தயாராகுங்கள்... தேர்வுக்கு !

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) 2019-க்குண்டான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு (Combined Graduate Level) பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தயாராகுங்கள்... தேர்வுக்கு !

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) 2019-க்குண்டான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு (Combined Graduate Level) பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற தொலைத் தொடர்பு துறை இயக்குநர் (ஓய்வு) என்.எம்.பெருமாள் நம்மிடம் கூறியது: 
"மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பட்டதாரி நிலைத் தேர்வுகளிலேயே அதிகப் பணியிடங்களைக் கொண்டு இருக்கும் தேர்வு, இத்தேர்வாகும். கடந்த சில ஆண்டுகளாகவே 8000 முதல் 10000 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்வின் சிறப்பு அம்சம் என்னவென்றால், மத்திய அரசின் பல்வேறு துறைகளில், பல்வேறு ஊதிய நிலைகளில் உள்ள, பல்வேறு பதவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது என்பதுதான். 
மத்திய அரசின் ஊதிய நிலைகள் 4,5,6,7,8-களில் உள்ள பல பதவிகள், இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி,சுங்க,கலால்,வருமான வரி, அஞ்சல் துறை ஆய்வாளர்கள், இளநிலை புள்ளி விவர ஆய்வாளர்கள், கணக்காயர், தணிக்கை ஆய்வாளர், வரி உதவியாளர், நிலை எழுத்தர் போன்ற பதவிகள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன. ஆரம்ப ஊதியம் ரூ. 40,000 முதல் ரூ. 80,000 வரை இப்பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
பல்வேறு விதமான பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வாதலால் உச்சபட்ச வயது வரம்பும் பல்வேறு பதவிகளுக்கு பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுப் பிரிவினருக்கு பொதுவாக 27 வயது முதல் 30 வயது வரை உச்சபட்ச வயது வரம்பாகும். இளநிலை புள்ளிவிவர அதிகாரி பதவிக்கு மட்டும் வயது வரம்பு 32 வரை ஆகும். பின் தங்கிய வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட , பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. இதைத் தவிர மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்புப் படையினர், மத்திய அரசு ஊழியர்கள், விதவைகள், விவாகரத்தான பெண்கள் போன்றோருக்கும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விரிவான விவரங்களுக்கு ssc.nic.in- இல் உள்ள தேர்வுக் குறிப்பைக் காணலாம். 
பொதுவாக, எல்லாப் பதவிகளுக்கும் அடிப்படைத் தகுதி பட்டப் படிப்பாகும். ஒரு சில பதவிகளுக்கு சிறப்பு தகுதிகளும் குறிக்கப்பட்டுள்ளன. உதவித் தணிக்கை அதிகாரி, உதவிக் கணக்கு அதிகாரி பதவிகளுக்கு சி.ஏ, சி.எம்.ஏ, கம்பெனி செக்ரட்ரி, எம்.காம், எம்.பி.ஏ (நிதி) போன்ற பட்டங்கள் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இளநிலை புள்ளிவிவர அதிகாரி பதவிகளுக்கு பட்டப்படிப்புடன் 10+2 நிலையில் கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் புள்ளியியலை (Statistics) ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும். புள்ளியியல் ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிக்கு பட்டப் படிப்பில் புள்ளியியலை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும். 
இத்தேர்வுக்குண்டான விண்ணப்பக்கட்டணம் ரூ.100 மட்டுமே. பெண்கள், அட்டவணை வகுப்பினர், பழங்குடி மக்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவ வீரர்கள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. 
இத்தேர்வுகளுக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 25 ஆகும். ஆன்லைன் மூலமாக தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 27 ஆகும். இத்தேதிக்குள் வங்கி மூலமாக பணம் கட்டி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். வங்கி மூலமாக பணம் செலுத்த கடைசி நாள் 29.11.2019. வங்கி செயல்படும் நேரத்திற்குள் கட்டவேண்டும் என்பது முக்கியம். 
தேர்வு நான்கு அடுக்குகளாக நடத்தப்படும். கணினி வாயிலாக நடத்தப்படும் முதல் அடுக்கின் (Tier I) மொத்த மதிப்பெண்கள் 200. கேள்வித்தாள் கொள்குறி வகையில் இருக்கும். புத்திக்கூர்மை,பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் ஆகிய நான்கு பகுதிகள் இதில் இருக்கும். ஒவ்வொரு பகுதியும் 25 கேள்விகளையும், 50 மதிப்பெண்களையும் கொண்டுள்ளதாக இருக்கும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் கழிக்கப்படும். 
முதல் அடுக்குத் தேர்வின் கால அளவு ஒரு மணி நேரம் மட்டுமே. முதல் அடுக்கில் தேர்வாணையம் குறிப்பிடும் கட்ஆப் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான் இரண்டாம் அடுக்குத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டாம் அடுக்கில் நான்கு தாள்கள் உள்ளன. இத்தேர்வும் கணினி வாயிலாக கொள்குறிவகையில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தாளின் கால அளவும் இரண்டு மணி நேரம் ஆகும். முதல் தாள் கணிதம். இது 100 கேள்விகளையும் 200 மதிப்பெண்களையும் கொண்டுள்ளது. இரண்டாவது தாள் ஆங்கிலம். இது 200 கேள்விகளையும் 200 மதிப்பெண்களையும் கொண்டுள்ளது.
மூன்றாவது தாள் புள்ளியியல் ஆகும். இளநிலை புள்ளி இயல் அதிகாரிகள்(JSO) மற்றும் புள்ளியியல் ஆய்வாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். இத்தாள் 100 கேள்விகளையும் 200 மதிப்பெண்களையும் கொண்டது. 
நான்காம் தாள் நிதி மற்றும் பொருளாதாரம் பற்றியது. உதவித் தணிக்கை அதிகாரி மற்றும் உதவிக் கணக்கு அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே எழுத வேண்டியது. ஆங்கிலம், கணிதம்,வணிகவியல், புள்ளியியல் பட்டதாரிகளுக்கு இத்தேர்வை எழுதுவது மிகவும் எளிதாக இருக்கும். அதுவும் ஆங்கில இலக்கியப் பட்டதாரிகளுக்கு மிகமிக அனுகூலமானது இத்தேர்வு. 
பெரும்பாலான பதவிகளுக்கு வணிகவியல் புள்ளியியல் பாடங்களில் புலமை தேவை இல்லை. இத்தகைய பதவிகளுக்கு எல்லா நிலைகளுக்கும் சேர்த்து மொத்த மதிப்பெண்கள்-700 (அடுக்கு 1-200; அடுக்கு 2- 400 (தாள் - 1 மற்றும் 2) அடுக்கு 3 - 100 (கட்டுரை வடிவம்) ஆகும். இதில் 350 மதிப்பெண்கள் ஆங்கிலத்துக்கு மட்டுமே உள்ளது. இதற்கு அடுத்த படியாக கணிதத்திற்கு 250 மதிப்பெண்கள் உள்ளன. 
இத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளில் பல வட்டாட்சியர் பதவிக்கு இணையான அல்லது அதிகமான ஊதிய நிலைகள் கொண்டதாக உள்ளன. பொது அறிவைப் பொருத்த வரையில் 11 மற்றும் 12- ஆம் வகுப்புக்களுக்குரிய வரலாறு,அரசியல்,பொருளாதாரம் நூல்களைப் படிக்க வேண்டும்.மேலும், 9 மற்றும் 10- ஆம் வகுப்புக்குரிய அறிவியல், புவியியலை நன்கு படிக்க வேண்டும். கணிதத்தைப் பொருத்தவரையில் 8,9 மற்றும் 10-வது வகுப்பு பாடப்புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை தவிர, மற்ற தேர்வு தொடர்பான மற்ற வெளியீடுகளையும், அன்றாடம் தலையங்கங்கள் உள்ளிட்ட நாளிதழ் செய்திகளையும் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
நான் எழுதியுள்ள இந்திய சுதந்திர போராட்டம், பொது அறிவு நூல், General Knowledge Digest, G.K 1500, Economics and Banking, கணினி 1000, இந்திய அரசியலமைப்பு சட்டமும், அரசியலும் ஆகிய நூல்களை மின் அஞ்சல் மூலம் இலவசமாக அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன், sambam17358@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்''என்றார். 
வி.குமாரமுருகன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com