தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம்!

முன்பு கிராமங்களில் விளையாடப்பட்ட கிராமிய விளையாட்டுகளே, நவீனப்படுத்தப்பட்டு தடகள விளையாட்டாக  தற்போது விளையாடப்படுகிறது எனக் கூறலாம்.
தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம்!

முன்பு கிராமங்களில் விளையாடப்பட்ட கிராமிய விளையாட்டுகளே, நவீனப்படுத்தப்பட்டு தடகள விளையாட்டாக  தற்போது விளையாடப்படுகிறது எனக் கூறலாம். கிராமங்களில் பச்சைக் குதிரை தாண்டுவது, தற்போது உயரம் தாண்டுதலாகவும், சாக்கு ஓட்டம் தடை தாண்டுதலாகவும் நவீனப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது.  

தடகளத்தில் முக்கியமானது ஓட்டப் பந்தயமாகும். ஓட்டப் பந்தயத்திற்கு பயிற்சி பெற்றால், கால் வலிமை பெறுவதோடு, இலக்கை நோக்கி மனம் ஓடும். வெற்றியை வசப்படுத்த முனைப்பு உண்டாகும். பள்ளிப்பருவதில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பவர்கள் கல்லூரியுடன் தங்களது விளையாட்டை முடித்துக் கொண்டு விடுகிறார்கள். 

ஓட்டப்பந்தயமே எனது உயிர் மூச்சு என தொடந்து போட்டிகளில் பங்கேற்றால், வெற்றி பெறலாம். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவர்கள் பிகாரில் நடைபெற்ற தேசிய தடகளப்போட்டியில்  டி.அன்ஸ்டீன் ரீகன் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், வி.ஜி.யோகேஷ்குமார் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், ஆர்.விஸ்வராஜ் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கமும், வி.பிரதீப் தட்டு எறிதலில்  தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர்.  

இவர்கள்  "இளையோர் மற்றும்  விளையாட்டு வளர்ச்சி இந்திய சங்கம்' சார்பில் பிகார் மாநிலத்தில் நடைபற்ற தேசிய தடகளப்போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். இவர்களது பயிற்சியாளர் ஏ.ஆர்.நவீன்குமார் இந்த வெற்றி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: 

""நான் பழனியில் தடகளப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் 26 பேர் 5 வயது முதல் கல்லூரி மாணவர்கள் வரை பயிற்சி பெற்று வருகிறார்கள். தினசரி காலை 5.45 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுவர்களுக்கு தகுதிப்  போட்டி நடத்தி, அதில் சிறப்பாக விளையாடுபவர்களைத் தேர்வு செய்து , அவர்கள் சிறப்பாக விளையாடிய விளையாட்டை அறிந்து அதற்கு பயிற்சி அளிப்பேன். இதன் மூலம் வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற இவர்கள் முதலில் பள்ளிகளுக்கிடையிலான குறு வட்டப்போட்டியிலும், பின்னர் மாவட்ட அளவிலான போட்டியிலும், தொடர்ந்து மாநில அளவிலான போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஜூன் மாதம் குமாரபாளையத்தில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் வெற்றி பெற்று இவர்கள் தமிழகத்திற்காக தேசிய தடகளப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றார்கள். இதையடுத்து பிகார் மாநிலத்தில் 2019 ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் இவர்கள் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றனர்.

இப்போட்டியில் தமிழக வீரர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வீரர்கள் வந்திருந்தாலும், பழனியைச் சேர்ந்த நான்கு பேர் தங்கப் பதக்கம் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பாராட்டியுள்ளது. இவர்கள் வரும் அக்டோபர் மாதம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் இந்தோ-நேபால் சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்க நேபாளம் செல்ல உள்ளனர். இதற்காக இப்போது கடும் பயிற்சி  பெற்று வருகிறார்கள். இந்த சர்வதேச போட்டியிலும் இவர்கள் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com