மொழிபெயர்ப்பாளர்...  உரை பெயர்ப்பாளர்!

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த மாதம் மாமல்லபுரத்தில்  சந்தித்துப் பேசினர். 
மொழிபெயர்ப்பாளர்...  உரை பெயர்ப்பாளர்!

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த மாதம் மாமல்லபுரத்தில்  சந்தித்துப் பேசினர். 

பிரதமர் அருகே வெவ்வேறு நேரங்களில் இருந்த 2 இந்திய அதிகாரிகளும் அதிக கவனத்தைப் பெற்றனர். அதிலும் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.   அவர் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளியுறவு செயலர்கள் அலுவலக துணைச் செயலர் ஆர். மதுசுதன். மற்றொருவர், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் அரசியல் பிரிவு முதல்நிலைச் செயலராக உள்ள மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த பிரியங்கா சொஹோனி.  

தமிழகத்தைச் சேர்ந்த மதுசுதன் சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் கடந்த 2002-2006 இல் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியலில் பி.இ. பட்டம் பெற்றவர். பிறகு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவுச் சேவையை தேர்ந்தெடுத்தார். முதன்முதலாக 2009, செப்டம்பர் முதல் ஜூலை 2011 வரை சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 3 ஆவது மற்றும் 2 ஆவது செயலராகப் பணியாற்றினார். 

அவருக்கு ஏற்கெனவே, மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்திருந்தாலும், பிறகு தொழில்ரீதியாக ஹிந்தி கற்றுக்கொண்டார். இந்நிலையில், சீனாவில் பணியில் அமர்த்தப்பட்ட அவர், தொழில்சார்ந்து சீன மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மான்டேரியில் உள்ள Middlebury Institute of International Studies (MIIS) கல்வி நிறுவனத்தில் கடந்த 2011-2013 -இல் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு (சீன மொழி) பாடத்தில் (M.A.Translation and Interpretation) முதுநிலைப் பட்டம் பெற்றார். 

மொழியைக் கற்றுக் கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வமும், தொடர் கல்வியுமே  உரை பெயர்ப்பாளராகும்  திறமையை அவருக்கு ஏற்படுத்தியது. அவர் பல நேரங்களில் இந்திய அரசியல் தலைவர்கள்- சர்வதேச தலைவர்களின் கலந்துரையாடலின்போது உரைபெயர்ப்பாளராகப் பணியாற்ற  அது வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.மான்டேரியில் அமைந்துள்ள    MIIS கல்வி நிறுவனம்  ஒரு   தனியார் பட்டதாரி பள்ளியாகும். 

இக்கல்வி நிறுவன மாணவர்கள் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் மொழி மற்றும் கலாசார தொடர்பு முக்கிய பங்கு வகிப்பதாகவும், இந்த நிறுவன மாணவர்கள் 40-க்கும் மேற்பட்ட நாடுகளையும், 30 சொந்த மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இந்த நிறுவனம் கூறுகிறது.  இங்கு பயிலும் மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனம் அரபு, சீனம், பிரெஞ்சு, ஜெர்மன், கொரியா, ஜப்பானியம், போர்த்துகீசியம், ரஷியா மற்றும் ஸ்பானிஷ் ஆகிய 9 மொழிகளை கற்றுத் தருகிறது. இங்கு ஒவ்வொரு பட்டப் படிப்பு திட்டத்திலும் மொழி மற்றும் கலாசார தொடர்புத் திறன் வலியுறுத்தப்படுகிறது. 

இங்கு இன்டர்ன்ஷிப் அல்லது தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம், வசந்தகால, குளிர்கால, கோடைகால இடைவெளிகளில் ஒரு முழு செமஸ்டரைப் பயில மாணவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

இங்கு பயிலும் பட்டதாரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பட்டம் பெற்ற 6 மாதங்களுக்குள் சர்வதேச அளவில் 25 வெவ்வேறு நாடுகளில் பணிபுரிவதாகவும், முன்னாள் மாணவர்களில் குறைந்தது 64 சதவீதம் பேர் அவர்கள்  கற்ற மொழியை தொழில்முறை அமைப்புகளில் பயன்படுத்துவதாகவும் இந்த நிறுவனம் கூறுகிறது. அதேபோல, இங்கு பயிலும் சர்வதேச மாணவர்களுக்கு தகுதி உதவித்தொகை மற்றும் கோடைகால மொழி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 2017 - ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த 4.95 லட்சம் நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இராக், ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பான்மையினர் குருகிராம் போன்ற இடங்களில் மொழிபெயர்ப்பாளர்களை வேலைக்கு அமர்த்தினர். மொழிபெயர்ப்பாளர்களால் அறியப்பட்ட மொழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ரூ. 20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை ஊதியம் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும் மிடில்பரி கல்வி நிறுவனம் குறித்த தகவல்களை http://www.middlebury.edu/institute என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com