தகவல் தொழில்நுட்பத்துறை...கற்க... புதியதை!

பொறியியலில் எந்தத் துறையை தேர்ந்தெடுத்துப் படித்திருந்தாலும் இறுதியில் பெரும்பாலான மாணவர்கள் வேலைக்குச் செல்லும் துறை தகவல் தொழில்நுட்பத் துறையாகவே
தகவல் தொழில்நுட்பத்துறை...கற்க... புதியதை!

பொறியியலில் எந்தத் துறையை தேர்ந்தெடுத்துப் படித்திருந்தாலும் இறுதியில் பெரும்பாலான மாணவர்கள் வேலைக்குச் செல்லும் துறை தகவல் தொழில்நுட்பத் துறையாகவே உள்ளது. தங்கள் துறைகளில் சரியான வேலை கிடைக்காதது, IT துறையில் அளிக்கப்படும் அதிக ஊதியம் ஆகியவையே இதற்கு காரணம். 
பொறியியல் படிப்புகளில் IT/CSE  (Computer Science & Engineering) படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் எப்போதும் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தில் மாநில அளவில் பொறியியல் படிப்புக்குத் தேவையான கட்ஆப் மதிப்பெண்ணில் முதலிடம் பெற்ற மாணவர்களில் பலர் இந்த துறைகளையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனினும், தகவல் தொழில்நுட்பத் துறை என்றாலே பெரும்பாலான மக்களிடையே இருவிதமான எண்ணங்கள் உள்ளன. ஒன்று, IT துறையில் வேறு கலாசாரம் பின்பற்றப்படும்; நம் பிள்ளைகள் அங்கு பணிக்குச் செல்லக் கூடாது.
மற்றொன்று, IT துறையில் வேலைக்குச் சென்றால் போதும்; தன் பிள்ளைகள் கூகுள் நிறுவன பணியாளர்கள் அளவுக்கு லட்சம் லட்சமாக ஊதியம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு; அது நிறைவேறாத பட்சத்தில் ஏமாற்றம். ஆனால், இந்த இரண்டும் அனைவருக்கும் பொருந்துவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த உண்மையை புரிந்து கொள்ள முயலாதவர்கள், கண்ணை மூடிக் கொண்டு IT/CSE வேண்டாம் என்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
IT/CSE ஏன் ?
எத்தகைய சரிவைச் சந்தித்தாலும், மீண்டு எழுந்து உயர்ந்து நிற்கும் துறையாக IT துறை உள்ளது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முக்கியம் என்று அந்தத் துறைக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு நிதி ஒதுக்குகின்றன. 
நாம் தினமும் பயன்படுத்தும் செல்லிடப்பேசியில் புதிது புதிதாக செயலிகளைப் பதிவிறக்கி பயன்படுத்தி வருகிறோம். அதை உருவாக்குபவர்கள் மென்பொறியாளர்கள் என்பதை நினைவில் கொண்டால் இந்த துறையை தேர்ந்தெடுத்துப் படிக்க மறுக்க மாட்டோம்.
வேலைவாய்ப்புகள்
IT/CSE  மாணவர்களை அனைத்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களும் போட்டி போட்டிக் கொண்டு வேலைக்கு எடுக்கின்றன. தங்கள் நிறுவனத்தில் திறமையாகச் செயல்படுபவர்களை, அந்தந்த நிறுவனங்களே வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களில் 60 சதவீதம் பேர் மென்பொறியாளர்களாகவே உள்ளனர் .
GATE தேர்வு மூலம் பொதுத் துறை நிறுவனங்களில் அதிகாரிகள் பணி, ISRO, DRDO, BARC உள்ளிட்டவற்றில் ஆராச்சியாளர்கள் பணி, வங்கிகளில் சிறப்பு அதிகாரி என பல்வேறு துறைகளில் IT/CSE பட்டதாரிகளுக்கு வாய்ப்புள்ளது. 
COMPUTER PROGRAMMER, 
WEB DEVELOPER, SOFTWARE 
ANALYST, SOFTWARE ENGINEER, 
INFORMATION SECURITY ANALYST,  
APP DEVELOPER ஆகிய பணிகள் உள்பட பல பணிகளில் IT/CSE பட்டதாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர். கல்லூரிப் படிப்பிலேயே இந்த பணிகளுக்கு தேவையான அனைத்தும் இருக்காது என்பதால், சில நிறுவனங்கள் பணிக்கு ஆள் எடுத்ததும் பயிற்சியளிக்கின்றன. சில நிறுவனங்கள் கூடுதலாக பயிற்சி பெற்ற பட்டதாரிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. அதனால், நமது துறையின் வேலைவாய்ப்புகளுக்கு தேவையான கூடுதல் சான்றிதழ் படிப்புகள், மென்பொருள் படிப்புகளைத் தெரிந்து வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. 
சவால்கள்
IT துறையில் வேலைக்குச் செல்வது எளிதாக இருந்தாலும், அந்தத் துறையில் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதில் தான் அனைவருக்கும் சவால் காத்திருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் புதிது புதிதாக பல மென்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. நாம் பணியாற்றும் நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருள்கள் குறித்து அனைத்தையும் கற்று அறிந்து வைத்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் நமது திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு அடுத்து புதிதாக வரும் இளம் பொறியாளர்களுக்குச் சமமாக நாம் பணியாற்ற முடியும். ஐப துறையில் வேலையை இழந்தவர்களில் பலர், தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளாத காரணத்தினாலேயே பணியை இழந்துள்ளனர் என்பது நினைவில் இருக்கட்டும். 
எந்தத் துறையாக இருந்தாலும், மாணவர்கள் அந்த படிப்பை விருப்பத்துடன் படித்து, கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே இறுதி வரை பணியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
-க. நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com