ஒரு படிப்பு... மூன்று விதமான வேலைவாய்ப்பு!

பலரும் அறியாத ரகசியம் ஒரு படிப்பு மூன்று விதமான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது என்பது.  100 சதம் வேலைவாய்ப்பினை வழங்கும் இந்தப் படிப்பு குறித்து பலருக்கும் தெரியாமல் இருப்பது   ஆச்சரியமான விஷயம்.
ஒரு படிப்பு... மூன்று விதமான வேலைவாய்ப்பு!

பலரும் அறியாத ரகசியம் ஒரு படிப்பு மூன்று விதமான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது என்பது.  100 சதம் வேலைவாய்ப்பினை வழங்கும் இந்தப் படிப்பு குறித்து பலருக்கும் தெரியாமல் இருப்பது   ஆச்சரியமான விஷயம்.

தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில்   இந்த படிப்பு சொல்லித் தரப்படுகிறது.

பி.எஸ்சி  சுற்றுலா மற்றும் உணவு மேலாண்மை என்ற மூன்று ஆண்டு பட்டப்படிப்புதான் அது

சுற்றுலாத்துறை, 5 நட்சத்திர ஹோட்டல், மனிதவள நிர்வாகம் ஆகிய மூன்று விதமான துறைகளில்  இந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்பு உள்ளது. 

இந்த படிப்பு குறித்து சிவகாசி காளீஸ்வரி கல்லூரி துறைத்தலைவர் ஜி. கண்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: 

""தற்போது சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை வளர்ந்து வருகிறது. பி.எஸ்சி சுற்றுலா மற்றும் உணவு மேலாண்மை  படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானதாகும். முதலாவது இந்த படிப்பின் மூலம் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், சுய தொழில்களான டிராவல் ஏஜென்ஸி உள்ளிட்டவற்றைச் செய்ய இயலும். இரண்டாவதாக 5 நட்சத்திர ஹோட்டல்களின் நடைமுறை, நிர்வாகம் உள்ளிட்ட பல நிலைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

உணவு தயாரித்தல், பரிமாறுதல், உபசரிப்பு, சுகாதார மேலாண்மை உள்ளிட்டநிலைகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சொகுசு கப்பல் (குரூஸ்), விமானம், ரயில் உள்ளிட்ட இடங்களில் கேட்டரிங் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

மூன்றாவதாக, மனித வளமேம்பாட்டுத்துறையில் மேலாண்மைப் பணி என்பது எல்லா நிறுவனங்களிலும் தேவைப்படும் ஒரு பணியாகும்.  என்ஜினியரிங் நிறுவனங்கள்,  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசுத்துறையில் பல நிறுவனங்கள் என மனிதவள மேம்பாட்டுத்துறை இல்லாத  நிறுவனமே உலகில் இல்லை என்று சொல்லலாம்.  எனவே இந்தப் படிப்பு படித்தால் உலகில் உள்ள பல நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஒரு நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களை உற்சாகப்படுத்துதல், நெறிப்படுத்துதல்  உள்ளிட்டவற்றைச் செய்யவும்  இந்த  மேலாண்மைப் படிப்பு அவசியமாகும். இந்த படிப்பில் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பும்  உள்ளது. 

இந்த படிப்பில் முதலாம் ஆண்டு படிப்பு தொடர்பான அடிப்படை விஷயங்கள் கற்பிக்கப்படும். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் , ஆறு மாத காலம், நட்டத்திர ஹோட்டல், அல்லது விமானம் ஆகிய வற்றில் வேலை தொடர்பாக பயிற்சி பெற வேண்டும். இதற்காக நாங்கள் தாஜ், லிமெரிடியன்,   ஹயாத் உள்ளிட்ட சர்வதேச அளவிலான நட்சத்திர ஹோட்டல்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். விமானத்தில் மாணவர்கள் பயிற்சி பெற ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, கோஇண்டியா  உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் 6 மாத காலம் விமானம் அல்லது நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி பெறலாம். டிராவல்ஸ் ஏஜென்ஸிகளான தாமஸ்குக், மேக்கை டிரிப், யாத்ரா.காம், பான்டன் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.

இதனால் மாணவர்கள் பயிற்சி பெறும்போதே வேலை உறுதியாகி விடுகிறது. இந்த படிப்பு படித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி. (குரூப்-2) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், அரசு துறைகளான சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றில் வேலை வாய்ப்பு  பெறலாம். சுய தொழிலாக டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தலாம்.  
இந்த படிப்பை முடித்து விட்டு இந்தியாவில் ஓர் ஆண்டு வேலை பார்த்த பின்னர் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தொடக்கத்திலேயே மாதம் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது. இதில் உணவு, தங்குமிடம் இலவசமாகக் கிடைக்கும். வளர்ந்து வரும் சுற்றுலாத்துறையில், வரும் ஆண்டுகளில் லட்சக்கணக்கான  வேலைவாய்ப்புகள் உள்ளன என  ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே வரும் காலங்களில் இந்த படிப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. மாணவர்களுக்கு புதுப்புது அனுபவங்களை தரும் படிப்பாகவும், திறமையை வளர்த்துக்கொள்ளும் படிப்பாகவும் இது உள்ளது''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com