ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அறிவியல் விருது!

இந்திய இளைஞர்களிடையே அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கலாசாரத்தைப் பரப்பும் நோக்கில், கடந்த 2009- இல் தொடங்கப்பட்ட "இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை' இளம் ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அறிவியல் விருது!

இந்திய இளைஞர்களிடையே அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கலாசாரத்தைப் பரப்பும் நோக்கில், கடந்த 2009- இல் தொடங்கப்பட்ட "இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை' இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 
பொறியியல் மற்றும் கணினி அறிவியல், மனிதநேயம், வாழ்க்கை அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 6 பிரிவுகளில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சிறந்த சாதனைகளைக் கெளரவிப்பதற்காக இந்த அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் தங்கப்பதக்கம், சான்றிதழ், தலா 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 70 லட்சம்) பரிசாக வழங்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 7 -ஆம் தேதி நிகழாண்டுக்கான பரிசு பெற்ற 6 சாதனையாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பொறியியல் மற்றும் கணினி அறிவியலுக்கான பரிசு: தரவுத்தளங்கள், தரவுச் செயலாக்கம், இயந்திர கற்றல், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் முக்கியமான பயன்பாடுகளுக்கான ஆராய்ச்சிக்காக மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவின் இருக்கைப் பேராசிரியர் சுனிதா சரவாகி இந்தப் பரிசைப் பெற்றுள்ளார். ஆராய்ச்சி நுட்பங்கள், கட்டமைக்கப்படாத தரவுகளுக்கான தகவல் பிரித்தெடுத்தல் நுட்பங்களை மேம்படுத்துவதில் அவரது முன்னோடிப் பணியை அங்கீகரித்து இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
மனிதநேயத்துக்கான பரிசு: நவீன காலத்திற்கு முந்தைய தென்னிந்தியா குறித்த பணிகளுக்காக மண்டி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி உதவிப் பேராசிரியர் மனு வி.தேவதேவன் இந்தப் பரிசைப் பெற்றுள்ளார். தக்காண பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் கலாசார, மத மற்றும் சமூக வரலாறு குறித்த வழக்கமான தகவல்களை அவர் விமர்சனரீதியாக மறுபரிசீலனை செய்ததற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை அறிவியலுக்கான பரிசு: உயிரியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் ஆகியவை அடங்கிய வாழ்க்கை அறிவியலுக்கான பரிசை ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் தலைமை விஞ்ஞானி மஞ்சுளா ரெட்டி பெற்றுள்ளார். இவரது குழுவினர் பாக்டீரியா உயிரியலைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படையான செல் சுவர் வளர்ச்சியின் முக்கியமான படிகளை வெளிப்படுத்தியதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. எதிர்ப்பு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கணித அறிவியலுக்கான பரிசு: சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறைப் பேராசிரியர் சித்தார்த்த மிஸ்ரா, அப்ளைடு கணிதத்தில் நிஜ உலகின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான எண்ணியல் கருவிகளை வடிவமைத்ததற்காக இந்தப் பரிசை பெற்றுள்ளார். இவரது பணிகள் காலநிலை மாதிரிகள், வானியற்பியல், ஏரோடைனமிக்ஸ் மற்றும் பிளாஸ்மா இயற்பியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராக் ஸ்லைடுகளால் உருவாக்கப்பட்ட சுனாமிகள் மற்றும் சூரிய வளிமண்டலத்தில் அலைகள் போன்ற சிக்கல்களுக்கான குறியீடுகளை அவர் தயாரித்துள்ளார். 
இயற்பியல் அறிவியலுக்கான பரிசு: சிறிய மூலக்கூறுகள் மற்றும் உயிரியல் மருத்துவப் பயன்பாடுகளுக்கான நானோ பொருள்களின் வேதியியல் தொகுப்பில் தனது ஆரம்பப் பணிக்காக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கனிம மற்றும் இயற்பியல் வேதியியல் துறை பேராசிரியர் ஜி. முகேஷ் இந்தப் பரிசை பெறுகிறார். தைராய்டு ஹார்மோன் செயல்படுதல் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் சுவடு கூறுகள், செலினியம் மற்றும் அயோடின் ஆகியவற்றின் பங்கைப் புரிந்துகொள்ள அவரது பணி பங்களித்துள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சி பெரிய மருத்துவ முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. 
சமூக அறிவியலுக்கான பரிசு: நெறிமுறைகள், சுயநலம் மற்றும் ஆக்கபூர்வமான செயல்முறை குறித்த கற்பனையான பணிகளுக்காக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் க்ரீகர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மானுடவியல் துறை பேராசிரியர் ஆன்ந்த் பாண்டியன் இந்தப் பரிசைப் பெறுகிறார். இவரது ஆராய்ச்சி சினிமா, பொது கலாசாரம், சூழலியல், இயற்கை மற்றும் மானுடவியலின் கோட்பாடு மற்றும் முறைகள் போன்ற பல கருப்பொருள்களை உள்ளடக்கியது. 

நடுவர் குழுவுக்கு வந்த 196 பரிந்துரைகளில் இருந்து பரிசாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியல் அறிவியல் பிரிவில் பரிசு பெற்ற பேராசிரியர் ஜி. முகேஷ் கூறுகையில், "ஒரு சிறிய கிராமத்தில் முறையாக கல்வி கற்காத பெற்றோர்களைக் கொண்ட விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு, இது வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்று'' என்கிறார்.
பெங்களூருவில் வரும் ஜனவரி 7 -ஆம் தேதி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கும் விழாவில் விருது வழங்கப்படவுள்ளது.
பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள் 3 ஒட்டுமொத்த ஆண்டுகள் பரிசீலனையில் இருக்கும். பரிசு பெறாதவர்கள் தங்கள் பரிந்துரைகளை இணையம் மூலம் ஓராண்டில் இருந்து அடுத்த ஆண்டுக்கு புதுப்பிக்கலாம்.
பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவோர் இந்தியாவில் பணியாற்றிய இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அல்லது தேர்வுசெய்யப்படும் நேரத்தில் குறைந்தது 3 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அல்லாதவர்களாகவும், 50 அல்லது அதற்கும் குறைந்த வயதுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், அறக்கட்டளையின் தலைவருமான எஸ்.டி. ஷிபுலால் கூறுகையில், "இன்போசிஸ் பரிசு பெற்றவர்கள் சுகாதாரம், மரபியல், காலநிலை அறிவியல், வானியல் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் பணி மனித இனத்திற்கான உடனடி தாக்கங்களைக் கொண்டுள்ளது. இது சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும்'' என்கிறார். 

இன்போசிஸ் நிறுவனரும், அறக்கட்டளையின் அறங்காவலருமான என்.ஆர். நாராயணமூர்த்தி கூறுகையில், "இளைஞர்கள் அடிப்படை ஆராய்ச்சியை ஆர்வத்துடன் தொடர உதவ வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பங்களிப்பாளர்களாக மாறுவதற்கு இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் கண்டுபிடிப்பு நடக்கும் இடமாக இந்தியா இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்'' என்றார். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com