சுடச்சுட

  
  im6

  ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள். அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே செலவிடுவேன்" 
  - ஆபிரகாம் லிங்கன். 
  ஓர் இலக்கை நோக்கிய முயற்சி, பயிற்சியின்றி சாத்தியமாகாது. அப்படியான பயிற்சியைக் கூட நாம் தேர்ந்தெடுத்திருக்கும் இலக்கைச் சென்றடைய உதவுமா என்பதைத் தெளிவாக முடிவு செய்த பிறகே தொடங்க வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் பலருக்கு, "தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மட்டுமே தங்களுக்கு உகந்தது; பாதுகாப்பானது' என்று கருதுகின்றனர். அதற்கான பிரதான காரணத்தை நாம் உற்று நோக்கினால்... வேதனையும், அதிர்ச்சியுமே ஏற்படுகிறது. 
  ஆங்கில மொழித் திறன் பற்றி இங்கு அளவுக்கதிகமாக, பூதாகரமாக சித்திரித்துக் காட்டப்பட்டிருக்கும் கருத்தே, இம்மாணவர்களை ஆங்கிலம் தவிர்க்க கூடிய தேர்வாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நம்பிக்கையோடு அதிகமாக நாடிச் செல்வதற்கு வழிவகுத்திருக்கிறது. இந்தப் போக்கு போட்டித்தேர்வுகளைச் சந்திக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. 
  தாய்மொழியான தமிழ் மீதிருக்கும் பற்றின் காரணமாக, பிற மொழி மீதான வெறுப்பும், துவேசமும் அவசியமற்றதாகவும், ஏமாற்றும் வழிமுறையாகவுமே தோன்றுகிறது. ஏனென்றால், ஆங்கிலத்தை வெறுக்கும் - தவிர்க்கும் மாணவர்களில் பெரும்பாலோனோர் அப்படி ஒன்றும் அவர்களது தாய்மொழி தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இல்லை. தாய்மொழி அறிவில், திறனில் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல், மற்ற மொழிகள், தொடர்பு மொழிகள் என்று எல்லாவற்றையும் தவிர்க்கின்ற மாணவர்களின் இயல்பை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மாணவர்களின் இந்த நிலைக்கு அரசு, ஆசிரியர்கள், அரசியல் என்று பல சிக்கலான காரணங்கள்இருந்தாலும், இந்த நிலையை மாற்றியமைப்பது சாத்தியமே. 
  மிகவும் பின்தங்கிய குடும்ப, சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்த இரண்டு மாணவர்களின் வெற்றிக் கதையை இங்கு பகிர்வது நமக்கு அவசியமாகிறது. இருவருமே கிராமத்து பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களுக்கிருந்த வாய்ப்புகள், கல்லூரிப் படிப்பை முடிக்கின்ற வரை அவர்களுக்கு போதுமான ஆங்கில மொழித் திறனைப் பெற்றுத் தரவில்லை. வேலைவாய்ப்பு... போட்டித்தேர்வுகள்... நேர்முகத்தேர்வு என்கிற நெருக்கடி வந்தவுடன், வேறு வழியின்றி நம்மை அணுகியபோது, நம் அனுபவம் நமக்கு கொடுத்திருக்கும் நுட்பமான வழிமுறைகள் சிலவற்றை அவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுத்தோம். கடினமாக உழைத்தார்கள். ஒரே மாதத்தில் அவர்களுக்கு ஆங்கில மொழி பற்றிய புரிதல் கிடைத்து. அச்சம் அகன்று சாதனை படிகளில் ஏற ஆரம்பித்தார்கள். ஈடுபாடில்லாத பல ஆண்டுகள் முயற்சிக்கும், கவனமான, தீவிர முயற்சிக்கும், பயிற்சிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்பதை ஆங்கிலத்தை கண்டு மிரண்டு ஓடும் மற்ற மாணவர்களுக்கு, இந்த இரு மாணவர்களின் ஒரு மாத உழைப்பு நிரூபித்துக் காட்டியது. 
  தமிழோடு ஆங்கில அறிவையும் திட்டமிட்டு உழைத்து பெற்ற அந்த மாணவர்கள் இருவரில் ஒருவர், ஒரு மாணவி. இன்று அவர் ஒரு பிரபல பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக அதிக சம்பளத்தில் பலருக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார். மற்றொரு மாணவரோ, தொடர்ந்து தமிழக அரசுப் பணித் தேர்வுகளில் மட்டும் வெற்றி பெறுவது என்கிற நிலை மாறி, ஆங்கிலமும் அவசியம் என்கின்ற தகுதியோடு இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் எந்தவித தயக்கமோ, அச்சமோஇன்றி கலந்துகொண்டு, தொடர் வெற்றிகளைப் பெற்று, எது நல்ல பணி... எது தனக்குத் தேவை என்று தனக்கானதை தேர்வு செய்கின்ற நிலைக்குச் சென்றார். இறுதியில் இப்பொழுது இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்று பக்கத்து மாநிலத்தில் ஒரு காவல்துறை உயர்அலுவலராகப் பணி செய்துகொண்டிருக்கிறார். இந்த இரு மாணவர்களும் இன்று பன்மொழிகள் தெரிந்த அதிகாரிகள் என்பது கூடுதல் செய்தி.
  யானைகளைப் பயிற்றுவிக்கும் வேடர்கள் மற்றும் பாகன்கள், யானைகளை குட்டியாகப் பிடித்து வந்தவுடன்... கடினமான, பெரிய இரும்புச் சங்கிலிகள் கொண்டு கட்டிப் போடுவார்களாம். அதே யானைகள் முழுவதும் வளர்ந்து பெரிதாக ஆனவுடன்... சாதாரண கயிறு கொண்டு கட்டுவார்களாம். குட்டியாக இருந்தபோது, தன் காலுடன் பிணைக்கப்பட்ட கடினமான சங்கிலியை இழுத்து... இழுத்து... அறுக்க, உடைக்க முயற்சித்து தோற்றுப் போன குட்டி யானை, பின்னர் வளர்ந்து பெரிதாக ஆன பின்னர், "தன் காலில் கட்டப்பட்டிருப்பது சாதாரண கயிறுதான்.... அதை நாம் நொடியில் அறுத்தெறிந்து விட முடியும்' என்பதை உணராமல், அதன் முயற்சியையே கைவிட்டுவிடுமாம். தாய்மொழியைக் கடந்து பிறமொழி படிக்க அஞ்சும் மாணவர்களின் நிலையும் இதுதான்.
  ஒரு பவுண்ட் தேனைச் சேகரிக்க, தேனீக்கள் இருபது லட்சத்துக்கும் மேலான மலர்களைத் தேடிச்செல்கிறதாம். அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற மாணவர்கள், தங்களது தரம் - தகுதியை வளர்த்துக்கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்து கொள்ளத் தயங்கலாமா?அச்சப்படலாமா? ஆங்கிலமோ, வேறு மொழியோ எதையும் வெறுத்து, பயந்து, ஒதுங்கி படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான்; எழுந்து பல மொழி படித்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான். 
  நமது முன்னோடிகள் மற்றும் சாதித்தவர்களின் சிந்தனைத் துளிகள் நம்மைச் செதுக்கும் உளிகளாக... நமக்கு உதவட்டும். தன்பலம் உணர்ந்த யானை தன் கால்கட்டை அறுத்தெறிவது போல... பிறமொழி அச்சம் என்கிற கால்கட்டுக்களை, தடைகளைத் தகர்த்து வெற்றியாளராக வலம் வருவோம்.
  - கே.பி. மாரிக்குமார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai