வாங்க இங்கிலீஷ் பேசலாம் 207 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 207 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது chauvinism என்ற சொல்லைப் பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். அந்த சொல்லின் மூலச்சொல் குறித்த சுவாரஸ்யமான கதை ஒன்று உண்டு என புரொபஸர் சொல்கிறார். அது என்ன என அறிவோமா?
புரொபஸர்: CHAUVINISM என்றால் மிகையான தேசப்பற்று மற்றும் தேசிய வழிபாடு எனக் கண்டோம். குறிப்பாக தன் தேசத்து மக்களே பிற மக்களை விட மேலானவர்கள் எனும் குருட்டுத்தனமான நம்பிக்கை அது என தெரிந்து கொண்டோம். ஆனால் வெறும் தேசப்பற்று மட்டுமே CHAUVINISM ஆகாது. இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த சொல் உருவான கதையை நாம் அறிய வேண்டும். இது பிரெஞ்சில் தோன்றி ஆங்கிலத்துக்கு இறக்குமதியான சொல். நெப்போலினிய போர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? 
கணேஷ்: எந்த நெப்போலியன்? சீவலப்பேரி பாண்டி படத்தில் நடிச்சவரா? 
புரொபஸர்: தமிழ் நாட்டில் முதலில் சினிமாவைத் தடைபண்ணனும். 
நடாஷா: நான் சொல்லவா? 1803 முதல் 1815 வரை நடந்த Napoleonic wars தானே? 
புரொபஸர்: கரெக்ட். இந்த போர்கள் நெப்போலியனின் பிரெஞ்சு படைகளுக்கும் இங்கிலாந்து, ரஷ்யா, புருஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்களுக்கு இடையிலான coalitions, அதாவது கூட்டணிகளுக்கும் இடையில் நீண்ட காலம் நடந்தது. ஏழு முறை கூட்டணி அமைத்து இந்த allies, அதாவது பிரான்சுக்கு எதிரான ஐரோப்பிய நேச நாடுகள், நெப்போலியனை எதிர்த்து இறுதியாக 1815 - இல் வாட்டர் லூ போரில் அவரை முழுமையாகத் தோற்கடித்து சிறையில் தள்ளினார்கள். ஆறு வருடங்கள் சிறையில் கிடந்த பின் நெப்போலியன் மரணமடைந்தார். 
ஜூலி: பாவம். ஈழப்போர் போல இல்லையா? உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கினால் எந்த வீரமான நாட்டுப் படையும் ஒருநாள் வீழ்ந்தே ஆகும். 
புரொபஸர்: யெஸ். இந்த காலகட்டத்தில் பிரெஞ்சு படையில் ஒரு வீரர் இருந்தார். அவர் பெயர் நிக்கலஸ் செளவின். அவர் ஒரு மிகப்பெரிய நெப்போலியன் அபிமானி. நெப்போலியனுக்காக போரில் பங்கேற்று கடுமையாகக் காயமடைகிறார். அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சொற்ப வருமானத்தைக் கொண்டு அவரால் தன் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. இருந்தாலும் அவர் நெப்போலியன் மீதான அபிமானத்தை விடவில்லை. ஆறாவது நேச நாடுகளின் கூட்டணி போர் தொடுத்து நெப்போலியனை முறியடித்தனர். Nepolean abdicated. 
கணேஷ்: அதென்ன அப்டிகேட்டட்? 
ஜூலி: Stepped down, stood down, quit, renounced. அதாவது பதவியை துறப்பது. 
கணேஷ்: ஓ... வேலையை விடுவது. 
ஜூலி: வேலையை விடுவதெல்லாம் உன்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கும், கார்ப்பரேட் பணியாளர்களுக்கும் தான். ஒரு மன்னர், ஒரு ஆட்சியாளர் பதவியைத் துறப்பார், விட மாட்டார். It is not resignation or putting down papers. இரண்டும் வேறு வேறு. 
கணேஷ்: ம்க்கும். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்னு சொல்றதெல்லாம் என்னவாம். 
ஜூலி: அதெல்லாம் சும்மா பேச்சுக்கு.
நடாஷா: சார், அது put in papers -ஆ இல்ல... put down papers - ஆ? 
புரொபஸர்: நல்ல கேள்வி. ஆனால் நான் சொல்ல வந்ததை முடிச்சுட்டு உன் கிட்ட வரட்டுமாம்மா? 
நடாஷா: ஓ... யெஸ். 
புரொபஸர்: நெப்போலியன் அவராகவே பதவியைத் துறக்கவில்லை, அவர் அப்படி வற்புறுத்தப்பட்டார். பிறகு அவரை சிறைக்கு அனுப்பினார்கள். பதினாறாவது லூயி, மன்னரானதும், மக்களிடையே நெப்போலியன் மீது கசப்பும் புது மன்னரிடம் மதிப்பும் தோன்றியது. இந்தச் சூழலிலும் செளவின் விடாமல் நெப்போலியனின் புகழ் பாடினார். அவரை நெப்போலிய எதிர்ப்பாளர்கள் கேலி செய்தார்கள்; வைதார்கள். ஆனால் செளவ்வின் சளைக்கவில்லை. ஆக, பின்னர் அவரைப் போல விடாப்பிடியாக முரட்டுத்தனமாக, கண்மூடித்தனமாக ஒரு கொள்கை, தரப்பு அல்லது நம்பிக்கையை ஆதரிப்போரை chauvinist என இந்த எதிர்ப்பாளர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். பிறகு இந்த சொல் பின்னர் பிரசித்தமாக நாம் மெல்ல நிக்கலஸ் செளவினை மறந்து விட்டோம். 
நடாஷா: சுவாரஸ்யமான மனிதர். 
புரொபஸர்: இனி அடுத்த கேள்விக்கு வருகிறேன். Put in papers and put down papers இண்டும் ஒரே அர்த்தம் கொண்ட idioms. ஆனால் அவற்றுக்கு இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com