Enable Javscript for better performance
புத்தக வாசிப்பு... நடைமுறை... கண்டுபிடிப்பு!- Dinamani

சுடச்சுட

  

  புத்தக வாசிப்பு... நடைமுறை... கண்டுபிடிப்பு!

  By DIN  |   Published on : 03rd September 2019 12:18 PM  |   அ+அ அ-   |    |  

  MOHAMMED

  உலகில் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதைப் போன்றே நோய்களைக் கண்டறியும் கருவிகளின் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. எந்த வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கண்டுபிடிக்கவே ஏராளமான பணத்தைச் செலவிட வேண்டிய நிலையில், 17 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அரசும் அந்தச் சிறுவனைக் கெளரவிக்கும் வகையில், ராஷ்டிரிய பால புரஸ்கார் (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) என்ற உயரிய விருதை வழங்கியுள்ளது.
  வெறும் 2 ரூபாய் செலவில் ஒரு சோதனையைச் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தச் சிறுவனை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரும், விஞ்ஞானிகளும் பாராட்டி மகிழ்ந்துள்ளனர். 
  மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கபட்டினத்தைச் சேர்ந்த மொகமது சுஹைல் சின்யா சலீம் பாட்ஷா தான் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்.
  குழந்தைகள் உட்கொள்ளும் உணவில் புரதத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டினை துண்டு காகிதத்தைப் பயன்படுத்தி கண்டறியும் முறையை அவர் கண்டுபிடித்துள்ளார். அந்த புதிய கண்டுபிடிப்புக்குதான் இந்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. 
  சிறு வயதிலிருந்தே பெற்றோர்களது வழிகாட்டுதலின்படி புத்தக வாசிப்பை நேசித்து வந்து சுஹைலுக்கு தான் படிக்கும் விஷயங்கள் உண்மைதானா? என பிராக்டிகலாகச் செய்து பார்க்கும் வழக்கம் இருந்துள்ளது. அதனால் ஒரு விஷயத்தை முழுமையாய் அறிந்து கொள்ளும் வரை அது குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே அவர் இருந்துள்ளார். சில விஷயங்களுக்கு அவருடைய பெற்றோரால் பதில் அளிக்க முடிந்திருக்கிறது. நிறைய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. மகனின் படிப்பார்வத்தை அறிந்த அவரது பெற்றோர், சுஹைலுக்கு இணைய இணைப்புடன் கூடிய ஒரு மடிக்கணினியை வாங்கிக் கொடுத்துள்ளனர். பெரும்பாலான விஷயங்களை இணையமே அவருக்குக் கற்றுத் தந்துள்ளது.
  புத்தக வாசிப்பு தவிர, யோகா, பாடல் எழுதுதல், கராத்தே, சதுரங்கம், போன்றவற்றிலும் சுஹைலுக்கு ஆர்வம். 
  "அமெரிக்காவின், ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் பேராசிரியராகப் பணியாற்றும் விஞ்ஞானி மனுபிரகாஷின் வீடியோ ஒன்றை 2017- ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார்த்தேன். மூன்று நிமிடங்களுக்குள் மலேரியாவைக் கண்டறியக் கூடிய காகிதத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் நுண்ணோக்கியை உருவாக்கியவர் அவர். இந்த வீடியோவைப் பார்த்த எனக்கு எதிர்காலத்தில் என்ன நோய் என்று கண்டுபிடிப்பதற்கே மக்கள் அதிக செலவு செய்யக் கூடாது; அதற்கு மாற்று வழியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. 
  அதையடுத்து காகிதத்தைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைப்பாட்டைக் கண்டறியும் முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் வந்தது. எத்தனை குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள பல ஆய்வு கட்டுரைகளைப் படித்தேன். இந்தியாவில் லட்சக்கணக்கானோரும், உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது ஆராய்ச்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். "புரதத்தின் அளவுகள் வேறுபட்டவை. எனவே, புரதச்சத்தை அதிகரிக்க பரிந்துரைக்க வேண்டிய உணவு வகை ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். இதனால், ஒவ்வொரு குழந்தையின் ரத்தத்தில் உள்ள புரதத்தின் அளவைக் கணிக்கக் கூடிய புதிய முறையைக் கண்டறிய முயன்றேன்.
  நான் பரிசோதனை செய்ய ஒரு காகிதத்தைப் பயன்படுத்துகிறேன். ஒரு குழந்தையின் உமிழ்நீரை காகிதத்தில் எடுக்க வேண்டும். காகிதத்தின் நிறம் மாறினால், அது புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததற்கான அறிகுறியாகும். இதற்காக, நான் ஒரு மொபைல் பயன்பாட்டையும் உருவாக்கியுள்ளேன். இந்த காகிதத்தை ஸ்கேன் செய்து புரதத்தின் சதவிகிதம் அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவை தெரிந்துகொள்ளலாம். இதற்கு செலவு வெறும் 2 ரூபாய்தான் என்பதுடன் பரிசோதனை முடிவையும் 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும்'' என்கிறார் சுஹைல். 
  இன்றுவரை, ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிவதற்கான ஒரே வழி ரத்த பரிசோதனையாகும். இதனால் மருத்துவ கழிவுகள் உருவாகி அதை அகற்றுவதற்கு பல நாடுகள் சிரமப்பட்டு வருகின்றன.
  இதற்கு மாற்றாக இந்த காகிதப் பரிசோதனைக் கருவி இருக்கிறது. 
  சாதனைக்குத் தேவை புதிய சிந்தனையும், விடாமுயற்சியும்தான் என்பதை உலகிற்கு உணர்த்திய இந்த சிறுவனின் வெற்றிக்கு வாசிப்பும் உதவியிருக்கிறது என்பது இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி.

  - வி.குமாரமுருகன்

  kattana sevai