Enable Javscript for better performance
ஆராய்ச்சிப் படிப்பில்...டிவி மெக்கானிக்!- Dinamani

சுடச்சுட

  
  JAYKUMAR-VAIDYA

  வறுமை என்பது பெரும்பாலான இளைஞர்களின் வளர்ச்சிக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல். அதைக் கண்டு பயந்துவிடாமல், உடைத்து நொறுக்கிவிட்டு ஓடும் இளைஞர்களே வெற்றி எல்லையை அடைந்து சாதிக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஜெய்குமார் வைத்யா. 
  மும்பையின் குடிசைவாழ் பகுதியான குர்லாவில் எட்டுக்கு பத்து சதுரஅடி வீட்டில் தன் தாய் நளினியுடன் வசித்தவர் ஜெய்குமார் வைத்யா. நளினி தன் கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதால் விவாகரத்து பெற்றவர். எந்த ஆதரவுமின்றி வாழ்க்கையைத் தொடங்கியதால் இருவரையும் வறுமை வாட்டியது. நளினியால், தன் மகனின் கல்விக் கட்டணத்தைக் கூட சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் இருந்தது. அந்த நேரங்களில் ஜெய்குமாரை தேர்வு எழுத அனுமதிக்காமல், அவரை ஓட்டுநர் பணியில் சேர்த்து விட அறிவுரை கூறிய நிர்வாகங்களும் இருந்தன.
  ஜெய்குமாரும் அவருடைய தாயும் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் வடபாவ், சமோசா, ரொட்டி, தேநீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். உள்ளூர் கோயில் அறக்கட்டளையிலிருந்து ரேஷன் பொருள்கள், பிறரால் தரப்பட்ட ஆடைகள் கிடைக்கும். அவற்றையே அவர்கள் உடுத்தியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமை. 
  அந்தநேரத்தில், ஜெய்குமார் ஓர் உள்ளூர் தொலைக்காட்சி பழுதுபார்க்கும் கடையில் சால்ட்ரிங் வேலையை மேற்கொண்டார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ. 4000 ஊதியம் கிடைத்தது. அதோடு, அவர் குர்லா பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையிலும் வேலைசெய்துகொண்டு, மற்ற மாணவர்களின் பணிகளையும் செய்தார். 
  அவரது தாய் நளினி, ஒரு பேக்கேஜிங் நிறுவனத்தில் மாதம் ரூ. 8000 ஊதியத்தில் பணியாற்றினார். 
  இந்த நிலையில் பிளஸ் 2 -வில் தேர்ச்சி பெற்ற ஜெய்குமாருக்கு கே.ஜே. சோமையா பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்திய மேம்பாட்டு அறக்கட்டளை (ஐ.டி.எஃப்) உள்ளிட்ட மும்பையில் உள்ள ஒருசில தொண்டு அறக்கட்டளைகள் வழங்கிய வட்டி இல்லாத நிதி உதவி, பல வருட கடின உழைப்பு மற்றும் படிப்புக்குப் பிறகு மின்னணு பொறியியலில் பட்டம் பெற்றார் ஜெய்குமார்.
  இதுகுறித்து அவர் கூறுகையில், "கல்லூரியில் படிக்கும்போது, நானோ இயற்பியலில் எனக்கு ஆர்வம் இருந்ததால், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ டெக்னாலஜி போன்றவற்றைத் தீவிரமாகப் படித்தேன். ரோபோட்டிக்ஸில் 3 தேசிய விருதுகளையும், 4 மாநில விருதுகளையும் வென்று கல்லூரியில் எனது அடையாளத்தை வெளிப்படுத்தினேன். அதோடு, உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி- இல் இன்டர்ன்ஷிப் வாய்ப்பும் கிடைத்தது'' என்றார் ஜெய்குமார்.
  இந்த நிலையில், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) இல் ஜெய்குமார் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஓர் ஆராய்ச்சியாளராக மாதத்திற்கு ரூ. 30,000 வழங்கப்பட்டது. இந்த பணத்தில் தனது வீட்டை குளிரூட்டியுடன் புதுப்பித்த ஜெய்குமார், அயல்நாடுகளுக்குச் சென்று படிக்கும் வகையில், ஜி.ஆர்.இ மற்றும் டோஃபெல் ஆங்கில மொழித் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தார்.
  இதற்கான பணத் தேவைகளுக்காக, சர்வதேச மாணவர்களுக்கு இணையம் வழியாக பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2017 - இல் இவரது முதல் மாணவர், லண்டனில் உள்ள புகழ்பெற்ற இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்தவர். இவரது மாணவர்கள் அனைவரும் முதலிடத்தைப் பெற்றதால், பிப்ரவரி 2019 -இல் ஜெய்குமார் வைத்யா ஒரு விளம்பரத்தை வெளியிட்டபோது அவருக்கு பலரிடம் இருந்தும் கோரிக்கைகள் வரத்தொடங்கின. இதன்மூலம் அவர் தனது கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்தினார்.
  3 ஆண்டுகள் TIFR இல் பணிபுரிந்தது பிஎச்.டி திட்டத்திற்கு ஜெய்குமாரை தூண்டும் அடித்தளமாக அமைந்தது. அங்கு பணியாற்றிய காலத்தில், 2017, 2018 ஆம் ஆண்டுகளில் புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் பத்திரிகைகளில் 2 அறிவியல் ஆவணங்களை வெளியிட்டார். இவை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் கவனத்தை ஈர்த்தன. தங்களது பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆராய்ச்சி உதவியாளராகச் சேர வர்ஜீனியா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்தது. இதை ஏற்று, வர்ஜீனியாவில் நானோ தொழில்நுட்பத்தில் முழு நிதியுதவி பெற்ற ஐந்தாண்டு பிஎச்டி திட்டத்தைத் தொடர உள்ளார் ஜெய்குமார் வைத்யா. இந்த காலகட்டத்தில் அவருக்கு மாதம் 2,000 அமெரிக்க டாலர் (ரூ. 1.44 லட்சம்) உதவித்தொகையாக வழங்கப்படும்.
  ஜெய்குமார் கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி மும்பை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வர்ஜீனியாவுக்குப் புறப்பட்டார். முன்னதாக அவர் கூறுகையில், "எங்கள் குடும்பத்தில் விமானத்தில் உட்கார்ந்த முதல் நபர் நான்தான். அதனால், உற்சாகமாக இருக்கிறேன். வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் என் தாயுடன் தொடர்பில் இருக்க நான் அவருக்காக ரூ. 5,000 மதிப்புள்ள மொபைல் போனை வாங்கிக் கொடுத்துள்ளேன். என் அம்மா என்னை அனுப்பி வைக்க விமான நிலையத்திற்கு வருவார். அவர் வாழ்க்கையில் விமான நிலையத்தையே பார்த்ததில்லை. அவர் இந்த நிலையை எட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மாதம் என்னுடைய தேவைக்காக 500 டாலரை வைத்துக் கொண்டு மீதத்தை அம்மாவுக்கு அனுப்பி வைப்பேன்'' என்று கூறியுள்ளார். 
  அவர் விமானம் ஏறுவதற்கு முன்னதாக தன்னைப்போல கனவு காண்பவர்களுக்கு ஓர் ஆலோசனை தெரிவித்துள்ளார். "வெற்றி என்பது ஒரு பயணம்; அது நம் நிலைத்தன்மையை சோதிக்கிறது. நாம் ஒருபோதும் அதை கைவிடக் கூடாது. ஒரு மில்லியன் முறை தோல்வியுற்றாலும், அடுத்த நாள் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையைத் தொடரவேண்டும்' என்பதே அது.


  - இரா.மகாதேவன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai