பன்னாட்டுச் சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி!

மெக்சிகோ நாட்டில் செயல்பட்டு வரும் முமேடி அறக்கட்டளை (MUMEDI Foundation) எனும் அமைப்பு, அருங்காட்சியகம், தங்கும் விடுதி, உணவகம் மற்றும் வணிக மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறது
பன்னாட்டுச் சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி!

மெக்சிகோ நாட்டில் செயல்பட்டு வரும் முமேடி அறக்கட்டளை (MUMEDI Foundation) எனும் அமைப்பு, அருங்காட்சியகம், தங்கும் விடுதி, உணவகம் மற்றும் வணிக மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் அருங்காட்சியகத்தில், தற்காலிகக் கூட்டு மற்றும் தனியார் கண்காட்சிகளை நடத்திட தேவையான இட வசதி வழங்கப்பட்டு வருகிறது. எந்தவொரு நாட்டின் படைப்பாளியும் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தித் தேவையான விளம்பரத்தையும், நல்ல வாய்ப்பையும் அடைய இந்த அருங்காட்சியகம் உதவி வருகின்றது. 
Graphic design, Industrial, Jewelry, Textile, Interiors, Architecture, Photography, Typography, Illustration மற்றும் பலதரப்பட்ட திட்டப்பணிகளில் உரிய சிறப்பைப் பெற்றிடத் தேவையான கண்காட்சிகளை நடத்துவதற்கு இங்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த அமைப்பு To death with a smile எனும் தலைப்பிலான பன்னாட்டுச் சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி ஒன்றினை அறிவித்திருக்கிறது. 
மரணம் என்பதைக் கருத்தாய்வு அல்லது அணுகுமுறையில், அவர்களது பண்பாட்டின் அடிப்படையில் அதனைக் கண்டு எப்படி அஞ்சுகிறார்கள் அல்லது கொண்டாடுகிறார்கள் அல்லது சமாளிக்கிறார்கள் என்பதை விளக்கும் வகையில் சுவரொட்டி அமைக்கப்பட வேண்டும். இந்தச் சுவரொட்டியானது மரணத்தைத் தீவிரமானதாகவோ அல்லது விளையாட்டாகவோ பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 
இப்போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்ட, வடிவமைப்புகளில் ஆர்வமுடைய எந்த நாட்டைச் சேர்ந்தவரும் பங்கேற்கலாம். 
போட்டியில் பங்கேற்கும் ஒருவர் மூன்று சுவரொட்டிகள் வரை வடிவமைத்துச் சமர்ப்பிக்கலாம். 
வடிவமைக்கப்படும் சுவரொட்டி கையினால் வரையப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆனால், இறுதியில் அதனை டிஜிட்டலில் மாற்றிச் சமர்ப்பிக்க வேண்டும். 
வடிவமைக்கப்படும் சுவரொட்டியின் அளவு 60 x 80 செ.மீ எனும் அளவில் செங்குத்து வடிவில் இருக்க வேண்டும். 
சுவரொட்டி மூன்று முதன்மை நிறங்களை (RGB) உள்ளடக்கியதாகவும், கணினித்திரை பிரிதிறன் (Resolution) 300 dpi (dots per inch) எனும் படத்தெளிவிலும், 25 எம்பி அளவிற்கு அதிகமாகாமல் JPG  கோப்பாக இருக்க வேண்டும். 
வடிவமைப்புக்கான கோப்பின் பெயர், surname_name of the author.jpg என்றிருக்க வேண்டும். 
இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை இத்தளத்தில் பதிவு செய்து கொண்டு, தாங்கள் வடிவமைத்த சுவரொட்டிகளைப் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், சுவரொட்டியினை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தவும், வணிகப் பயன்பாட்டுக்கு அனுமதித்தும் இரு ஒப்புதல் கடிதங்களை அளித்திட வேண்டும். போட்டிக்கான சுவரொட்டிகளைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 21-10-2019. 
போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தும் நடுவர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மூன்று பரிசுகளுக்கான சுவரொட்டிகள் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப் பெற்ற சுவரொட்டிகளை வடிவமைத்தவர்களுக்கு முதல் பரிசாக Apple iPad Air ஒன்றும், இரண்டாம் பரிசாக Apple iPad ஒன்றும், மூன்றாம் பரிசாக Huawei Cellphone ஒன்றும் எனப் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர, காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகளில் முதல் மாதத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற சுவரொட்டிக்கு Huawei Cellphone ஒன்று சிறப்புப் பரிசாக வழங்கப்படும். 
பரிசுகளைப் பெற்ற சுவரொட்டி வடிவமைப்பாளர்களுக்கு, இந்த அமைப்பு மெக்சிகோவில் நடத்தி வரும் தங்கும் விடுதியில் தொடர்ச்சியாக இரு நாட்கள், தங்குவதற்கான அறை, உணவும் வழங்கப்படும். இந்த வசதியினை 22-11-2019 முதல் 22-11-2020 வரையிலான காலத்தில் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இந்த அமைப்பு நிறுவியுள்ள தங்கும்விடுதி வணிக மையத்தில் 2000 மெக்சிகன் பீசாசுக்கான பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான பரிசுச் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டி குறித்த முடிவுகள் 21-11-2019 அன்று நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். 
பரிசுக்குத் தேர்வு செய்யப் பெற்ற சுவரொட்டிகளுடன் சிறப்புக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்ட 300 முதல் 500 சுவரொட்டிகள் இந்த அமைப்பு நடத்தி வரும் அருங்காட்சியகத்தில் நவம்பர், 2019 முதல் ஜனவரி, 2020 வரைக் காட்சிப்படுத்தப்படும். 
இந்தப் போட்டி குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள 
https://www.mumedi.mx/convocatoria/42 எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம். 
- மு. சுப்பிரமணி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com