தொழிற்சாலை பாதுகாப்பு... வேலை வாய்ப்புகள்!

பாதுகாப்பு என்பது பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். நமது வாழ்க்கையில் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் தேவைப்படுகிறது.
தொழிற்சாலை பாதுகாப்பு... வேலை வாய்ப்புகள்!

பாதுகாப்பு என்பது பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். நமது வாழ்க்கையில் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மத்தியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். தொழிற்சாலை என்பது இந்திய தொழிற்சாலைகள் சட்டம் 1948-இல் பிரிவு 2 (எம்)-இல் உற்பத்தி நடைமுறையில் ஏதேனும் ஓர் இடத்தில் மின்னாற்றல் பயன்படுத்தப்பட்டு, 10 நபர்களையும், அதற்கு மேற்பட்டவர்களையும் பயன்படுத்தும் போது அது தொழிற்சாலை வளாகம் என அழைக்கப்படுகிறது. 
நாட்டில் 500 தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. சில வெளிநாடுகளில் 100 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில், தொழிற்சாலைப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே தொழிற்சாலை ஒவ்வொன்றிலும் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். 
தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரியாக தொழிற்சாலை பாதுகாப்பு முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். முதுகலைப் படிப்பில் சேர்வதற்கு ஏதாவது ஒரு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், GATE, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கவுன்சிலிங், டேன்செட் அல்லது கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மூலமாக இப்பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இந்த முதுகலைப் பொறியியல் பட்டப் படிப்பு சுமார் 15 கல்லூரிகளில் உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 350 முதல் 400 மாணவர்கள், தொழிற்சாலைப் பாதுகாப்பு முதுகலை பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வெளியேறுகின்றனர். தேசிய அளவில் சுமார் 1, 500 முதல் 2,000 பேர் படித்து முடித்து வெளியேறுகின்றனர். எனவே, இப் பிரிவை படித்து முடித்த அவைருக்கும் நல்ல ஊதியத்துடன் வேலை உறுதி என்ற நிலை உள்ளது. 
பாதுகாப்பு, உடல்நலம், சுற்றுச்சூழல் பற்றிய நடைமுறைகளை அமல்படுத்தத் தேவையான மேலாண்மைத் திறன், தொழில் நுட்ப அறிவு ஆகியவற்றை ஊட்டுவதற்கு இந்த முதுகலைப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாதுகாப்பு, உடல்நலம், சுற்றுச்சூழலின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்வதை வலியுறுத்துவதோடு, இந்தத் துறையில் தலை சிறந்த நிலையை எட்டவும் இந்த படிப்பு உதவும். சுமார் 500 பேர் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்கு ஒரு தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என அரசு விதிமுறை உள்ளதால், இந்த படிப்பு படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம். 
சில வேளைகளில் ஒரு மாணவருக்கு ஒரே சமயத்தில் 2 அல்லது 3 தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதில் சிறந்ததை மாணவர் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. வேலைக்குச் சேரும் மாணவர்களுக்கு தொடக்கத்தில் மாதம் சுமார் ரூ .50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. இவர்கள் தொழிற்சாலைகள் குறித்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அரசின் சட்டதிட்டங்களை நிறைவேற்றவும், தொழிற்சாலை விதிமுறைகளை அமல்படுத்தவும், கட்டடங்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்த பின்னர், அனுபவத்தைப் பொறுத்து வெளிநாடுகளிலும் இதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, பெட்ரோல் உற்பத்தியாகும் நாடுகளில் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி அவசியம் என்பதால், வளைகுடா நாடுகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
- ச.பாலசுந்தரராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com