திருக்குறளைப் படி...அரசு வேலையைப் பிடி!

திருக்குறளைப் படி...அரசு வேலையைப் பிடி!

மதுரையில் "குறளினிது" என்கிற அமைப்பு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் திருக்குறளை வாழ்வியலாக, வாழ்க்கை முறையாகக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முயற்சியை,

மற்றவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும், ஏனெனில் எல்லாத் தவறுகளையும் செய்து பார்க்க உங்கள் வாழ் நாள் போதாது"
- எலினார் ரூஸ்வெல்ட்.
மதுரையில் "குறளினிது" என்கிற அமைப்பு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் திருக்குறளை வாழ்வியலாக, வாழ்க்கை முறையாகக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முயற்சியை, சிறு கலந்துரையாடல் வகுப்பாகச் செய்து வருகிறது. இந்த நிகழ்வில் இதுவரை கலந்துகொண்ட மாணவர்களில் ஒரு சிலரைத் தவிர, பலருக்கு, இந்தத் திருக்குறள் கலந்துரையாடல் வகுப்புகள் எந்தவிதத்திலும் அவர்களது பிழைப்புக்கு உதவாது என்கிற எண்ணமும், அறியாமையும் மேலோங்கி இருந்தது. மாணவர்களின் இந்த யதார்த்தநிலை கண்டு, இந்த வகுப்பினை ஒருங்கிணைக்கும் மூத்தவர்களுக்கு இருந்த கவலையைப் போக்கும் அருமருந்தாக வந்திருக்கிறது தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்திலிருந்து சமீபத்தில் வந்திருக்கும் அறிவிப்பு ஒன்று. 
டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளில் ஒன்றான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (C.S.S.E - II) க்கான பாடத் திட்டத்தில் தேர்வு குழுவினர் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றனர். நேர்முகத்தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கான (Mains) பாடத் திட்டத்திலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. முதல்நிலைத் தேர்வின் (Preliminary) பாடத் திட்டத்தில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை.
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி முதல்நிலை தேர்வில் இதுவரை இருந்த தமிழ் மொழித்தாள் முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை இது கொடுத்தாலும், இதையெல்லாம் ஈடுசெய்து மேம்படுத்தப்பட்ட விதமாகவே முதன்மை தேர்வில் திருக்குறளுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
திருத்தியமைக்கபட்டிருக்கும் பாடத் திட்டத்தில் திருக்குறளுக்கான அவசியமும் முக்கியத்துவமும் முதன்மைத் தேர்வுக்கான தலைப்பில் இந்த அளவில் இருக்கிறது: 
பகுதி -ஆ (திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் )
(2 கேள்விகள், 20 மதிப்பெண், மொத்த மதிப்பெண் 40)
தலைப்பு 6: திருக்குறளிலிருந்து கீழ்காணும் தலைப்புக்கள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்.
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள
இலக்கியம்.
ஆ) அன்றாட வாழ்வியலோடு 
தொடர்புத்தன்மை.
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் 
தாக்கம்.
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை.
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்.
"கல்வியும் வேலையும் மக்களை மேம்படுத்துவதற்கான நெம்புகோல்கள்; கல்வி என்பது சக்தி மற்றும் இலட்சியத்தின் வளர்ச்சி ஆகும், மற்றும் "கல்வி வெறுமனே வேலையைக் கற்பிக்கக் கூடாது; அது வாழ்க்கையைக் கற்பிக்க வேண்டும்'" என்று கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த கருத்துக்களை அமெரிக்க சமூகவியலாளர் டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ் கூறியிருக்கிறார். அந்தவகையில் கல்வித் தகுதியை அடிப்படையாக வைத்து அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் ஆணையம், அது உருவாக்கும் பாடத்திட்டம் ஆகியவை ஒரு போட்டியாளர் மற்றும் மாணவரின் மனப்பாட சக்தி மற்றும் நினைவாற்றலை மட்டும் வெறுமனே சோதிக்காமல், அரசுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் வாழ்க்கையை, அப்பகுதி மக்களின் வாழ்வியலை, மனிதத்தை, விழுமியங்களை தன்னகத்தே உள்வாங்கியவராக இருக்கிறாரா என்று சோதிப்பது ஓர் அரசுக்கும், அந்த அரசின் பயனாளிகளான மக்களுக்கும் நன்மை பயக்கும்.
முன்னேற்றமடைய கெட்டிக்காரத்தனம் தேவை. வாய்ப்புகளை இனம் காணவும், உபயோகப்படுத்திக் கொள்ளவும் தெரிந்த திறமை அது. அது வெறும் படிப்பினால் மட்டும் வருவதில்லை. அதைப்போலவே நிர்வாகம் செய்ய வெறும் ஏட்டுப் பாடங்களை மனனம் செய்து, அதன் மூலம் போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து அரசுப் பதவிகளைப் பெறுபவர்கள் மக்கள்நல ஆட்சிமுறையைச் சரியாகச் செயல்படுத்த முடியாது.
வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கொடாது எனின்" 
- குறள்: 546 இல்,
"மன்னவனுக்கு வெற்றியைத் தருவது பெரும் படை அல்ல, அன்பும் சமூக அக்கறையும் உள்ள நல்லாட்சியே ஆகும்' என்று சொல்லியிருப்பதின் மூலம் அறமும், மனித நேயமும் புரிந்தவர்கள் அரசுப் பதவிகளில் அமர்வதின் முக்கியத்துவத்தையும், 
"மதிநுட்பம் நூலோடு உடையைக்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை" 
- குறள்: 636 இல்,
"இயற்கையான அறிவுடன் கல்வியையும் பெற்றவரால் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவுமில்லை என்பதையும் வள்ளுவர் அழகாக வலியுறுத்தியிருக்கிறார்.
முந்நூறு மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - ஐஐ- க்கான முதன்மைத் தேர்வில் திருக்குறள் சார்ந்த கேள்விகளுக்கு நாற்பது மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய மதிப்பெண்களுக்கான பாடங்களில், மொழிபெயர்ப்பு பகுதி போக, பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால், இதுவரை இந்தத் தேர்வுக்கு தங்களைத் தயார் படுத்திக்கொண்டிருந்த மாணவர்கள், புதியதாக திருக்குறளை மட்டும் கூடுதலாக, ஆழமாகப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இங்கு வெறும் மனப்பாட சக்தி மற்றும் ஒரு போட்டியாளரை வெற்றிபெறச் செய்யாது என்கிற நிலையில், திருக்குறள் பகுதியில் செறிவாக எழுதி அதிகமான மதிப்பெண்களை எடுக்கப் போகும் மாணவருக்கே இனி அரசுப் பணி என்கிற சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது.
திருவள்ளுவரின் திருக்குறள், இனி உங்களுக்கு அரசு வேலைகளை வாங்கித் தரவிருக்கிறது மாணவர்களே... இதைப் புரிந்து படித்து, தேர்வுக்குத் தயாராகுங்கள்.
- கே.பி.மாரிகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com