்டுண்ணிகளே! 
  "லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது' என்கிற ஊடக, அரசியல் முழக்கங்கள் நம் செவிகளை அறைந்தாலும், யதார்த்தத்தில் கை சுத்தமான, அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் பதர்களுக்கு நடுவே நறுமணம் வீசும் மலர்களாக இன்னும் தங்களது மக்கள் பணியை, கடமையைச் செவ்வனே செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மாசற்ற, களங்கமற்ற நறுமணம் வீசுகின்ற "ஆயிரமாயிரம் பூக்களை மலர'ச் செய்வோம். அப்படி மலர்கின்ற பூக்களின் ஒன்றாக அரசுத் துறையை அலங்கரிப்போம் என்று அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள் அனைவரும் உறுதியேற்போம். 
  கே.பி. மாரிக்குமார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai