அறிவியல் முறை வகுத்த பெரியார்... அரிஸ்டாட்டில்!

அரிஸ்டாட்டில் இறந்த பிறகு அவருடைய நூல்கள் எல்லாம் அவரது மாணவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்தன. பிறகு அவை வழிவழியாக வந்து, கி.மு. 80 - இல் வெளியிடப்பட்டன.
அறிவியல் முறை வகுத்த பெரியார்... அரிஸ்டாட்டில்!

(சென்ற இதழ் தொடர்ச்சி)

அரிஸ்டாட்டில் இறந்த பிறகு அவருடைய நூல்கள் எல்லாம் அவரது மாணவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்தன. பிறகு அவை வழிவழியாக வந்து, கி.மு. 80 - இல் வெளியிடப்பட்டன. பிற்காலத்தில் வந்த எழுத்தாளர்கள் அரிஸ்டாட்டிலின் நூல்களைப் படித்து அதில் பல இடைச் செருகல்களைச் சேர்த்தனர் என்றும், சிலர் நூல்களையே மாற்றி எழுதினர் என்றும் சொல்கிறார்கள். மேலும் இன்றைய பல பேராசிரியர்களைப் போல அரிஸ்டாட்டில் சொன்னபடி அவருடைய மாணவர்களே எழுதியிருக்கலாம். இதனால் சில நூல்கள் அறிஸ்டாட்டில் எழுதியவை தாமா என்ற ஐயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.


அறிவியலுக்காக அவர் ஆற்றிய பணி மிகவும் போற்றத்தக்கது. லெஸ்பன் கடற்கரையில் நண்டு வகைகளைப் பற்றியும், மற்ற கடல் உயிர்களைப் பற்றியும் அவர் செய்த ஆராய்ச்சியால் உயிர்நூல் (BIOLOGY) துறைக்கே ஒரு பெருந்தொண்டு செய்தவரானார். யானைகளுக்குக் கால்களில் இணைப்புகள் (JOINTS) இல்லை என்பது போன்ற பழங்கதைகளைத் தகர்த்தெறிந்தார். உயிர்ப் பொருள்களை அறிவியல் முறைப்படிப் பிரித்து வைத்தார். எடுத்துக்காட்டாக, சுறா மீன், வெüவால் மீன் போன்றவை உண்மையான மீன்களிலிருந்து வேறுபட்டவை என்று கண்டு கூறினார். உடலின் ஓர் உறுப்புக்கும் அதன் வேலைக்கும் உள்ள தொடர்பை நன்கு ஆராய்ந்தறிந்தார்.

தர்க்கவியலில் (கஞஎஐஇ) முக்கூற்று (LOGIC) பற்றியும், வேறு பலவற்றைப் பற்றியும் அவர் பல விதிகளை வகுத்தார். உளவியலிலும் (SYLLOGISM) அவர் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தார். எடுத்துக்காட்டாக, கனவைப் பற்றி அவர் ஆராய்ந்தவை மிகச் சிறப்புடையன. சமூகத்தைப் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துகளை அவர் எழுதிய அரசியல் (PSYCHOLOGY) என்றநூலில் காணலாம். அவர் வாழ்ந்த அச்சிறிய கிரேக்க நாட்டை அடிப்படையாக வைத்தே அந்த நூலை எழுதினார். "ஐரோப்பியர்கள் வீரமுள்ளவர்கள். ஆனால் அறிவில்லாதவர்கள். ஆசியக்காரர்கள் திறமையுள்ளவர்கள். ஆனால் பயந்தாங்கொள்ளிகள். எனவே வீரமும் நுண்ணறிவுமுள்ள கிரேக்கர்களே அவர்களை அடக்கி அடிமைப்படுத்தி வாழும் உரிமை பெற்றவர்கள்' என்ற எண்ணமுள்ளவராக இருந்தார்.

பொதுவாக அறிவியலில் (PHYSICAL SCIENCE) அவர் செய்த உண்மையான ஆராய்ச்சி, இந்த உலகம் உருண்டை வடிவமானது என்பதே. திங்கள் மறைவு (LUNAR ECLIPSE) ஏற்படும்போது உண்டாகும் நிழலிலிருந்து அவர் இதைக் கண்டு கூறினார். இதைத் தவிர வானியல் (ASTRONOMY), இயற்பியல்(PHYSICS), வானிலை இயல்(METEREOLOGY) இவற்றைப் பற்றி அவர் செய்த ஆராய்ச்சிகள் உண்மைக்குப் புறம்பானவையாக இருக்கின்றன. நமது நில உலகம் இந்த அண்டத்தின் நடுவில் இருக்கிறது என்றும், இதைத் தவிர வேறு உலகம் இருக்க முடியாது என்றும், வானத்தில் தெரியும் மீன்களும் கோள்களும் மாறுவதில்லை என்றும், நிலத்தின் உள்ளே இருந்து வரும் காற்றினால்தான் நில நடுக்கம் (EARTH QUAKE) ஏற்படுகிறது என்றும், அணு என்பது ஒன்றும் இல்லை என்றும், உலகில் ஐந்து தனிமங்களே (ELEMENTS) இருக்கின்றன என்றும் அவர் வாதிட்டார்.

ஆனால் அவர் கூறிய வாதங்களை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு வேண்டிய கருவிகள் அக்காலத்தில் இல்லை. மணிப்பொறி இல்லை. தொலை நோக்கி இல்லை. இதுபோல் எந்த அறிவியல் கருவிகளும் அன்று இல்லை. அதனால்தான் அவருக்குத் தெரிந்தவரையில் சரியென்று பட்டதை, அவரது சிந்தனைக்கு எட்டியவரையில் சரியென்று பட்டதை நெஞ்சுரத்தோடு அவர் சரி என்று சொன்னார்; எழுதி வைத்துச் சென்றார். மேலும் புதுக் கருவிகளைக் கண்டுபிடிப்பதும், அவற்றைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதும் அடிமைகளின் வேலை என்று அந்தக் காலத்தில் கருதப்பட்டன.

என்றாலும் இன்று நாம் எண்ணுகின்ற எண்ணங்களை எல்லாம் சேர்த்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் எண்ணி எழுதி வைத்துச் சென்றுவிட்டார். பொருள்களைப் பற்றி அவர் எண்ணிய கருத்துகள் தவறானவையாக இருந்தாலும் அவர் பின்பற்றிய முறை - அறிவியல்முறை - மிகவும் போற்றத்தக்கதாகும்.

கி.மு.323 - இல் அலெக்சாந்தர் இறந்ததும் மாசிடோனியருக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாட்டில் குழப்பத்தை உண்டாக்கினார். மாசிடோனியருடன் அரிஸ்டாட்டில் தொடர்பு வைத்திருந்ததால், சாக்ரடிசைப் போல அவரைச் சமயத்துரோகி என்று குற்றம்சாட்டினர். ஆனால் குற்றம் சாட்டிக் கூண்டில் ஏற்றுவதற்கு முன்னால் அரிஸ்டாட்டில் ஏதென்சைவிட்டு இயோபாயாவுக்குச் சென்று விட்டார். அங்கேயே இறுதிநாட்களைக் கழித்த அரிஸ்டாட்டில் தனது 63 - வது வயதில் உயிர்நீத்தார்.

அவருக்குப் பிறகு அவரது நீண்டகால நண்பரும், மாணவரும், பயிர்நூல் வல்லுநருமான தியோஃபிரஸ்டஸ் (THEOPHRASTOS) என்பவர் அரிஸ்டாட்டிலின் கல்விக் கழகத்தை ஏற்று நடத்தினார்.

சிலைகளிலிருந்தும் படங்களிலிருந்தும் அவருடைய உருவத்தைக் காண்கிறோம். மெல்லிய உடலும், எதையும் கூர்ந்து உற்று நோக்கும் கண்களும், கூரிய மூக்கும், மெல்லிய உதடுகளும் உள்ளவராகவே அவர் நமக்குக் காட்சி தருகிறார். இப்படி இருந்தாலும் அவரிடம் வேடிக்கையாகப் பேசும் திறனும் இருந்தது. அதைப் பற்றிப் பல கதைகள் உண்டு.

ஒருமுறை ஒரு வாயாடி அவரிடம் வந்து "வளவள' என்று பேசிக் கொண்டே இருந்தானாம். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியில் ""என்னுடைய பேச்சு உங்களுக்கு மிகவும் தலைவலியையும மயக்கத்தையும் கொடுத்துவிட்டதா?'' என்று கேட்டானாம். உடனே ""இல்லை'' என்று பதில் சொன்னாராம் அரிஸ்டாட்டில். "" ஏன்'' என்று வியப்போடு கேட்டான் அந்த வாயாடி. அதற்கு அவர், ""நான் உன் பேச்சைக் கேட்கவே இல்லையே'' என்று சொன்னாராம்.

அரிஸ்டாட்டிலின் வாழ்க்கை அவருடைய காலத்தில் சிறப்புடையதாக அமையவில்லை. தொடக்க காலத்தில் பிளேட்டோவினால் அவரது புகழ் மறைக்கப்பட்டது. இடைக்காலத்தில் சில சமயவாதிகள் அவரைச் சமயத்திற்கு எதிரானவர் என்று குற்றஞ்சாட்டினர். ஆனால் தாமஸ் அக்கினாஸ் (THOMAS ACQUINAS) என்பவர் தம்முடைய சமய நூலில் அரிஸ்டாட்டிலையும் ஒருவராகச் சேர்த்து அவரைக் கிறிஸ்துவுக்கு முந்திய முனிவராக ஏற்றுக் கொண்டார்.

அரிஸ்டாட்டிலின் அறிவு நுட்பத்தை அறிவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அறிவியல் ஆராய்ச்சிக்கு இன்று இருக்கக் கூடிய வாய்ப்புகளும் வசதிகளும் அன்று இல்லை. இன்றுள்ள ஆராய்ச்சியாளர்கள் செய்கின்ற ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வசதியும் அன்று அரிஸ்டாட்டிலுக்குக் கிடையாது. ஆராய்ச்சி செய்வது அடிமைத் தொழில் என்று கருதப்பட்ட அந்த காலத்தில் சிந்தித்தார், அவர். அறிவியல் கருவிகள் போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் ஆராய்ச்சி செய்தார் அவர். ஆமாம், கலிலியோ, நியூட்டன், டார்வின் போன்ற அறிவுச்சுடர்களோடு எண்ண வேண்டிய அறிவின் சிகரம் அவர்; அறிவொளி அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com