Enable Javscript for better performance
செல்போன் செயலியின் மூலம்: மருத்துவத் தொடர் கல்வி!- Dinamani

சுடச்சுட

  

  செல்போன் செயலியின் மூலம்: மருத்துவத் தொடர் கல்வி!

  By - இரா.மகாதேவன்  |   Published on : 15th October 2019 03:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  im4

  இந்தியாவில் சுகாதாரத் தரத்தை மேம்படுத்தவும், மருத்துவர்களுக்கு சர்வதேச தரத்தில் தொடர்ச்சியான மருத்துவக் கல்வியை வழங்கும் நோக்கத்துடனும் இலவச வீடியோவுடன் கூடிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூருவைச் சேர்ந்த ஆம்னிக்யூரிஸ் (Omnicuris)  என்ற சமூக நிறுவனம். 

  மருத்துவர்கள், தொடர்ச்சியான மருத்துவக் கல்வி (Continuous Medical Education - CME) மூலம் மருத்துவத்தின் அந்தந்தத் துறைகளில், நவீன முன்னேற்றங்களைப் பற்றித் தெரிந்து  கொள்வதற்காக, சவிதா குட்டன் மற்றும் பிரியங்க் ஜெயின்  ஆகியோரால் கடந்த 2016 - இல் ஆம்னிக்யூரிஸ் தளம் தொடங்கப்பட்டது.

  இந்த தளத்தில் மருத்துவர்களுக்கான விநாடி வினாக்கள், வீட்டுப் பயிற்சி மற்றும் சோதனைகள் உள்ளிட்ட இணையத் தொடர்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. இவற்றை செல்லிடப்பேசி செயலி மூலம் மருத்துவர்கள் பெறலாம். பல மாநில அரசுகள் மற்றும் முன்னணி மருத்துவ சங்கங்களுடன் இணைந்து ஆம்னிக்யூரிஸ் இந்த முயற்சியைச் செயல்படுத்தி வருகிறது.

  இதுகுறித்து ஆம்னிக்யூரிஸின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சவிதா குட்டன் கூறுகையில், ""தற்போதைய நிலையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் தனிநபர்கள் நல்ல சிகிச்சையைப் பெற முடிவதில்லை.   காரணம்,   நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் கிராமப்புற மருத்துவர்களுக்குத் தெரிவதில்லை.  அவற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லை. இதை  ஏற்படுத்துவதற்காகத்தான் ஆம்னிக்யூரிஸ் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மருத்துவ அரங்கில் தகவல், கருத்துகள் மற்றும் நவீன  முன்னேற்றங்களை மருத்துவர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது'' என்கிறார். 

  சவிதா, ஆம்னிக்யூரிஸ் நிறுவனத்தை தொடங்க முடிவுசெய்த போது, ஐஐடி -கரக்பூரின் முன்னாள் மாணவரான பிரியங்க் ஜெயின் அவருடன் இணைந்தார். ஆம்னிக்யூரிஸ் நிறுவனத்தில் தற்போது 50 பேர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்துக்கான பெரும்பாலான நிதி, மாநில அரசுகள், மருத்துவச் சங்கங்கள், சுகாதார மற்றும் மருந்து நிறுவனங்களால் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

  இதயவியல், புற்றுநோயியல், நீரிழிவு, மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இரைப்பைக் குடலியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆம்னிக்யூரிஸ், பதிவுசெய்யப்பட்ட விரிவுரைகள் மற்றும் வீடியோ உள்ளடக்கங்களை ஒன்றாக இணைத்து அளித்து வருகிறது. ஆம்னிக்யூரிஸ் தளத்தில் மருத்துவப் பதிவு எண்ணை உள்ளீடு செய்து அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களும் இதன் உள்ளடக்கங்களைப் பார்வையிடலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் கிடைக்கிறது.

  இதுகுறித்து சவிதா தொடர்ந்து கூறுகையில், ""இந்தியாவின் பல புகழ்பெற்ற மருத்துவ சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் உதவியுடன் தகவல்களைத் தொகுக்கும் குழு எங்களிடம் உள்ளது. அவர்களின் தொகுப்பு, மருத்துவ வல்லுநர்களுக்கு நல்ல புரிதலை அளிப்பது மட்டுமல்லாமல், தேர்ச்சி பெறுவதையும் உறுதி செய்கிறது. இந்தத் தளத்தில் பதிவு செய்து தொடர்ந்து மருத்துவப் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு தேசிய நிறுவனங்களுடன் இணைந்து சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன'' என்கிறார்.


  ஆம்னிக்யூரிஸ் செயலி மூலம் கரோனரி தமனி நோய் (சிஏடி) குறித்த மேலதிக தகவல்களைப் பெற்ற திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஜே.சி. சேகர் செயலி குறித்து கூறியது:

  ""மருத்துவத்தின் பலவிதமான சிறப்புத் துறைகளில் வியக்கத்தகு முன்னேற்றங்கள் தினமும் நடந்தேறுகின்றன. ஒரு மருத்துவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் படித்து ஒரு சிறப்புப் பட்டம் வாங்குவதற்குள், அவரது துறையில் நோயைக் கண்டுபிடித்தல் மற்றும் சிகிச்சை முறைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடியும்.

  படித்து முடித்த சில ஆண்டுகளில், அவர் படித்த முறைகளில் இருந்து வெகுவாக மாறியுள்ளதையும், அவர் தொடர் மருத்துவக் கல்வி பயிலாவிட்டால் மிகவும் பின்தங்கிப் போவதையும் நாம் உணர முடியும். 

  பெரிய நகரங்களில் நடைபெறும் மருத்துவக் கருத்தரங்குகளிலோ அல்லது மாநகரங்களில் நடைபெறும் மாநாடுகளிலோ பங்கேற்க சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் பணிபுரியும் மருத்துவர்களுக்கு நேரமோ, வசதியோ இருப்பதில்லை. இந்தக் குறையைப் போக்குவதில் "ஆம்னிக்யூரிஸ்' வலைத்தளம் சிறப்பாக செயல்பட்டு  வருகிறது. 

  பல்வேறு மருத்துவத் துறைகளில் உள்ள தலைசிறந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சையில் அனுபவமிக்க மருத்துவர்களை அணுகி, அவர்கள் மூலமாக மருத்துவர்களுக்கு எளிய முறையில் பாடம் நடத்தி, கல்வி அறிவை மேலோங்கச் செய்யும் வகையில் இந்தத் தளத்தில் தொடர் மருத்துவக் கல்வி அளிக்கப்படுகிறது. ஒரு சிறப்புத் துறையைச் சார்ந்த மருத்துவர், மற்ற முறைகள் குறித்தும் நன்கு தெரிந்து கொள்ள இந்த முறை மிகவும் பயன்படும். 

  எனது சொந்த அனுபவத்திலேயே, எங்கும் அலையாமல், எனக்கு வசதியான நேரத்தில் எனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ உட்கார்ந்து கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக ஆம்னிக்யூரிஸ் அமைந்துள்ளது. 

  இதில் கோர்ûஸ முடித்தபிறகு, கேள்வி பதில்களுக்கு 50%- க்கும் மேல் விடையளித்து வெற்றி பெற்றால், மருத்துவ கவுன்சிலின் கல்விச் சான்று மற்றும் கிரடிட் மணித்துளிகள் கிடைத்துவிடும்'' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai