பெருக்கத்து வேண்டும் பணிவு!

இன்றைக்கு எல்லா இடங்களிலும், குறிப்பாக பணியாற்றும் இடங்களில் போட்டி, பொறாமைதான் மிதமிஞ்சிக் காணப்படுகிறது. அடுத்தவரை மிதித்துக் கீழே தள்ளிவிட்டு தான் மேல் நிலைக்கு வந்துவிட வேண்டும்
பெருக்கத்து வேண்டும் பணிவு!

இன்றைக்கு எல்லா இடங்களிலும், குறிப்பாக பணியாற்றும் இடங்களில் போட்டி, பொறாமைதான் மிதமிஞ்சிக் காணப்படுகிறது. அடுத்தவரை மிதித்துக் கீழே தள்ளிவிட்டு தான் மேல் நிலைக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, அதற்கான தகுதிகள் தன்னிடம் உள்ளதா என்று சற்றும் உணர்வதில்லை. சக ஊழியர்களில் யாருக்காவது பதவி உயர்வு கிடைத்தாலோ அல்லது பிறரால் அவர் அதிகம் மதிக்கப்பட்டாலோ, இல்லை அவர் பிறரை விட அதிகம் படித்தவராக இருந்தாலோ கண்டிப்பாக அவர் பிறரால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். பிறர் உயர்வில் மகிழ்ச்சி அடையாத காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும்தான் இதற்குக் காரணம். தன்னைத் தானே வெற்றி கொள்ள முடியாதவர்களே இந்தக் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகின்றனர். 
இன்றைக்கு சக ஊழியர்களுடன் அன்புடனும், நட்புடனும், வெளிப்படைத் தன்மையுடனும் அணுக -பழக பலரும் விரும்புவதில்லை. தனக்குக் கீழ் பணிபுரிவோரைப் பெரும்பாலோர் அன்புடனும், நட்புடனும் நடத்துவதற்குப் பதிலாக, அவர்களைவிடத் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளவே நினைக்கிறார்கள். மேலும், ஏதாவது ஒரு வகையில் அவர்கள் மனதைக் காயப்படுத்தி, அதன்மூலம் போட்டியையோ, சண்டையையோ உருவாக்கி அவர்களை வெற்றிகொள்ள நினைக்கிறார்கள். கூடுமானவரை குடும்பத்திலும் சரி, பணியிடங்களிலும் சரி யாருடைய குறைகளையும் பெரிதுபடுத்தாமல், நிறைகளையே கண்டு, அவர்களைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டப் பழகினால் எங்கும் எப்போதும் மகிழ்ச்சி விளையும். 
"ஒருவரின் உண்மையான குணம் தெரிய வேண்டுமானால் அவரிடம் ஓர் உயர் பதவியைக் கொடுத்துப் பார் தெரியும்' என்று கூறுவது நகரத்துச் சொலவடை. உயர் பதவி தனக்குக் கிடைத்ததும், பலரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு பிறரை அடிமைகள் போல நடத்த முற்படுகின்றனர். இதன் விளைவு... பணியிடத்தில் பலரது வெறுப்புக்கு ஆளாவதும், பட்டப் பெயர் சூட்டிக் கொள்வதுமாகும். அரசியலில், அதிகார போதைக்கு அடிமையாகி பிறரது உரிமைகளைப் பறித்து அடக்குமுறையால் ஆள நினைத்தவர்கள், அனைவரும் ஆட்சியை இழந்த வரலாறு உலகம் அறியும். 
இன்றைக்குப் பணியிடங்களில் மிகப்பெரிய சவாலாக இருப்பது தனக்குக் கீழே பணிபுரிபவர்களை வேலை வாங்குவதுதான்; அடுத்து, தன் மேலதிகாரிகளுக்குக் கீழே வேலை செய்வது. கிட்டத்தட்ட இரண்டுமே ஒன்று போலத்தான். முதலாவது, தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது; இரண்டாவது தன் மேலதிகாரிகளுக்குப் பணிந்து நடப்பது. இவ்விரண்டையும் மேற்கொண்டால் பணியிடங்களில் "ஈகோ' பிரச்னைக்கே இடமில்லை. 
உயர் பதவிக்கு வந்துவிட்ட ஒருவர், பிறரை வேலை வாங்குவது குறித்த பணி மேலாண்மை உளவியலை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது மிக முக்கியமான ஒன்றாகும். வேலை வாங்குவதில் இரண்டு முறை உண்டு. ஒன்று தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது, மற்றொன்று கடுமையாகவும், கண்டிப்புடனும் நடந்துகொண்டு வேலை வாங்குவது. முதலாவதை நாம் செய்யும்போது, வேலையும் குறித்த நேரத்தில் நடைபெறும்; பலரின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெறலாம். இரண்டாவது முறையைக் கையாண்டால் வேலையும் சரி வர நடக்காது, பணியாளர்களின் காழ்ப்புணர்ச்சிக்கும் ஆளாக வேண்டும். 
சக ஊழியரைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் அதிகாரி, தன் நிறுவனத்தை வெற்றியை நோக்கி, லாபத்தை நோக்கி நகர்த்திச் செல்கிறார். அதற்கு மாறாக தன் பதவி பலத்தைப் பிரயோகித்து, கடுமையாகவும், கண்டிப்புடனும் நடப்பவர், பலருடைய காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகி தோல்வியைத் தழுவுகிறார். பணிந்து நடப்பதால் நமக்கு நன்மையே தவிர, தீமை ஒருபோதும் வராது. இதைத் திருக்குறள் மிகத் தெளிவாகக் கூறுகிறது. 
"வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிந்தனையும், அன்பும் கொண்டவராக இருந்திருக்கிறார்கள். அந்த குணங்கள்தாம், அவர் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளுக்குக் காரணமாகும். சுயநலமற்ற தன்மையின் அளவுதான் வெற்றியின் அளவை எல்லா இடங்களிலும் நிர்ணயம் செய்கிறது. முதுகுக்குப் பின்னால் நாம் செய்யக் கூடிய ஒரே செயல் தட்டிக் கொடுப்பது மட்டும்தான்' என்று வெற்றி பெறுவதற்கான எளிய வழியைக் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். 
-இடைமருதூர் கி.மஞ்சுளா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com